பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, July 1, 2012

தொற்றல் அல்லாத நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்


     - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஆரோக்கியம் ஒரு சிறந்த செல்வமாகும். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நோய் நொடிகளுடன் வாழ்ந்தால் எம்மிடமுள்ள செல்வத்தை கூட சரியாக அனுபவிக்க முடியாமல் போய் விடலாம்.


நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனையோ வசதி படைத்தவர்கள் தமது விருப்பம்  போல் உணவு வகைகளை உண்ண முடியாமல் வாயையும் வயிற்றையும் கட்டி வைத்திருக்கிறார்கள். பத்தியம் காக்கிறார்கள்.

நோய் மனிதனை துரத்தும் பேய். அந்த பேயிடமிருந்து எங்களை காத்துக் கொள்ள உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

எமது நாட்டு மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் நோய்களின் பக்கம் இட்டுச் செல்வதாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் மக்கள் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நோய்களை தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என பிரதானமாக இரு வகைகளாக பிரிக்கலாம்.

இலங்கை மக்கள் தொற்றா நோய்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலமாக தெரிய வந்துள்ளன.

நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களில் 85 சதவீதத்தினர் தொற்று அல்லாத நோய்களினாலேயே பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தொற்றா நோய் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 350 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொற்றா நோயான மாரடைப்பு காரணமாக நாளொன்றுக்கு 150 பேரும் பக்கவாதம் காரணமாக நாளொன்றுக்கு 40 தொடக்கம் 50 பேர் வரையிலும் மரணிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய் ஆகியவற்றின் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 150 பேர் வரையில் மரணிக்கின்றனர் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



இலங்கையின் நாளொன்றுக்கு 950 தொடக்கம் ஆயிரம் பேர் வரையில் மரணிக்கின்றனர். இவற்றுள் 350 மரணங்கள் (37 சதவீதம்) தொற்றா நோய்கள் காரணமாகவே இடம்பெறுகின்றன என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ள விடயம் தொற்று அல்லாத நோய்களினால் எமது நாட்டு மக்கள் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நன்கு புலப்படுத்துகிறது.

தொற்று நோய்கள் என்றால் என்ன?

மருத்துவ சோதனையில் ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பற்றீரியா, பங்கசு, புரோஸ்டோ மற்றும்  ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்கள் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அந்நோய் தொற்று நோய் எனப்படுகிறது.

இந் நோய் காரணிகள் விலங்குகளிலும் தாவரங்களிலும் நோய்களை ஏற்படுத்தலாம். ஒருவரில் இருந்து மற்றும் ஒருவருக்கு தொற்றக்  கூடியது தொற்று நோய் என அழைக்கப்படுகிறது.

மலேரியா, பெரியம்மை, கொப்பளிப்பான், சின்னமுத்து, பிடிசுரம், தடிமன், டெங்குக் காய்ச்சல், கண் நோய், மூளைக் காய்ச்சல், விசர் நாய்க்கடி, மஞ்சள் காமாலை, எயிட்ஸ், போலியோ, நெருப்புக் காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றுளைவு, சிபிலிஸ், கொனேரியா, தேமல், சொறி சிரங்கு போன்றன தொற்றல் நோய்களுக்கு சில உதாரணங்களாகும்.

தொற்றா நோய்கள் (தொற்றல் அல்லாத நோய்கள்)

இதய நோய்கள்,புற்று நோய்கள், நீரிழிவு, குருதி அமுக்க நோய், பாரிசவாதம், ஒவ்வாமை, மன நோய், காக்கை வலிப்பு என்பன தொற்றல் அல்லாத நோய்களுக்கு சில உதாரணங்களாகும்.

இலங்கையில் தொற்று அல்லாத நோய்களினால் மரணிப்பவர்களில் 40 சதவீதத்தினர் 65 வயதுக்கும் குறைவானவர்கள் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மக்களிடையே உணவுப் பழக்க வழக்கங்கள் சீன உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் மதுபாவனை புகைத்தல், பொருட் பாவனை என்பன தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களுக்கு பிரதான காரணங்களாக உள்ளன என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றல் அல்லாத நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?












1) குறைந்தது வருடத்திற்கு ஒரு தடவையாவது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளல்.

2) சிறந்த வாழ்க்கை முறையை பேணல்

3) சரியான உணவுப் பழக்க வழக்கங்கள்

4) தொடர்ச்சியான உடற்பயிற்சி

5) போதியளவு உறக்கமும் ஓய்வும் பொழுது போக்கும்

6) மதுபானம், புகைப்பிடித்தல், போதைவஸ்து பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடல்

7) உடல் உள ஆரோக்கியம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துதல்.

-         - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்