உலகிற்கு
அருட்கொடையாக உதித்த உலகம் போற்றும் உத்தமத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது
ஜனன தினம் இன்றாகும்.
முஹம்மத் நபியவர்கள் மனித குலத்தில் மாபெரும்
புரட்சியை ஏற்படுத்தியவராவார். அவர்களின் வருகையே மனித குல மீட்சிககு
அடித்தாளமிட்டது.
அண்ணல் நபியவர்கள்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மட்டும் தூதராக அனுப்பப்படவில்லை. உலகில்
பிறக்கின்ற சகல மக்களுக்கும் நேர் வழிக்காட்டக் கூடிய தூதராக ஏக இறைவனால் அவர்கள்
அனுப்பப்பட்டார்கள்.மனிதப் பண்பாட்டையே உயர்த்திக் காட்டிய உத்தமர் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் என்பதை சரித்திரம்
புகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறது.
ரஸ்ய தத்துவ மேதை
டால்ஸ்டாய் என்பவர் மனிதனை எடைபோடும்
அளவுகோல் ஒன்றிருப்பின் அது முஹம்மது
(ஸல்) அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆன்
பின்வருமாறு கூறுகிறது
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக
இருக்கின்றீர் (அல்குர்ஆன் 68:4)
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பரிபூரண மனிதராக உலகில் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களது சொல், செயல்கள் யாவும் மனித வாழ்க்கைக்கு
வழிகாட்டிகளாகும். நபியவர்கள் தோன்றிய
அறியாமை எனும் இருள் சூழ்ந்த 'ஜாஹிலிய' காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலைமைகளையும்,
அந்தப் பின்னணியையும் அறிந்துகொள்வதன் மூலமாக நபியவர்கள்
அன்றைய சமுதாயத்தில் ஏற்படுத்திய மாபெரும் மாற்றத்தை அறிந்துகொள்ள
முடியும்.
அன்றைய அரேபிய நாடு
அன்றைய அரேபிய நாட்டில் மக்கள் காட்டு
மிராண்டிகளாகவும் சிலை வணக்கம் புரிபவர்களாகவும்,
இறைவனுக்கு இணை வைப்பவர்களாகவும்,
அறிவிலிகளாகவும் வாழ்ந்து வந்தனர். அதுபோல் மது அருந்துதல், சூதாடுதல், வழிப்பறிகளில் ஈடுபடல், போரில் கொடூரமான அநீதிகள் இழைத்தல், மக்களை அடிமைகளாக்கும் பழக்கம் போன்ற
தீய செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தனர்.
கோத்திரத்தினரிடையே
சண்டை சச்சரவுகள் தொடர்ந்து காணப்பட்டன.அரபு மக்களின் சில சமுதாயத்தினரிடையே பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பழக்கமும்
இருந்தது. அன்றைய அரபு மக்கள் தம்மைப் பெற்றெடுத்த தாயைத் தவிர மற்றத் தாய்களை
தாய்களாகக் கருதவில்லை. அவர்களைத் திருமணம் செய்வதில் தவறில்லை எனக் கருதி
மணமுடிப்பவர்களாக இருந்தனர். தமது தந்தை மரணமடைந்த பிறகு தமது மாற்றாந்
தாய்மார்களை திருமணம் செய்தனர். அன்று பலதார மணம் பொதுவானதாக இருந்தது. ஒருவர்
இத்தனை திருமணங்களைத்தான் செய்ய வேண்டுமென்ற வரையறை இருக்கவில்லை. அன்றைய அரபு
மக்கள் தமது நடத்தைகளைப் பொருத்தவரையில்
விநோதமான முரண்பட்ட ஒரு சமுதாயத்தினராக திகழ்ந்தார்கள். அவர்களிடம்
பயங்கரமான பாவங்கள் காணப்பட்டதைப் போன்று
சமுதாயத்தின் தரத்தை உயர்த்தக் கூடிய சில பண்புகளும் நடத்தைகளும்
அவர்களிடம் காணப்பட்டன.
