பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, March 15, 2015

நீர்கொழும்பில் இடம்பெற்ற 'நெய்தல்' நூல் வெளியீட்டு விழா

                        
நீர்கொழும்பு  விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி  பழையமாணவர்   மன்றத்தின்    ஏற்பாட்டில்  அண்மையில் (28-2-2015) கல்லூரி மண்டபத்தில்     நெய்தல்  நூல்  வெளியீட்டு  விழா  நடைபெற்றது.
1954  ஆம்  ஆண்டு தொடங்கப்பட்ட  கல்லூரியின்  வைரவிழாவை        முன்னிட்டு    கல்லூரியின்   முதல்   மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான     அவுஸ்திரேலியாவில்     வதியும்  லெ.முருகபூபதி    தொகுத்த  நெய்தல்  நூலில்  கல்லூரியின் முன்னாள்    மாணவர்கள்,    அதிபர்கள்,   ஆசிரியர்கள்  எழுதிய கட்டுரைகள்,   சிறுகதைகள்,   கவிதைகள்ஆய்வுகள்  இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலியா,   கனடா,   பிரான்ஸ்,   ஜெர்மனி,   இங்கிலாந்துதுபாய், சிங்கப்பூர் இலங்கையிலிருந்தும்  பலர்  இந்நூலில்  எழுதியுள்ளனர். நூல்  வெளியீட்டு  அரங்கிற்கு    நீர்கொழும்பு   மாநகர சபை உறுப்பினரும் பழைய    மாணவர்  மன்றத்தலைவருமான   சதிஸ் மோகன்    தலைமைதாங்கினார்.


கல்லூரி   முன்றலில்  அமைந்த  ஸ்தாபகர்  அமரர் எஸ்.கே. விஜயரத்தினம்    அவர்களின்    உருவச்சிலைக்கு  கல்லூரி  அதிபர் திரு. புவனேஸ்வரராஜா    மாலை   அணிவித்தார். கல்லூரியின்  வரலாற்றையும்  நீர்கொழும்பு  மாநகரையும் ஆவணப்படுத்தும்   காட்சியகத்தை  மூத்த  எழுத்தாளர்     திரு. தெளிவத்தை  ஜோசப்  நாடா   வெட்டி  திறந்துவைத்தார். இக்காட்சியகத்தில்  நீர்கொழும்பு    பிரதேசத்தில்   வெளியான   இதழ்கள்    மலர்கள்  மற்றும்  படைப்பாளிகளின்  நூல்களும் இடம்பெற்றன.    கல்லூரியின்  வளர்ச்சிக்கு  தொண்டாற்றிய  பலரதும் உருவப்படங்களும்   காட்சிக்கு   வைக்கப்பட்டிருந்தன.


