எமது
ஊரில் எமது வீட்டுக்கு அருகாமையில் காமாச்சோடை என்ற இடம் இன்றும் அதேபெயருடன் அழைக்கப்படுகிறது. கடற்கரையை அண்டியிருக்கும் இந்த இடத்தில்தான் பள்ளிவாசல், முஸ்லிம் பாடசாலை, மீன்கடை, கூட்டுறவுச்சங்கத்தின் அரசிமூடைகள் பாதுகாக்கப்படும் பெரிய களஞ்சிய மண்டபம், மரக்கறி சந்தை, இறைச்சிக்கடை, கிங்ஸ் தியேட்டர் , கள்ளுத்தவறணை, விளையாட்டு மைதானம் யாவும் இருந்தன.
ஒருகாலத்தில்
இந்த இடத்தில் அமைந்திருந்த ஒரு காமாட்சி அம்மன் கோயிலை கடலால் வந்து ஆக்கிரமித்த போர்த்துக்கீசர் இடித்துவிட்டனர். அதன் சுவடே மறைந்துவிட்டதாக எனது பாட்டி சிறுவயதில் சொல்லியிருக்கிறார்.
தற்பொழுது அவ்விடத்தில் நிறைய மாற்றங்கள் நேர்ந்துவிட்டன.
மீன்கடை, இறைச்சிக்கடை, அரிசிக்களஞ்சியம், கிங்ஸ் தியேட்டர் என்பன மறைந்துவிட்டன.
ஆனால், இன்றும் அங்கே பள்ளிவாசலும், பாடசாலையும் இயங்குகின்றன. பள்ளிவாசல் தெருவில் காலாதிகாலமாக முஸ்லிம் மக்களும் செறிந்துவாழ்கிறார்கள்.
பள்ளிவாசல் வீதியில் வசித்த நிஸ்தாரும் காமிலும் என்னுடன் அரிவரியிலிருந்து படித்த பால்ய கால நண்பர்கள். ஊரில் பிரபல ஒளிப்படப்பிடிப்பாளரான அந்த விதியில் டொலர் ஸ்ரூடியோ நடத்திய ரஸாக் மாஸ்டர் எனது ஆசிரியர்.
அப்பகுதியில்
முன்னர் வாழ்ந்த ஒரு கட்டைப்பஞ்சாயத்து ரவுடி கடற்றொழிலாளர்களிடம் ஒரு ஹீரோ. கத்தோலிக்கரான அவருக்கு ஒரு நாள் கனவில் காமாட்சி அம்மன் தோன்றி அவரை திருந்தி நடக்கச் சொன்னதுடன், அந்த இடத்தில் முன்னர் தனக்கென ஒரு கோயில் இருந்ததாகவும் சொன்னதையடுத்து, அந்த ஊரே பயந்த மனிதன் கனவில் வந்த அம்மனால் முற்றாக மாறிவிட்டார்.
மது, புகைத்தல் மற்றும் தீய பழக்கங்களை கைவிட்டு காமாட்சி அம்மன் பக்தனாகிவிட்டதுடன் தனது செலவில் அங்கு நீண்டகாலமாக விருட்சமாக வளர்ந்திருக்கும் ஆலமரத்தின் நிழலில் காமாட்சி அம்மனுக்கு ஒரு கோயிலும் எழுப்பி தினமும் ஒரு பூசகர் வந்து பூசைசெய்வதற்கும் ஒழுங்குசெய்து, கும்பாபிஷேகமும் நடத்திவிட்டதாக
ஊருக்குச்சென்றபோது அறிந்தேன். அந்தக்கோயிலையும் பார்த்தேன்.
இந்தத் தகவலைக் கேட்டதும் கனவில் வரும் தெய்வங்கள் பாடசாலைகளையும் மருத்துவமனைகளையும் கட்டுங்கள் என்று ஏன் சொல்வதில்லை... ? என்று
எனக்குள்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது.
