பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Monday, September 3, 2012

நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும்


நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு
மத்திய நிலையம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் சகல பகுதிகளிலும், நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் உள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டுப்பாடின்றி உணவு உட்கொள்ளுதல், மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் செயல்படுவது ஆகியனவே, நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் எனவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.




புதிய கருத்துக் கணிப்புக்களுக்கு அமைய நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது , 30 வருடங்களுக்கு நீடிக்குமானால், இந்த நோயானது இரண்டு பேரில் ஒருவருக்கு என்ற கவலை தரும் நிலையை அடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது இலங்கை மக்களில் அரைவாசிப்பேருக்கு நீரிழிவுநோய் ஏற்படும் என்பதாகும்.

ஓய்வின்மை, மாப்பொருள் சீனியுடனான உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல், புதிய பழம் மற்றும் மரக்கறி வகைகளை உட்கொள்ளாமை, தேவையற்ற உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற முறைமைகள் காரணமாகவே இந்த நோய் அதிக அளவில் பரவுவதாக நீரிழிவு மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள் தமது பாதங்களை முகத்தைப் போன்று நன்கு பராமரிக்க வேண்டும், பாதுகாக்கவேண்டும் என கூறப்படுகிறது.
ஏனெனில், கால்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை சுகமாக்குவது மிகவும் கடினமாகும்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் பல நீரிழிவு நோயாளர்களுக்கு புண்கள் சுலபமாகக் குணமாகிவிடுகின்றன. ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக அக்கறையோடு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பலரின் புண்கள் மாதக்கணக்கில் மாறாது தொல்லை கொடுக்கன்றன.

இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதால் புண்கள் ஆறாதிருக்கும் நிலை உடனடியாக ஏற்படுவதில்லை. அது தொடர்ந்து அதிகரித்திருக்கும் போது, உடலில் படிப்படியாக தோன்றும் பல்வேறு பாதிப்புகளால்தான் புண்கள் ஆறாத நிலை ஏற்படுகிறது.


நீரிழிவு நோயின் பாதப் புண்களுக்குரிய காரணங்கள்



·         காலில் உணர்ச்சியற்று போதல் (நீரிழிவு நரம்பு அழற்ச்சி).
·         குருதிஓட்டம் வலுவிழத்தல்.
·         பாதத்தில் அங்கவீனமானநிலை.
·         உரோஞ்சுதல், அழுத்தம், காயம் போன்றவற்றால் பாதம் பாதிக்கப்படல்.
·         குருதியில் குளுக்கோசின் அளவு கூடுதல்.


நோயியல்



வருடக்கணக்காக குருதியில் குளுக்கோசின் மட்டம் கூடுதலாக காணப்பட்டால் நரம்புகள் பாதிப்புற்று கால்களில் முற்றாகவோ ஓரளவோ உணர்ச்சியற்று போகின்றது. நரம்பு பாதிப்புற்ற பின் கால்களில் நோ ஏற்படுவதை உணரமுடிவதில்லை.

நீரிழிவு நோயாளர்களில் கை கால்களுக்கு குருதி ஓட்டம் குறைவடைகிறது. இரத்த நாடிகளில் ஏற்படும் நோய் காரணமாக உடலில் குணமாகும் தன்மை பாதிப்படைந்து. கிருமித் தொற்று ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிப்பதனால், கால் புண்கள் மேலும் சிக்கலடைகின்றன. கால்களில் பாதணிகள் அடிக்கடி உரசுவதனால் ஏற்படும் அழுத்தத்தினாலும் தோலில் சிராய்ப்பு ஏற்பட்டு வரும் புண்கள் இலகுவில் மாறுவதில்லை.


குணங் குறிகள்

நோயாளியின் கால்கள் மரத்துப் போயிருந்தால் அல்லது காலில் குற்றுவது போன்றதோர் உணர்வு இருந்தால், இரவு நேரங்களில், நோவு, ஊசி குத்துதல் போன்ற உணர்ச்சிகள் ஏற்பட்டால்,தசைப்பிடிப்பு, பாதங்கள் குளிந்திருந்தால், அல்லது பாதங்கள் உணர்வு நிலையை இழந்திருந்தால் நோயாளியின் நரம்புகள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

சிக்கல்கள் அல்லது பாதிப்புக்கள்

·         தோல் அழற்சி : (தோல் மற்றும் மென் இழையங்கள் கிருமித் தொற்றுக் குள்ளாதல்).
·         எலும்பு அழற்சி (எலும்பில் கிருமித்தாக்கம்).
·         சீழ் (சீழ் பிடித்தல்).
·         விகாரமடைந்த பாதம் (எலும்பு மற்றும் மூட்டு என்பன சேதமுற்று விகாரமடைதல்).
·         சேதமுற்று இறந்த மென் இழையங்களைக் கொண்ட பாதம்.
·         காலை காப்பாற்ற முடியாதபோது பாதத்தை அல்லது காலை துண்டித்தல்.
·         கிருமித் தொற்றினால் குருதியினுள் கிருமிபெருகி நஞ்சாவதால் இறப்பு ஏற்படலாம்.