 பிரதம    அதிதிகள்   மங்கள  விளக்கேற்றி  விழா   நிகழ்ச்சிகளை தொடக்கிவைத்தனர்.     இலங்கையில்  நீடித்த  போரில்  உயிரிழந்த மக்களின்    ஆத்ம சாந்திக்காக   மௌன   அஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது.    நீர்கொழும்பின்  மூத்த  எழுத்தாளர்  அமரர் நீர்கொழும்பூர்   முத்துலிங்கத்தின்  புதல்வர்  திரு. ஜெயகாந்தன்  வரவேற்புரை  நிகழ்த்தினர்.   .
நடன  ஆசிரியை  திருமதி  செல்வினின்  மாணவிகளின்  வரவேற்பு நடனமும்    செல்வி   ஆரபி  ஜெயகாந்தனின்  புல்லாங்குழல் இசைப்பாடலும்    இடம்பெற்றது அரங்கின்   தலைவர்  திரு. சதீஸ்மோகனின் தலைமையுரையைத்தொடர்ந்து    திருமதி  திலகமணி     தில்லைநாதன் (முன்னாள்   ஆசிரியர்)   திரு. நா. புவனேஸ்வரராஜா. (தற்போதைய  அதிபர்)    திரு. நடராஜா   (முன்னாள்   அதிபர்) ஆகியோர்    வாழ்த்துரை   நிகழ்த்தினர்.
பிரதம  அதிதியாக  கலந்துகொண்ட  தினக்குரல்  பத்திரிகையின் பிரதம   ஆசிரியர்  திரு. வீ. தனபாலசிங்கம்   தமதுரையில்  -   மாணவர்களிடம்  வாசிப்பு   பழக்கத்தை  ஊக்குவிக்கவேண்டும்  எனவும்   கல்லூரியின்  முன்னாள்  மாணவர்களில்    பலர் எழுத்தாளர்களாகவும்    ஊடகவியலாளர்களாகவும்  இருப்பதை பதிவுசெய்துள்ளது    நெய்தல்   தொகுப்பு    எனவும் -  நீர்கொழும்பு எப்படி    இருக்கிறது...? என்பதை    வரலாற்றுக்கண்ணோட்டத்துடன்  ஏனைய  பிரதேச  வாசிகளுக்கு  காண்பிப்பதற்கு  இந்த  அரங்கும் ஆவணக்காட்சியகமும்   வழிவகை    செய்துள்ளது  என்றும் -    கலங்கரை    விளக்கமாகத்திகழும்    கல்லூரிகளின்  தோற்றமும் வளர்ச்சியும்    பதிவாகும்   வேளையில்மூலவிசையாக திகழ்ந்தவர்களின்    வாழ்வும்  பணிகளும்  ஆவணமாகிவிடும் என்பதற்கு    ஆதாரமாகத்திகழ்கிறது   நெய்தல்  நூல்    என்றும் தெரிவித்தார்.
'அந்த    நாள்   மாணவர்கள்  எப்படி  பழைய   மாணவர்களாக  இப்படி ஒரு  தொகுப்பினை    வழங்கியிருக்கிறார்களோ... அதேபோன்று இந்நாள்    மாணவர்களும்  வருங்காலத்தில்  கல்லூரியுடன் தொடர்புகளை    தொடர்ந்து  பேணிக்கொண்டு   மற்றுமொரு  ஆவண இலக்கியத்தொகுப்பினை     வழங்கவேண்டும் என்றும்   அவர்  வலியுறுத்தினார்.





வீரகேசரி   குழுமத்திலிருந்து    வெளியாகும்  கலைக்கேசரி  மாத இதழின்  ஆசிரியை   திருமதி   அன்னலட்சுமி  இராஜதுரை    நெய்தல் நூலில்    இடம்பெற்ற  நினைவுப்பகிர்வு  பதிவுகள்  தொடர்பான நயப்புரையை    நிகழ்த்தினார்.
இந்து    சமய  கலாசார  அலுவல்கள்  திணைக்களத்தின்   அலுவலரும் ஆய்வாளருமான     திருமதி   தேவகுமாரி  ஹரன் -  நூலில் இடம்பெற்றிருந்த  கட்டுரைகள்  தொடர்பாக  தமது  கருத்துக்களை தெரிவித்தார்.
 மூத்த    படைப்பாளி  தெளிவத்தை   ஜோசப் -  சிறுகதைகள்    குறித்த நயப்புரையை   வழங்கினார்.    கவிஞர்  மேமன்கவி   நெய்தலில் இடம்பெற்ற   கவிதைகள் -  கவிதை  சார்ந்த   கட்டுரை  தொடர்பாக கருத்து   தெரிவிக்கையில், '  மாணவர்களுக்கும்    இலக்கியத்திற்கும் இடையே   தோன்றவேண்டிய  உறவுபற்றியும் குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு  இலக்கிய  வட்டத்தின்  முன்னாள்  தலைவரும்  மூத்த படைப்பாளியுமான   ஜனாப்  மு.  பஷீர்    தமது  வாழ்த்துரையில்' நீண்டகாலத்திற்கு   முன்பே   நீர்கொழும்பும்  அதனைச்சுற்றியிருக்கும் பிரதேசங்களும்   கலை  இலக்கிய  மறுமலர்ச்சியை  பதிவு செய்யும் நூல்கள்    இதழ்கள்    மற்றும்  சிறப்பு  மலர்களை    வெளியிட்டுள்ளன. அவற்றையெல்லாம்    ஓரிடத்தில்  இத்தனை    ஆண்டுகளுக்குப்பின்னர் நேரில்     பார்ப்பதற்கு  கிடைத்துள்ள  அரிய சந்தர்ப்பமாக ஆவணக்காட்சியகம்    அமைந்திருந்தது எனத்தெரிவித்தார்.
கனடாவிலிருந்து    வருகை  தந்திருந்த  பழைய  மாணவரும் கவிஞருமான     நீர்கொழும்பு  ந. தருமலிங்கம்  கல்லூரியின்    வசந்த கால    நினைவுகளை    இரைமீட்டி  கவிதையில்  வாழ்த்துப்பா பாடினார்.
 நெய்தல்  நூலை  தொகுத்திருந்த  படைப்பிலக்கியவாதியும் கல்லூரியின்    முதல்  மாணவருமான  மூத்த  எழுத்தாளர்   திரு. லெ. முருகபூபதி,   நெய்தல்  நூலை வெளியிட்டதன்   நோக்கத்தை     குறிப்பிட்டதுடன்,    இதுபோன்ற பணிகள்    அஞ்சலோட்டத்திற்கு  ஒப்பானது  என்றும்  கடந்து  சென்ற அறுபது    ஆண்டு காலத்தை    முடிந்த  வரையில்  நெய்தலில் பதிவுசெய்திருப்பதுபோன்று    தற்போதைய  மாணவர்கள் எதிர்காலத்தில்    கல்லூரியின்  நூற்றாண்டு  காலத்தில்  மற்றுமொரு புதிய    ஆவண  நூலை   வெளியிட  வேண்டும்   என்றும்  தெரிவித்தார்.

