பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, March 12, 2020

நீர்கொழும்பு ஹோட்டலில் நடந்தது என்ன ? - எம். இஸட். ஷாஜஹான்


 (13-3-2020   திகதி விடிவெள்ளி பத்திரிகையில் நான் எழுதிய இந்தக் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. நன்றி  - விடிவெள்ளி) 


  
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாரிகளின்  மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நகரங்களில் நீர்கொழும்பு பிரதானமானதாகும். நீர்கொழும்பு கட்டுவபிட்டியவில் அமைந்துள்ள தேவாலயத்தின் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.  இதன்காரணமாக பல  அப்பாவி உயிர்கள் பலியாயின. பலர் படுகாயங்களுக்கு உள்ளாயினர். புலர் தமது உறவுகளை இழந்தனர்.
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில்; உள்ள ஏனைய முஸ்லிம்களைப் போன்று  நீர்கொழும்பு வாழ் முஸ்லிம்களும் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டனர்.


முஸ்லிம்களின் வீடுகள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டன. பலரது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. முஸ்லிம்கள் சிலர்  தாக்கப்பட்டனர். பெரியமுல்லை பிரதேசத்தில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு வீடுகளையும் கடைகளையும் வாடகைக்கு வழங்கியவர்கள் பலர் அதனை திருப்பிப் பெற்றுக் கொண்டனர். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு வருவதை பெரும்பான்மையின மக்கள் தவிர்த்தனர்.  சிங்கள மொழி பாடசாலைகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சில மாணவர்கள் அந்த பாடசாலைகளிலிருந்து விலகி வேறு பாடசாலைகளில் சேர்ந்தனர்.  அல்லது சேர வேண்டிய நிலை எற்பட்டது.  தமது பிரதேசங்களில் முஸ்லிம்களோடு நல்லுறவைப் பேணி வந்த  அயலவர்கள் பலர் முகத்தை திருப்பிக் கொண்டனர். முஸ்லிம்கள்  சந்தேகத்தோடு பார்க்கப்பட்டனர். இவை சில உதாரணங்கள் மட்டுமேயாகும்.

பெரியமுல்லை உணவகங்கள்


 கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் பெரியமுல்லை பிரதேசத்தில் உள்ள பகல் - இரவு உணவகங்கள் பிரசித்தமானவை. இவைகளில் அநேகமானவை முஸ்லிம்களால் நடத்தப்படுபவை. வடக்கிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பிரயாணிகளை ஏற்றி வரும் பஸ்கள் மட்டுமன்றி கொழும்பு திசையை நோக்கி தூர இடங்களிலிருந்து பயணிக்கின்ற பெரும்பாலான வாகனங்கள் இங்குள்ள உணவகங்களின் முன்பாக தரித்து நிற்கின்றன.  இன மத பேதமின்றி இங்குள்ள உணவகங்களுக்கு பொது மக்கள் வருவதை காண முடியும்.


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின்  பின்னர்; இங்குள்ள ஹோட்டல்களுக்கு பெரும்பான்மையின மக்கள் வருவதை தவிர்த்தனர். தூர இடங்களிலிருந்து வருகின்ற வாகனங்கள் இங்குள்ள உணவகங்களுக்கு வருவதை தவிர்த்தன. உணவகங்கள் வெறுச்சோடி போயின. சில மாத காலம்; இந்த நிலை தொடர்ந்தது. இங்குள்ள பிரசித்தமான  உணவகங்களில் ஒன்றுதான்   இந்த போயா தினத்தில் (9) தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற அன்சார் ஹோட்டலாகும்.

பேரிடியாக நடந்த சம்பவம்




உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின்  பின்னர்; மாதங்கள் சில உருண்டோடின. நிலைமை மெது மெதுவாக மாறி சுமுக நிலை ஏற்பட்டு வரும்போது பேரிடியாக வந்தது பெரியமுல்லையில் உள்ள அன்சார் ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமாகும்.
இந்தச் சம்பவம்  9-3-2020 அன்று திங்கட்கிழமை (9)  இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.
 அன்றைய தினமும் வழமைப்போன்று அன்சார் ஹோட்டல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
குறித்த உணவகத்திற்கு வேன் ஒன்றில் அறுவர் அடங்கிய குழுவினர் வந்தனர்;. அவர்கள் அங்கு மது அருந்த முற்பட்டுள்ளனர்.  ஹோட்டலின் பணியாளர்களும்  உரிமையாளரும் இதனை தடுத்துள்ளனர். இதன்காரணமாக ஆத்திரமடைந்த அந்த கும்;பல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக ஒரு உயிர்  அநியாயமாக பலியானது. மூவர் படுகாயமடைந்தனர்.