இந்த காமாச்சோடைக்கு அருகே அன்று இன்றும் நீர்கொழும்பில் இருந்த ஒரே ஒரு இந்துப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயம்தான் (இன்று விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) எனக்கு 1954 இல் வித்தியாரம்பம் செய்வித்து ஏடுதுவக்கி முதல் மாணவனாக இணைத்துக்கொண்டது. 32 குழந்தைகளுடன் தொடங்கிய அந்தப்பாடசாலைக்கும் எனக்குமான கல்வி சார்ந்த உறவு எனது 12 வயதில் முடிவுக்கு வந்தது. பொதுவாக போட்டிகள் என்றால் தொலைதூரம் செல்லும் நானும் எனது மாமா மகன் முருகானந்தனும் எதிர்பாரதவிதமாக ஆறாம்தர புலமைப்பரிசில் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்துவிட்டோம். இருவருமே சிறுவயதில் போட்டிபோட்டுக்கொண்டு குழப்படி செய்திருக்கிறோம்.
எமது கொட்டத்தை அடக்குவதற்கு வந்த தண்டனையாக அந்தப்பரீட்சையில் நாம் இருவரும் சித்தியடைந்து வீட்டுத் துயரத்துடன் (Home Sick) யாழ்ப்பாணம் சென்று அரியாலையில் நாவலர் வீதியில் அமைந்த ஸ்ரான்லி கல்லுரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்த ஆண்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டோம்.
சொந்தம் பந்தங்கள் இல்லாத அந்த ஊரில் விடுதி வாழ்க்கை மிகவும் சிரமம் தந்தது. காலையிலும் இரவிலும் புங்கன்குளம் ரயில் நிலையத்தில் தரித்துநின்று புறப்படும் தபால் ரயிலின் ஒலி நெஞ்சிலிருந்து பெரிய ஏக்கப்பெருமூச்சைத்தரும்.
எப்பொழுது தவணை விடுமுறை வரும் என்று நாட்களை தினமும் எண்ணிக்கொண்டிருந்தவாறு அங்கு இருக்கப்பிடிக்கவில்லை என்று ஏதாவது
சாக்குப்போக்குச்சொல்லி வாரம் ஒரு கடிதமும் வீட்டுக்கு எழுதினோம்.
எமது கண்ணீருக்கு பலன் சில ஆண்டுகளில் கிடைத்தது.
மகாவித்தியாலயம் அல்லது மத்திய மகாவித்தியாலயம் என்ற தரத்தில் உயரும் பாடசாலை நீர்கொழும்பில் அறிமுகமாகும் வரையில் நாமிருவரும் காத்திருந்தோம்.
நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலயத்தில் எமக்கு அனுமதி கிடைத்ததும். யாழ்ப்பாணத்திற்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு வந்துவிட்டோம்.
அல்ஹிலால் அமைந்துள்ள முஸ்லிம் வட்டாரத்திற்கு பெயர் பெரிய முல்லை. ஒரு காலத்தில் அங்கே நிறை பெரிய முல்லைப்பூக்கள் மலர்ந்ததா ...? என்று நான் பாட்டியிடம் கேட்க மறந்துவிட்டேன். அங்கும் ரசீக் பரீத் மாவத்தை, பள்ளிவாசல் தெரு - பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் அடக்கத்தலம் என்பன இருக்கின்றன. அக்காலத்தில் எங்கள் குடும்ப டாக்டர் அப்துல்லா, பெரியமுல்லைக்கு செல்லும் சிலாபம் வீதியில்தான் தமது கிளினிக்கை வைத்திருந்தார். அவர் எனது மச்சான் முருகானந்தனின் அப்பா பாலா மாமா என்ற சுப்பையாவின் பாடசாலை பால்யகால நண்பர். இருவரும் அந்த அல்ஹிலால் வித்தியாலயத்தில்தான் எட்டாம் தரம் வரையில் படித்தவர்கள்.
அல்ஹிலாலில் இணைந்தது முதல் எனது நண்பர்கள் அந்த வித்தியாலயத்தின் மாணவர்கள். அதிபர் ஜப்பார், உப அதிபர் சுபியான், விஞ்ஞான ஆசிரியர் ராசீக், ஓவிய ஆசிரியர் ரசாக், பௌதிகவியல் ஆசிரியர் ஹ_சைன், குடியியல் ஆசிரியர் கலீல், தமிழ்ப்பாட ஆசிரியர் மாஹிர், சிங்களப்பாட ஆசிரியர் ஜலாலுத்தீன், உடல்நலம் தேகப்பயிற்சி ஆசிரியர் இஸ்மாயில், சரித்திர ஆசிரியர் ஜாபீர் இவர்கள் அனைவரும் தமிழ்ப்பிள்ளைகளான எம்மிருவர்மீதும் அன்பும் அக்கறையும் காண்பித்தவர்கள். கண்டிப்பும் அரவணைப்பும் அவர்களிடம் குடியிருந்தன.
