பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, May 19, 2012

வானொலிக் குயிலுக்கு கலாநெஞ்சனின் கவிதாஞ்சலி



கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்
                     

(தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் காலஞ்சென்ற இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா 13..05.2012  அன்று  கொழும்பு, வெள்ளவத்தை தமிழ்  சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் நான் வாசித்த கவிதை இது.)


வானலை வீதியிலே
கொடிகட்டிப் பறந்த
எங்கள்
வானொலிக் குயிலின்
குரலுக்கு ஓய்வா?

•            
ஓ.... ராஜேஸ்வரி சண்முகம் (அம்மா)!
நீங்கள்
தேனில் குரல் நனைத்து
சொற்களை கோர்த்து பேசும் போது
கவிதை மழையல்லவா
வானொலி வழியாய் பொழியும்!
செவி வழி புகுந்து இதயங்கள் நனையும்!

•            
சினிமா பாடலுக்கு
ஈரடிக் கவிதைபாடி
காற்றிலே உலவவிட்ட
கவிதாயினி நீங்கள்!
•            
வானொலியே வீடாய்
வீடே வானொலியாய்
இலங்கை வானொலி விருட்சத்தில்
கூடுகட்டி வாழ்ந்த
கலைக் குயில் நீங்கள்!

வானொலிப் பூங்காவில் தோகை விரித்தாடிய
கலை மயில் நீங்கள்!
•            
காந்தக் குரலால்
தேசத்தைக் கடந்து
புகழ் மணம் வீசிய
பூங்குயில் நீங்கள்!
கலை மணம் பரப்பிய
தமிழ் மகள் நீங்கள்!
•            

நீங்கள்
உங்கள் இல்லத்தில் இருந்த
பொழுதுகளை விட
வானொலி
கலையகத்தில் வாழ்ந்த
காலங்கள் அல்லவா அதிகம்?
•            


எல்லோரும்
காற்றை சுவாசிப்பார்கள்
வாழ்வதற்காக...!
நீங்கள்
காற்றிலே வாழ்ந்தீர்கள்
நேயர்கள் சுவாசிப்பதற்காக...!
•            
பல்துறை ஆற்றலால்
வானொலி வரலாற்றில்
முத்திரைப் பதித்த
சாதனைப் பெண் நீங்கள்!
•            

இலங்கை வானொலியை
தாய் வீடு என்பர்.
அந்த தாய் வீட்டின்
தலை மகள் நீங்கள்!
கலை மகள் நீங்கள்!
•            
பொங்கும் பூம்புனல்,
பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி,
இசையும் கதையும்,
நீங்கள் கேட்டவை,
நேயர் விருப்பம்,
இரவின் மடியில்,
ஒலி மஞ்சரி
இவை எல்லாம்
உங்கள் கலைப் பசிக்குத் தீனி!
அதை தொகுத்தளிப்பதில்
நீங்கள் ஞானி!
ஈரடிக் கவிதை பாடி
பாடல் தருவது
அது உங்கள் பாணி!
•            

பேர் கேட்ட அனைவரையும்
நீராட்ட வரும்
பொங்கும் பூம்புனல்!
அந்தக் காலை நேரத் தென்றல்....
உங்கள்
அமுதக் குரலில்
இதமாய் வீசும்!
ஈரடிக் கவிதை
பாடலுக்கு சாமரம் வீசும்!
•            


வானொலிக் கலையகத்தில்
உங்களோடு
நான் பணிபுரிந்தது- அது
வசந்த காலம்!
•            

நிகழ்ச்சி நிறைவுறும் போது
'ஒலிபரப்பில் உதவியவர்
ஷாஜஹான் ' என்று அன்று
உங்களது உதடுகள்
எனது பெயரை உச்சரித்திருப்பது
எனக்கு மட்டுமல்ல
எனது பெற்றோருக்கும் பெருமை!
•            
இசையும் கதையும் - என்னை
எழுதச் செய்து
தட்டிக் கொடுத்த
தாய் நீங்கள்!
•            

கவியரசு வைரமுத்து
'வானொலிக் குயில்' என்றார்
உங்களை !
நடிகர் திலகம்
'நான் உங்கள் ரசிகர்' என்றார்
உங்களை!
•            


இலங்கை வானொலி அரண்மனையில்
நீங்கள்தான் ராணி!
சகல துறை ராணி!

ராஜாக்களுக்குக்கூட அங்கு
போட்டியுண்டு!
உங்களுக்குப் போட்டி ஒருவர்தான்!
அது ராஜேஸ்வரி சண்முகம்!

நீங்கள் அறிவிப்பாளர்களில் ராணி!
ராணித் தேனீ !!
•            

காலன் உங்களை
அழைத்துச் சென்றாலும்
காற்றுள்ள வரையில்
உங்கள்
புகழ் வாழும்!
காலமெல்லாம் உங்கள்
புகழ் ஓங்கும்!

உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல
இறைவனை இறைஞ்சுகிறேன்!

கவியாக்கம் :- - கலாநெஞ்சன் ஷாஜஹான்






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்