பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Saturday, August 18, 2012

சென்று வா இனிய ரமழானே!



புண்ணியம் பொழிந்த ரமழானே எமை(ப்)
   பிரிந்து நீயும் சென்றாயே
கண்ணியம் மிக்க நோன்பதனை - நீ
   கரங்களில் ஏந்தி வந்தாயே!
பண்ணிய பாவக் கறை யகற்றி - எமை(ப்)
   பக்குவப்படுத்திச் சென்றாயே
மண்ணகம் மீதில் அருள் சொரிந்து - பின்
   மறைந்தாய் ஏன் ரமழானே?

             --------------------    


 
வறியோர் பசிப் பிணியை யுணர்த்தி - நீ
   வாரி வழங்கும் உளம் கொடுத்தாய்
பொறுமை யென்னும் பொக்கிஷத்தை நீ
   பிரியமுடனே எமக்களித்தாய்
இரவின் இருட்டை விடிவாக்க நல்
   'அமல்கள்' என்னும் ஒளி கொடுத்தாய்
நரகத்தின் வாயிலை மூடி வைத்தாய் - உயர்
   சுவர்க்கத்தின் வாயிலை திறந்து வைத்தாய்

              --------------------    


புனித 'லைலத்துல் கத்ர்' இரவை - இறுதி(ப்)
   பத்தின் ஒற்றையில் ஒளித்து வைத்தாய்
புனித மறையாம் அல்குர்ஆன் - முதல்
   இறங்கிய மாதம் நீயானாய்
மனித நேய நற்குணங்கள் - எம்
   மனங்களில் ஓங்க வழி சமைத்தாய்
மனதை தூய்மை யாக்க வைத்தாய் - எம்
   மெய்யில் நலத்தை அதிகரித்தாய்!

               --------------------

ஆத்மீக உணவாய் நீ வந்தாய் - அருளின்
   இருப்பிடம் நீ யானாய்
சாத்வீகமாக எமக்குள்ளே தீமைகள்
   ஒழிக்க வழி சமைத்தாய்
ஆத்மீக உணவை அதிக முண்டோம் - பௌதீக
   உணவை குறைத்துக் கொண்டோம்
ஆத்மாவின் மதிப்பை உணர்ந்து கொண்டோம் - ஏக
   இறைவன் திருப்தியை பெற்றுக் கொண்டோம்


              --------------------


ரமழான் தலைப்பிறையில் உதித்தாய் - உயர்
   ரத்தின நாட்களை நீ விதைத்தாய்
அமல்களின் களத்தில் குதிக்க வைத்தாய் - எமை
   நன்மைகள் கோடி குவிக்க வைத்தாய்
அமைதியை மனதில் ஏவிவிட்டாய் - நல்
   இனிமையை குணத்தில் தூவி விட்;டாய்
இமைக்கும் பொழுதில் மறைந்து விட்டாய் - மீண்டும்
   எங்களை நாடி நீ வருவாய்!


-     கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்