வெளியூர்களுக்கு
சுற்றுலா அழைத்துச்செல்லும் வேளைகளிலும் எமது தங்குமிடம் , உணவு விடயங்களில் அவர்கள் காட்டிய அக்கறை காவிய நயம் மிக்கது.
காரணம் நானும் முருகானந்தனும் அப்பொழுது தாவர பட்சணிகள். ஒரு
மாணவர் இலக்கிய மன்ற நிகழ்ச்சியில் முருகானந்தன் பேசும்பொழுது வணக்கம் சொல்லாமல் அஸ்ஸலாமு ஆலைக்கும் என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பிக்கும் அளவுக்கு அவர்களின் பண்பாடுகள் எம்மில் கலந்திருந்தன.
சில பாடங்களுக்கு கட் அடித்து அந்த முஸ்லிம் மாணவ நண்பர்களுடன் திரைப்படங்களும் பார்த்து, கையும் களவுமாக பிடிபட்டுமிருக்கின்றோம். அந்த நண்பர்களுடன் இணைந்து நாடகங்களும் மேடையேற்றியிருக்கின்றேன்.
சுபியான் ஆசிரியர் தமிழ்ப்பாடம் எடுத்தபொழுது, வார விடுமுறை நாட்களில் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி படிக்கத்தூண்டி அவற்றிலிருந்து லகர
ழகர ரகர றகர பேதச்சொற்கள் வரும் வசனங்களை எழுதிவருமாறு வீட்டுபாடம் தருவார்.
அவர்தான் ஒரு வகுப்பில் எம்மை சிறுகதை எழுதவும் பழக்கியவர். சிறுதுளி பெரு
வெள்ளம் என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதைக்கு அவர் மிக
நன்று என்று குறிப்பிட்டு கையொப்பம் இட்டு வாழ்த்தியிருக்கிறார்.
இவ்வாறு கல்வி கற்ற காலத்தில் ஏராளமான முஸ்லிம் மாணவ மாணவிகளுடனும் ஆசிரியர்களுடனும் ஆரோக்கியமான உறவு தொடர்ந்திருக்கிறது. அதன் நீட்சியாக 1972 இல் மல்லிகை ஊடாக இலக்கியப்பிரவேசம் செய்ததும், மேலும் பல முஸ்லிம் இலக்கிய நண்பர்கள் எனது வட்டத்திற்குள் இணைந்தார்கள்.
மூத்த
படைப்பாளி சுபைர் இளங்கீரன், முகம்மது சமீம், எச்.எம்.பி.
மொஹிதீன், நுஃமான், மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மு. பஷீர், எம்.எச்.
எம். சம்ஸ், திக்குவல்லை கமால், எம்.எஸ்.எம்.
இக்பால், ஜவாத் மரைக்கார், ஏ. இக்பால், அன்பு ஜவஹர்ஷா, முஸ்லிம் காங்கிரஸ் (சட்டத்தரணி) அஷ்ரப், யாழ்ப்பாணம் இக்பால், மேமன்கவி, ஆப்தீன், ஜின்னா ஷரிபுதீன், அஷ்ரப் சிஹாப்தீன், ஊடகவியலாளர்கள் சித்திக்காரியப்பர், அஸ்ஹர், அளுஹர்தீன், அமீன், நிலாம், காலப்போக்கில் வசீம் அக்ரம், எம்.எல்.எம்.
மன்சூர், எஸ்.எல். எம்.ஹனிபா, மேற்கு அவுஸ்திரேலியாவில் வதியும் கலாநிதி அமீர் அலி, லண்டனில் தற்பொழுது வதியும் அனஸ் இளைய அப்துல்லா,
பஷீர் - மற்றும் பி. ஏ. காதர், மீலாத் கீரன், சாய்ந்தமருது கவிஞி அனார், மொழி பெயர்ப்பாளர் ஏ.ஸி. எம்
கராமத், மருதூர்க்கொத்தன் மகன் ஆரீஃப், மருதூர்க்கனியின் மருமகன் ரஃபீக்,.... இவ்வாறு எனது நண்பர்களின் பெயர்ப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அது
முடிவிலி.