ஆறு  மாணவர்களுக்கு  புலமைப்பரிசில்

இந்த   அரங்கின்  இறுதி  நிகழ்ச்சியாக  கல்லூரியில்  பயிலும்  ஆறு மாணவர்களுக்கு    புலமைப்பரிசில்  வழங்கப்பட்டது.    ஏற்கனவே அவுஸ்திரேலியாவிலிருந்து     இயங்கும்  இலங்கை    மாணவர்  கல்வி    நிதியத்தின்    புலமைப்பரிசில்  பெற்று  பல்கலைக்கழகம் பிரவேசித்த   சில  மாணவிகள்  தற்பொழுது  ஆசிரியர்களாகவும்  அரசு    ஊழியர்களாகவும்  பணியிலிருக்கின்றனர்.
இவர்களில்    செல்வி  பாமினி   செல்லத்துரை  என்பவர்   நுவரேலியா மாவட்டத்தில்   உதவிக்  கல்விப்பணிப்பாளர்  நியமனம்  பெற்றுள்ளார். அவர்    இந்த  மகிழ்ச்சியான  செய்தியை    நெய்தல்  நூல்   வெளியீட்டு அரங்கில்   மேடையில்  தோன்றி  வெளியிட்டதுடன்  தனது வாழ்க்கை    ஏனைய  மாணவர்களுக்கும்  முன்னுதாரணமாக இருக்கவேண்டும்    என்றும்  குறிப்பிட்டார்.


மற்றுமொருவரான    செல்வி வி. லோஜினி    தற்பொழுது விஜயரத்தினம்    இந்து  மத்திய  கல்லூரியிலேயே   பட்டதாரி  ஆசிரிய நியமனம்   பெற்றுள்ளார்.    இவர்  நெய்தல்  அரங்கின் ஆவணக்காட்சியகத்தின்  பூர்வாங்கப்பணிகளில்  ஈடுபட்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது. நெய்தல்    அரங்கில்  மேலும்  ஆறு  மாணவர்களுக்கான புலமைப்பரிசில்    நிதிக்கொடுப்பனவுகளும்    வழங்கப்பட்டன.



அரங்கின்    இறுதியில்  பழைய  மாணவர்  மன்றத்தின்  செயலாளர் திரு. ஆர் அரவிந்தன்    நன்றியுரை     நிகழ்த்தினார்.   அவர்    தமதுரையில்    நெய்தல்    வெளியீட்டு  அரங்கு  குழுவினருக்கும் நலன்விரும்பிகளுக்கும்    பாராட்டுத்தெரிவித்தார்.
கல்லூரியின்    பழைய  மாணவரும்  இந்நாள்  ஆசிரியருமான  திரு. சுதாகரன்     நிகழ்ச்சிகளை  தொகுத்து  அறிவித்தார்
நெய்தல்    நூலின்   முகப்பு  அட்டையை     முன்னாள்  மாணவர்  திரு.  சுஜித்  நிர்மல் காளிதாஸ்  வடிவமைத்துள்ளார்.
நீர்கொழும்பு   இலக்கிய  வட்டத்தின்  வெளியீடாக  வந்துள்ள  நெய்தல் நூலை    இலங்கை   குமரன்  பதிப்பகம்  பதிப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்