பராமரிப்பு

·         நீரிழிவு கிளினிக்கில் பயிற்சிபெற்ற மருத்துவரொருவரால் காலை பரிசோதித்துக் கொள்ளல்,.
·         பாதங்களைத் தினமும் பரிசோதிப்பது மிக முக்கியமாகும். கால்களில் வெடிப்புகள், காய்ப்புகள் சொறி, காயங்கள்,வெட்டுக்கள், தடிப்புகள், கொப்புளங்கள், நிறமாற்றங்கள் வீக்கங்கள், பாதம் அதிக சூடாக, குளிராக இருத்தல் ஆகியவற்றை கவனித்தல் மிக அவசியமாகும்.

·         கால் விரல்கள், நகங்களுக்கிடையில் பூஞ்சணம் தொற்றியுள்ளனவா என தினமும் பார்க்க வேண்டும். மேற்கூறியவற்றில் ஏதேனும் நீரிழிவு நோயாளியை தாக்குமேயானால் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெறலாம்..

·         தினமும் ஒரு முறையாவது பாதங்களைக் கழுவி மெல்லிய பருத்தித் துணியினால் துடையுங்கள். கால்களை கழுவி சுத்தம் செய்ய சுடு தண்ணீரை பாவித்தலை நிறுத்த வேண்டும். ஏனெனில் நோயாளியின் பாதங்களில் சில நேரங்களில் உணர்வு இல்லாததன் காரணமாக அதிக சூடான நீர் பாதங்களைத் தாக்கலாம். கால்களைக் கழுவ சூடான நீர் அவசியமானால் சூடான நீரை பாவனைக்கு எடுப்பதற்கு முன்னர் கையால் அல்லது முழங்கையால் நீரைத் தொட்டுப் பார்த்துவிட்டு பின்னர் காலில் ஊற்றவும்.
·         கால்களை கழுவுவதற்கு சவர்க்காரம் பாவிக்கவும். எக்காரணம் கொண்டும் ஏனைய இராசாயனப் பொருட்களை பாவிக்க வேண்டாம். கால்களைத் துடைப்பதற்கு மிருதுவான துணியைப் பாவிக்கவும்.. கால்களின் விரல்களின் சந்துகளுக்கிடையில் கவனமாகத் துடைக்கவும் தோலை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு பூச்சுக்கள் பாவிக்கலாம்.


தடுப்பும்,ஆரோக்கிய மேம்பாடும்

·         உணவின் மூலமும், இன்சுலின் மற்றும் மாத்திரை பாவனை மூலமும் நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்



·         கிரமமாக குருதியில் குளுக்கோஸ் மட்டத்தை கண்காணித்தல்
·         பாதணிகளை அணிவதன் மூலம், உராய்வையும், அழுத்தலையும் தவிர்க்கலாம். பருத்தியினாலான தளர்வான காலுறைகளை அணிதல். கால்களில் காயங்கள் உள்ளவர்கள் தங்களுக்கென விசேடமான வகையில் தயாரிக்கப்பட்ட பாதணிகளை அணிய வேண்டும்.

·         தோல், நகம் என்பவற்றில் கால்களை, தோல் தடிப்பு, உராய்வு, புண், கொப்பளம், சிவந்து போதல் என்பன காணப்பட்டால் மருத்துவரிடம் அறிவித்தல்.
·         கிருமித்தொற்றிருந்தால் சிகிச்சை எடுத்தல்
·         மென்மையான சவர்க்காரம் பாவித்து பாதங்களை தினமும் இருமுறை கழுவுதல்.

·         விரலிடுக்குகளை ஈரலிப்பற்ற நிலையில் பேணுதல்.
·         நகங்களை நேராக வெட்டி விடுதல் வேண்டும்,வளைத்து வெட்டினால் அவை உட்புறமாக வளரலாம்.
·         வெறுங்காலுடன் நடப்பதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். குளிக்கும் போதும் நித்திரை செய்யும் போதும் மாத்திரமே பாதணிகளைக் கழற்ற வேண்டும்.

·         கால் கைகளுக்கு நன்கு குருதி ஓட்டம் இருக்கக்கூடியதாக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல்..


·         பருமனாக இருப்பவர்கள் உடல் எடையை குறைத்தல்
·         மதுபானத்தை மிதமிஞ்சி அருத்தாதிருத்தல்
·         கிரமமாக நீரிழிவு கிளினிக்குக்கு சென்று பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவரிடம் காலை பரிசோதித்துக் கொள்ளல்
·         சுத்தமாக்கும் தீராவகங்களை காலுக்கு பயன்படுத்துவதை தவிரத்தல்
·         புகைத்தல் கூடாது.
·         புண்களுக்கு உடனடியாக சிகிச்சைபெறல். கவனிப்புகள், தோல் மாற்றுகையும் புண்கள் குணமடைய உதவுவதுடன், கிருமித்தொற்றலையும் தவிர்த்து, கால் துண்டிக்கப்படுவதிலிருந்தும் காப்பாற்றும்.

·         கால்களை குறுக்காக வைத்து இருப்பதைத் தவிர்த்தல்.ஏனெனில் இது கால்களுக்கான குருதியோட்டத்தை குறைப்பதுடன் நரம்புகளிலும் அழுத்தத்தை உண்டாக்குகின்றது.

கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed                          

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்