தோழர் வி. பொன்னம்பலம், இலங்கையில் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை
புட்டும் தேங்காய்ப்பூவும் என்று உவமைப்படுத்துவார். இந்த உவமை இன்றளவும் பேசப்படுகிறது.
நீர்கொழும்பில்
எனது ஆரம்பப் பாடசலையில் தலைமை ஆசிரியராக இருந்த சித்தங்கேணியைச் சேர்ந்த பண்டிதர் க. மயில்வாகனம் அவர்கள் 1960 இல் எங்கள் ஊரைவிட்டு பிரியாவிடை பெற்றுச்சென்றபின்னர் யாழ்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்தான் பணியாற்றினார். அவர்தான் யாழ்ப்பாணத்தில் எனக்கும் முருகானந்தனுக்கும் பாதுகாவலராகவும் (Guardian ) இருந்தவர்.
இவ்வாறு இலங்கையில் எனது சகோதர சமூகமாக வாழ்ந்த அந்த முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பலர் காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் கொன்றழிக்கப்பட்டபொழுதும் 1990 ஆம் ஆண்டு 24 மணிநேரங்களில் யாழ்ப்பாணத்தை விட்டே வெளியேறவேண்டும் என்று விரட்டப்பட்டபொழுதும் அவுஸ்திரேலியாவிலிருந்து என்ன பாடுபட்டிருப்பேன் என்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அம்மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியவர்கள் இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம் கலாசாரம் கந்தபுராணக்
கலாசாரம் என்றார்.
அந்தக்கலாசாரம் செய்த சேவையா இது.....???!!!!
இறுதியாக யாழ்ப்பாணத்தில் 1986 இல் நண்பர்கள் நுஃமானையும் இக்பாலையும் சந்தித்துவிட்டு வந்திருந்தேன். நுஃமானிடம் யாழ். பல்கலைக்கழகத்தில் பயின்ற தமிழ் மாணவர்களினாலும் சக விரிவுரையாளர்கள் - பேராசிரியர்களினாலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அந்த இனச்சுத்திகரிப்பை நிறுத்த முடியாது போய்விட்டது.
சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்கள் சண்முகதாசன், என்.கே.
ரகுநாதன், கே.டானியல், இளங்கோவன் முதலானோருடன் இணைந்து பணியாற்றிய தோழர் இக்பாலின் வெளியேற்றத்தை அங்கிருந்த ஏனைய இடதுசாரிகளினால் நிறுத்த முடியாது போய்விட்டது.
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழக ஸ்தாபகர் கே. கந்தசாமி, சர்வோதயம் கதிரமலை, வலது கம்யூனிஸ்ட் வட பிராந்திய செயலாளர் தோழர் விஜயானந்தன், நவசம சமாஜக்கட்சி தோழர் திருநாவுக்கரசு, மருத்துவ விரிவுரையாளர் ரஜனி திராணகம, அதிபர் ஆனந்தராஜா.... இவ்வாறு சமூகப்பெறுமதியான மனிதர்களின் உயிர்கள் குடிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களை காப்பாற்ற முடியாமல் வாய்பொத்தி கைகட்டி மௌனம் அனுட்டித்தனர் அங்கிருந்த தமிழ் மக்கள்.
யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் மீது நடத்தப்பட்ட இனச்சுத்திகரிப்புக்கு தமிழ் மக்கள் அனைவரும்தான் பொறுப்புக்கூறுதல் வேண்டும் என்று 25 ஆண்டுகள் கடந்த பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு யாழ். மாவட்ட எம்.பி.
சுமந்திரன் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
இதனைத்தானா கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது.!!!!
விடுதலைப்புலிகள் வடக்கில் உச்சத்திலிருந்தபொழுது, உண்பதற்கும் கொட்டாவி விடுவதற்கும்தான் நாங்கள் வாயைத்திறந்தோம் என்று சொன்ன பலரை எனக்குத் தெரியும்.
துப்பாக்கி அதிகாரம் என்ன சொல்கிறதோ அதனைத்தான் கேட்கவேண்டும் அதனைத்தான் செய்யவேண்டும். இல்லையேல் துப்பாக்கிவைத்திருந்தவர்கள் , தமது தொடையைத்தட்டி "தட்டவேண்டியதுதான்
" என்று சொன்னால் தட்டிவிடுவார்கள். தமிழ்த்திரைப்படத்தில் அடியாள்கள் தூக்குவது பற்றி சொல்வது போன்று அவர்கள் தட்டுவது பற்றிச்சொன்ன காலம் முன்னர் இருந்தது. இன்று அந்த நிலையில்லாதமையினால் சுமந்திரன் பொறுப்புக்கூறல் பற்றி வார்த்தைகளை உதிர்க்கிறார்.