'இது எமது நாடு. நாங்கள் ஏன் மது அருந்த முடியாது? '
 ஹோட்டல் ஊழியர்களிடம் கும்பலின் கேள்வி

ஹோட்டலில்  பணியாற்றும் ஊழியர் ஒருவர்  நடந்த சம்பவம் தொடர்பாக எம்மிடம் விவரித்தார்.
' வேன் ஒன்றில் ஆறு பேர் வந்தனர். அவர்கள்  உணவகத்தின் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தவாறு தாங்கள் கொண்டு வந்த  பியர் மதுபான போத்தல்களை எடுத்து மது அருந்த முற்பட்டனர். 'நாங்கள் மதுபானம் இங்கே அருந்த முடியாது' என்று கூறினோம். 'இது எமது நாடு. நாங்கள்; ஏன் மது அருந்த முடியாது? ' என்று கூறியவாறு அவர்களிடம் இருந்த கத்தியை காட்டி எங்களை அச்சுறுத்தினர். அவர்களிடம் இரண்டு கத்திகள் இருந்தன. நாங்கள் மது அருந்த முடியாது என்று உறுதியாக அவர்களிடம் கூறினோம்.  பின்னர் அவர்கள் எங்கள் மீது தாக்குதல் மேற்கொண்;டனர். ஜிப்ரி முதலாளியின் கழுத்தில் ஒருவன் கத்தியால் குத்தினான். ரிஸ்வான் முதலாளியின் கைகளிலும் கத்திக்குத்து விழுந்தது. எனது கையிலும் கத்திக்குத்து தாக்குதலினால் காயம் ஏற்பட்டது. கடையில் வேலை செய்த அஸீஸ் என்பவர் அந்த கும்பலின் கத்திக்குத்து தாக்குதலினால்  படுகாயமடைந்த நிலையில் மௌத்தானார். விரைவில் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக கெக்கிராவையில் உள்ள அவரது வீட்டுக்கு பேக வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.'
இன்னொரு பணியாளர்  நடந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது,
 அவர்கள் எங்களைத் தாக்கினர். நாங்கள்  தற்பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கிய போது வாகனம் ஒன்றிலும் மோட்டார் சைக்கிளிலும் தப்பியோடினர்.  ஆனால் அவர்கள் வந்த WP –PA 2394 இலக்கம் உடைய வேனை கைவிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிவிதார்.

தீயென பரவிய தாக்குதல்  செய்தி
அன்சார் ஹோட்டலில் நடந்த தாக்குதல் சம்பவம் சில நிமிடங்களில் ஊரில் பரவியது. பின்னர் நாடெங்கும் பரவியது. தொடர்ந்து  சமூக ஊடகங்கள் வாயிலாக உலகெங்கும் பரவியது. பிரதேசவாசிகள் பலர் அங்கு ஒன்று கூடினர். ஆயினும் எந்தவித அசம்பாவிதங்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை.  அன்று நள்ளிரவை தாண்டியபோதும் நூற்றுக்கு மேற்பட்டோர்  விசாரணைகள் இடம்பெறுவதை வீதியில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.



பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இதேவேளை, நீர்கொழும்பு பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், விமானப் படையினர் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேல் மாகாண சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்,  நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்;சகர் சமன் சிகேரா,  நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர், மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் , விமானப்படை அதிகாரிகள் உட்பட பலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
 அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள சீசீரிவி கமராக்களில் தாக்குதல் சம்பவம் பதிவாகியள்ள காட்சிகளை பொலிஸார் பார்வையிட்டனர்.

அநியாயமாக பலியான உயிர்


இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக கெக்கிராவ, கனேவல்பொலையைச் சேர்ந்த  33 வயதுடைய  அப்துல் கபூர் அப்துல் அஸீஸ் என்ற ஹோட்டல் பணியாளர் படுகொலை செய்யப்பட்டார். இவரது ஜனாசா நல்லடக்கம் செவ்வாய்க்கிழமை (10) இரவு  கெக்கிராவ கனேவல்பொலயில் இடம்பெற்றது.


தாக்குதல் சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர்களான ஜிப்ரி அவரது  மூத்த சகோதரரான ரிஸ்வான்  என்பவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் இருவரும் நீர்கொழும்ப மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  ஜிப்ரியின் கழுத்தில் ஏற்பட்ட கத்திக்குத்துக்  காயம் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கையில் காயமடைந்த மற்றொரு பணியாளரான இளைஞர்   சம்பவம் இடம்பெற்ற அடுத்த நாள் வீடு திரும்பினார்.