வாக்குமாறாமை, மக்களுக்கு அபயம் அளிப்பது, வீரம்,
விருந்தோம்பல், மொழியின் நாகரிகம், அதன் சீர்த்திருத்தம் போன்றவற்றில் கவனம், கவிஞர்களுக்கு அதிக கௌரவம் வழங்குதல்
போன்றன அவற்றில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் பிறப்பு
அன்றைய 'ஜாஹிலிய' காலத்தில் மேற்கூறப்பட்ட
சூழ்நிலையிலேயே உலகத்திற்கு பேரருளாக நபிகள் பெருமானார் பிறந்தார்கள். நபியவர்களிடம்
சிறுவயதிலிருந்தே வாய்மையுடைமை, தீமையின்மை, தூய ஒழுக்கம், கண்ணிய உணர்ச்சி , கட்டுப்பாடான தன்மை, உதவி செய்யும் மனப்பான்மை, கடைமையுணர்வு, நம்பிக்கைக்கு மாறு செய்யாமை, இரக்க மனப்பான்மை, மனித நேயம் போன்ற இன்னோரன்ன அருங்குணங்கள் அளவற்றுக் காணப்பட்டன.
நபியவர்களின் வாலிப
பருவத்தில் அவர்களின் நேர்மையையும் அவர்கள் இறைவன் மீது கொண்டிருந்த அளவற்ற
பற்றையும் குறித்து மக்கள் எல்லோரும் பரவலாகப் பேசினார்கள். அண்ணலரை
சுட்டிக்காட்டி 'இதோ! நம்பிக்கைக்குரிய மனிதர் சென்று
கொண்டிருக்கிறார்கள்' என்று அவர்களை மக்கள்
பாராட்டினர்.
ஹிராக் குகையில் இறை
வணக்கம்
நகர மக்களின் தீமை
மிகுந்த செயல்கள், கேடு விளைவிக்கும் நடத்தைகள், விஸமத்தனங்கள் ஆகியவற்றால் கவலையடைந்த நபியவர்கள்? மக்காவிலிருந்து இரண்டு மூன்று
மைல்கள் தூரத்தில் உள்ள 'ஹிரா' குகையி;ல் சென்று இறைவணக்கம் செய்து வந்தார்கள்.
நபியவர்கள் தமது
நாற்பதாவது வயதில் 'ஹிராக் குகையில்
இறை வணக்கம் செய்து கொண்டிருக்கையி;ல், அவர்களுக்கு அல்குர்ஆனின் முதல் 'வஹி'
(இறை அறிவிப்பு) அருளப்பட்டது.. இவ்வேத வெளிப்பாட்டின் மூலம் நபி
(ஸல்) அவர்கள் இறைவனின் தூதரானார்கள்.
ஹிராக் குகையில்
வைத்து நபியவர்களுக்கு இறக்கப்பட்ட அந்த இறை அறிவிப்புக்குப் பிறகு நபியவர்கள்
அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அண்ணல் நபியவர்களின் முகத்தில்
பதற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டன.
'தங்களுக்கு என்ன நடந்தது? ஏன கதீஜா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
நடந்த நிகழ்ச்சி
முழுவதையும் மனைவியிடம் கூறிய நபியவர்கள்' என் போன்ற பலவீனமான மனிதனால் இச்சுமையை எவ்வாறு சுமக்க முடியும்? என்றார்கள்.
இதற்கு கதீஜா (ரலி)
அவர்கள் 'இறைவன் மீது ஆணையாக அவன் தங்களுக்கு
இவ்வசனங்களை அருளியதன் நோக்கம் தாங்கள்
தோல்வியுற்றவர்களாகவும், தங்களின் குறிக்கோள்களில்
தாங்கள் வெற்றிபெறாதவர்களாகவும் ஆகிவிட வேண்டு என்பதற்கன்று. மேலும் இறைவன் உங்களுடன்
இருப்பதை கைவிடுவதற்கும் அன்று. அவன் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டான்.
தாங்களோ உயர்ந்த
பண்புகளைப் பெற்றுத் திகழ்கின்றீர்கள். உறவினர்களுடன் இனிமையாக
நடந்துகொள்கின்றீர்கள். உதவியற்றவர்களின்
சுமையை சுமக்கின்றீர்கள். நாட்டிலிருந்து அழிந்துவிட்ட நற்பண்புகளெல்லாம் தங்களின்
மூலம் மீண்டும் நிலை நாட்டப்படுகின்றன. விருந்தோம்பல் செய்கின்றீர்கள். உண்மையான
துன்பத்திற்குள்ளான மக்களுக்கு உதவி செய்கிறீர்கள். இவ்வாறான உயர்ந்த
பண்புகளைக்கொண்ட மனிதனை இறைவன் சோதனைக்காளாக்கி விடுவானா? என்றார்கள்.(புகாரி)
பின்னர்
மிகச்சிலரைக் கொண்ட ஜமாஅத் ஒன்று உருவாயிற்று. அதன்மூலம் இஸ்லாத்தின் அடிப்படை
நாட்டப்பட்டது.