யாருக்குத்தான் உயிருக்குப்பயமில்லை. அவர்களின் அன்றைய கையறு நிலையை சகித்துக்கொள்வோம்.
ஒருவரை நிறபேதம் சொல்லி அழைப்பது குற்றம், சேர்ட்டை இழுத்து அடிப்பதும் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு
- முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதை பகிரங்கமாகக் கண்டிக்க முடியும்தானே.
1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எமது அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை கண்டிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து, மீண்டும் அம்மக்கள் நிபந்தனை எதுவுமின்றி மீள் குடியேற அனுமதிக்கவேண்டும் என்று குரல் எழுப்பினோம்.
இந்தச்செய்தி
இலங்கைப்பத்திரிகைகளிலும் வெளியானது.
அந்தச்செய்தியை நான்தான் அனுப்பியிருந்தேன். அதனை அறிந்துகொண்ட சில அநாமதேயங்கள் எனக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தன.
எப்பொழுதும் இந்த அநாமதேயங்கள் தமது உண்மையான பெயரைச்சொல்வதில்லை. ஆனால், அன்று முதல் 2011 இல் நாம் கொழும்பில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு வரையில் அழுத்தங்கள் பல்வேறு வழிகளில் தொடர்ந்த வண்ணமாகவே இருந்தன.
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக வாழ்ந்த முஸ்லிம்மக்கள் வெளியேற்றப்பட்டு கடந்த அக்டோபர் 30 ஆம்
திகதியுடன் 25 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. அந்தளவு ஆயுள்காலம் நானும் பல புலன்பெயர் சக்திகளின் அழுத்தங்களை சந்தித்திருக்கின்றேன்.
"
நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழம் தனக்கு வேண்டாம் " என்று சொன்னவர்தான் நண்பர் கவிஞர் சேரன்.
யாழ்ப்பாணத்திற்கு
முஸ்லிம் மக்கள் மீளச்சென்று குடியேறும் வரையில் அந்தப்பக்கம் செல்லாமலிருந்தவர்தான் மு. சிவசிதம்பரம். ஆனால், அவர்களின் மீள்வருகைக்கு முன்னே அவர் நிரந்தர துயிலில் ஆழ்ந்து தமது
ஊர் மயானத்தில் தகனமானார்.
2002 இல் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தேன்நிலவு காலம் வந்தபொழுது நடந்த சர்வதேச ஊடகவியலாளர்களின் சந்திப்பில், ரஜீவ் காந்தியின் படுகொலைக்கும் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கும் வருத்தம் தெரிவித்தார்கள் புலிகளின் தேசியத்தலைவரும் அரசியல் ஆலோசகரும்.
ஆனால்,
அம்மக்கள் வெளியேற்றப்பட்ட காலம் முதலே அதனை கண்டித்து தமது கட்டுரைகளில், கதைகளில், நாவல்களில், கவிதைகளில், நாடகங்களில்
- திரைப்படங்களில் பலர் குரல் எழுப்பியே வந்துள்ளனர்.
2003 ஆம் ஆண்டு இலங்கையில் சாகித்திய விருதை அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவிடம் பெறச்சென்றபொழுது, காத்தான் குடியைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் கவிஞருக்கும் விருது கிடைத்தது.
அவருடைய அருமைத் தந்தையாரும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைச்சம்பவத்தில் உயிர் இழந்தவர். ஆனால், அந்தக் கவிஞர் தனது குறிப்பிட்ட கவிதை நூலில் அந்தத்துயரம் பற்றி பதிவே செய்யாமல் செய்தவர்களை மன்னித்திருந்தார்.
