பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, February 19, 2012

நடிகை எஸ்.என்.லட்சுமி காலமானார்


பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார். அவருக்கு வயது 80 . உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று நள்ளிரவில் காலமானார்.


திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது..

இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.


500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லட்சுமி, பின்னாளில் சிறந்த குணசித்திர நடிகையாகப் பரிணமித்தார். பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக விருமாண்டி, மகாநதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பைப் பாராட்டாதவர் இருக்க முடியாது.

சர்வர் சுந்தரம் படத்தில் கண்டிப்பான கதாபாத்திரத்தில் அவர் தோன்றும் காட்சிகள் படத்துக்கு வலுவூட்டின. தேனும் பாலும் படத்தில் சரோஜா தேவிக்கு தாயாக, மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் ஊர்வசியின் பாட்டியாக, மகாநதியில் கமலின் மாமியாராக, தேவர் மகன் படத்தில் கிளைமாக்ஸில் வரும் காட்சிகளில் என அவருடைய நடிப்புலக பயணம் மிக நீண்டது.

நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ளார். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள், கே.பாலசந்தரின் ராஹினி கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நாடக கம்பெனிகளில் நடித்து மெருகேறியவர்.

திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். விழா நேரங்களில் வலியச் சென்று பலருக்கு உதவிகள் புரிந்தவர்.
இவர் நடித்த தொடர் நாடகமான “தென்றல்” நாடகம் இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்கிக் கொண்டிருக்கிறது. அதில் இவரது நடிப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது.   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்