ஏழு சந்தேக நபர்கள் கைது

 இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முஸ்லிம்  நபர்; நீர்கொழும்பு பெரியமுல்லையில் வைத்து செவ்வாய்க்கிழமை  (10) கைது செய்யப்பட்டார். தாஜுன் அப்ஜான்  என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.  அவரை அன்றைய தினம்    நீர்கொழும்ப பொலிஸார் மன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து அன்றைய தினமே (செவ்வாய்கிழமை)   சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள்; சட்டத்தரணியூடாக   பொலிஸில் சரணடைந்தனர்.  பின்னர் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
 கட்டுவெல்லேகம, தொட்டில்லாகவத்த பிரதேசத்தைச் சேர்ந்த  ரொசான் விமுக்திபால, கட்டுவெல்லேகமயைச் சேர்ந்த வெதகே கயான் சித்ரானந்த சில்வா, கிம்புலாபிட்டிய இத்தகொடல்ல வீதியைச் சேர்ந்த பத்திரண டொன் ரொசான் சுரங்க, கிம்புலாபிட்டிய, ஆடியம்பலம பிரதேசத்தைச் சேர்ந்த  மதுரப்புலிகே சம்பத் நிரோசன், கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு வீதியைச் சேர்ந்த மிலான் சந்தன செனரத் தசநாயக்க,  கிம்புலாபிட்டிய, பொல்கலவத்தையைச் சேர்ந்த நுவன் நிசாந்த பீட்டர்ஸ் ஆகியோரே சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களாவர்.

சந்தேக நபர்களுக்கு 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்
சந்தேக நபர்கள் அறுவரையம்  பொலிஸார்  புதன்கிழமை  (11)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். சந்தேக நபர்களை  24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான்  திருமதி ரஜீந்ரா ஜயசூரிய உத்தரவிட்டார். அன்றைய தினம் சரணடைந்த ஆறு சந்தேக நபர்களையும் அடையாள வகுப்பிற்கு உட்படுத்தவும் பிரதான நீதவான்  உத்தரவிட்டார்.
சம்பவம் இடம்பெற்ற உணவகத்தின் (அன்சார் ஹோட்டல்) பணியாளர்களிடமும், சம்பவம் இடம்பெற்றபோது  அங்கு இருந்தவர்களிடமும் வாக்குமூலம் எடுக்க வேண்டியுள்ளதாக பொலிஸார் மன்றில் அறிவித்தனர்.
நான்கு மோட்டார் சைக்கிள்கள், ஒரு வேன், இரண்டு  செல்லி;டத் தொலைபேசிகள், ரம்போ கத்தி ஒன்று, தலைக்கவசம் ஒன்று (ஹெல்மட்), மூன்று வெற்று பியர் போத்தல்கள் , ஒரு தொகை பணம் என்பன வழக்கின் தடயப் பொருட்களாக சமர்ப்பிக்கவுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட  ஹோட்டல் பணியாளரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால்  மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இரவு வேளைகளில் குடித்துவிட்டு சுற்றித்திரியும் கும்பல் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இரவு வேளைகளில் சுற்றித்திரியும் போது பிரச்சினைகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக வைத்துள்ள ஆயுதமே கத்தியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கேள்விகள் பல?
சந்தேக நபர்கள் ஏன் போயாதினத்தில் முஸ்லிம் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து பலவந்தமாக மது அருந்த முற்பட்டனர்? அவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களை அங்கு ஏன் எடுத்து வந்தனர்? கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் ஏன் துணிந்தனர்? அவர்கள் அரசியல்வாதிகளின் கையாட்களா? என்பன போன்ற கேள்விகள் இந்த சம்பவத்தின் பின்னர் எழும்பியுள்ளன.
நாட்டில் அமைத்தி ஏற்பட வேண்டும்,  இனங்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் பிரார்த்தனையாகும்.
இதுபோன்ற ரவுடிக் கும்பலின் செயற்பாடுகளினால் அப்பாவிகளின் உயிர்கள் பலியாவதை தடுப்பதும், இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதை தடுப்பதும், இதுபோன்ற கும்பல்களை ஒடுக்குவதும் அரசாங்கத்தினதும் சட்டத்தையும் நீதியையும் நிலை நிறுத்த வேண்டியவர்களினதும் பொறுப்பும் கடைமையுமாகும்.

நீதி நலைநாட்டப்படுமா?
இசசம்பவத்தில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட ஹோட்டல் பணியாளர் அப்துல் அஸீஸிற்கும் அவரது குடும்பத்திற்கும் நீதி நிலைநாட்டப்ட வேண்டும். போயா தினமொன்றில் சட்டத்தையும் சமூக ஒழுங்கையும் மீறி மதுபோதையில் ரவுடித்தனம் புரிந்த இக்கும்பலுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மிகத் தெளிவான சிசிரிவி ஆதாரங்கள் இருக்கின்ற நிலையில்  அவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் துரிதப்படுத்தி  விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் இவர்கள் அத்தனை பேரிடமிருந்தும்  நஷ்டயீடு பெறப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இதற்;கப்பால் இவ்வாறு குடித்துக் கும்மாளமிட்டுத் தரியும்  இனவாதக் கும்பல்களைக் கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுக்கவும் அரசாங்கமம் பொலிஸாரும் முன்வரவேண்டும்.






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்