அந்த மன்னிப்பானது, 1972 இல்
தனது ஒன்பது வயதில் தென்வியட்நாமில் சைகோன் நகருக்கருகில் ட்ராங்பேங் கிராமத்தில் அமெரிக்க விமானங்களின் நேபாம் குண்டுத் தாக்குதலினால் எரிகாயங்களுக்குள்ளான கிம்புக் பின்னாளில் அமெரிக்கா சென்றபொழுது, குறிப்பிட்ட விமானத்தில் விமான ஓட்டியாக இருந்தவர் தெரிவித்த வருத்தத்திற்கு " என்றைக்கோ உங்களையெல்லாம் நாம் மன்னித்துவிட்டோம் " என்று சொன்னதற்கு ஒப்பானது.
வீரகேசரியில் எம்முடன் பணியாற்றிய கான் என்ற அச்சுக்கோப்பாளர் மருதானையில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானார். அவருடைய மகன் கலாநெஞ்சன் ஷாஜகான் இன்று ஆசிரியராக ஊடகவியலாளராக நீர்கொழும்பில் வதியும் எனது இனிய நண்பர்.
இன்று தமிழ்மக்கள் அனைவரும் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சொல்கிறார்.
காலம் கடந்துதான் சிலருக்கு ஞானம் பிறக்குமென்றால் பிறந்துவிட்டுத்தான் போகட்டுமே....!!!!
வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 2002 சமாதான காலத்தில் காலம் கடந்து ஞானம் பிறந்தது.
ஊடகவியலாளர்
சந்திப்பில் அந்த நிகழ்வை துன்பியல் என்று ஒற்றை வார்த்தையில் சொன்னதுடன் நின்றுவிடாமல், பின்னாளில் அஷ்ரப்பின் மறைவுக்குப்பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மசூர் மௌளான, உட்பட சில முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களையும் தமது கிளிநொச்சி சமாதான செயலகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில் அழைத்திருந்தார்.
அங்கு
முற்பகல் பேச்சுவார்த்தை முடிந்ததும், மதியம் தொழுகைக்கு அந்த மண்டபத்தில் அறை ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும் வந்துள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு மதிய போசனத்துக்காக ஹலால் மாமிசம் சமைத்திருப்பதாகவும் அதற்கென விசேடமாக ஒரு முஸ்லிம் சமயல்காரரை அழைத்திருப்பதாகவும் சொல்லி, அங்கிருந்த அனைவரையும் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அத்துடன்
கதை முடியவில்லை.
மதிய
இடைவேளையில் இரண்டு தலைவர்களும் தனியாக அமர்ந்து சாகவாசமாக தனிப்பட்ட சுகதுக்கங்கள் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டபொழுது, ஹக்கீம் பிரபாகரனிடம் கேட்கிறார்: "
இந்த யுத்த நிறுத்த சமாதான காலம் பற்றி உங்கள் குடும்பத்தினர் என்ன கருதுகிறார்கள்...?"
அதற்கு பிரபாகரன், சிரித்துக்கொண்டே, " எனது இளைய மகன் பாலச்சந்திரனுக்கு இந்தக்காலம்தான் மிகவும் பிடித்தமானது என்கிறான் " எனச்சொல்கிறார்,
"
ஏன் அப்படி...?" என்று ஹக்கீம் கேட்கிறார்,
அதற்கு
பிரபாகரன், " அப்பா யுத்தம் இல்லையென்றால் மிகவும் நல்லம்தானே ...அப்பொழுதுதானே நீங்கள் எங்களுடன் இருப்பீர்கள் - என்று பாலச்சந்திரன் சொல்கிறான் " என்றாராம்.
இதிலிருப்பது எமது தேசத்திற்கான முக்கிய செய்தி. எங்கள் தேசத்திற்கு மட்டுமல்ல போர்வெறியோடு அலையும் தேசங்களுக்கும் பயங்கரவாத சக்திகளுக்கும் அதில் ஒரு எளிமையான செய்தி இருக்கிறது.
கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையின் மிகவும் எளிமையான விருப்பம் என்ன...? பெற்றவர்களின் அன்பும் அரவணைப்பும்தான்.
சமாதான காலத்தில் அவருக்கு ஞானக்கண்ணை திறந்த செல்வனும் இன்றில்லை. அன்று ஞான ஒளிக்கதிர்பெற்ற அந்தத்தந்தையும் (தலைவரும்) இல்லை.
இதனையும் அவர்களின் மொழியில் துன்பியல் நிகழ்வு என்போமா...?
எனது அருமை முஸ்லிம் சகோதரர்களே... அல்லாவின் நாமத்தால் மன்னித்துவிடுங்கள்.
letchumananm@gmail
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்