அண்ணல் நபியவர்கள்
அன்று நிலவிய சமூக, கலாசார சீரழிவுகளையும், மூட நம்பிக்கைகளையும், தீய பழக்க வழக்கங்களையும், அட்டூழியங்களையும் இறைவனின் உதவியோடு 23 ஆண்டுகளில் ஒழி;த்துக்கட்டினார்கள். நபித்துவத்தின்
பின்னர் அவர்கள் வாழ்ந்த 23 வருட கால வாழ்க்கையானது
முழு உலக மீட்சிக்கும் அடித்தாளமிட்டது.
நபியவர்களின் சமாதான விருப்பம்
ஒருமுறை அண்ணல்
நபியவர்கள் தமது தோழர்களைப் பார்த்து 'உங்களுக்கு தொழுகை, நோன்பு,
ஸக்காத் இவைகளைவிடவும் மேன்மையான நன்மைத் தரக் கூடிய காரியத்தை
அறியத்தரட்டுமா? அதுதான் உங்கள் இருவருக்கிடையில்
சமாதானம் செய்து வைத்தல்' என்று கூறினார்கள்.
அவுஸ், கஸ்ரத் கூட்டத்தாருக்கு இடையில்
பரம்பரையாக இருந்து வந்த குலச்சண்டையை நீக்கி இரு கூட்டத்தாருக்கும் மத்தியில்
சமாதானத்தை ஏற்படுத்தினார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்த முஹாஜிரீன்களுக்கும், மதீனாவாசிகளான
அன்சாரிகளுக்குமிடையில் இஸ்லாமிய
சகோதரத்துவப் பிணைப்பை ஏற்படுத்தினார்கள். அதேபோன்று மக்கா குறைசிகளுடன் செய்து
கொண்ட ஹுதைபியா உடன்படிக்கை சிறந்த
சமாதான உடன்படிக்கையாகப் போற்றப்படுகிறது.
இந்த உடன்படிக்கையை மக்கா குறைசியர்கள்
பின்னர் மீறினர். இதன் காரணமாக அவர்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டார்கள் பின்னர் குறைசியர்களுக்கு மன்னிப்பு
வழங்கியமை நபியவர்களின் உயர்ந்த பண்பையும் சமாதான விருப்பத்தையும்
எடுத்துக்காட்டுகிறது.
வள்ளல்
நபியவர்களின் சொல்லும் செயலும் குர்ஆனாகவே இருந்தது. ஒரு தடைவை ஆயிஸா (ரலி)
அவர்களிடம் ஒருவர் வந்து நபியவர்களின் பண்புகளை குறித்து கூறுமாறு கேட்டார்கள்.
அதற்கு ஆயிஸா (ரலி)
அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.
'
அவர்களின் பண்புகளைக் குறித்து கூறவேண்டுமா? திருக்குர்ஆனின் கட்டளைகளையே அவர்கள்
போதித்தார்கள். அதன் போதனைகளே அவர்களின் செயல்களாக விளங்கின. அதில் கூறப்பட்ட
கட்டளைகளுக்கேற்பவே நடந்து காட்டினார்கள்.
அவர்களின் ஒவ்வெரு செயலும் அல்குர்ஆனின் போதனையாய் விளங்கிற்று' என பதிலளித்தார்கள்.
எங்கள் கண்மணி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் நபியவர்களின் போதனைகளைப் பற்றியும் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நபியவர்கள் கூறியபடி, வாழ்ந்து காட்டியபடி நாங்கள் வாழ்கின்றோமா? ஏன்று ஒவ்வொருவரும் தன்னைத்தானே
கேட்டுப்பார்க்க வேண்டும்.
வள்ளல்
நபியவர்களுக்கு 'ஜனன தின விழா' கொண்டாடுவதோடு நின்றுவிடாது, அவர்கள் சொல்லிலும்; செயலிலும் காட்டியதை முழுமையாக
பின்பற்றி உண்மையான முஸ்லிமாக வாழ்வதற்கு
ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும்.
அனைவருக்கும்
சீரத்துந் நபி தின வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
நன்றி வீரகேசரி (24-12-2015’)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்