நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருநது நான்கு விளக்கமறியல் கைதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (30-5-2017) அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியமையை அடுத்து சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலில் துளையை (ஓட்டையை) எற்படுத்தி கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியுள்ள கைதிகள் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.
சத்துர மதுசங்க (25 வயது), விபுல சுரங்க முனசிங்க (19 வயது), பி. ஜயகுமார். (26 வயது), மொஹமத் நவுபர் தவுபீக் முஹம்மத் நஸீம் (26 வயது) ஆகியோரே
தப்பியோடியுள்ள் கைதிகளாவர். இவர்கள்; வத்தளை, குருணாகலை, யாழ்ப்பாணம் மற்றும் நாவலபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார். அவருடன் அமைச்சின் அதிகாரிகள் சிலரும் உடனிருந்தனர். அமைச்சர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்வது இரகசியமாக இருந்தது.
அமைச்சருடன் சிறைச் சென்ற ஊடகவியலாளர்கள்
இதன்போது ஊடகவியலாளரகளுக்கும் அமைச்சருடன் சிறைச்சாலைக்குள் செல்லும் வாய்ப்;பு கிடைத்தது.
அங்கு விஜயம் செய்து சிறைச்சாலையை பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளிடமும் உத்தியோகத்தர்களிடமும் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் உரிய அறிவுரைகளை வழங்கினார். சம்பவம் இடம்பெற்ற அன்று பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் தொடர்பாக அமைச்சர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் விசாரித்தார்.
சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்ட பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சிறைச்சாலையில் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் உள்ள பாதுகாப்பு தொடர்பில் அதிருப்தியைத் தெரிவித்தார். இது தொடர்பாக இரண்டு வார காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுவரில் துளையை ஏற்படுத்தி தப்பியோடிய கைதிகள்
தப்பியோடிய கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையின் சுவரில் துளையை ஏற்படுத்தி அதன் வழியாக வெளியேறி பின்னர் சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலில் துளையை ஏற்படுத்தி சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளமையை அவதானிக்க முடிந்தது. அமைச்சர் அங்கு செல்லும் போது அந்த துளைகள் சீமெந்தினால் அடைக்கப்பட்டிருந்தது.
தப்பியோடிய கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த சிறிய கட்டடம் பழைமை வாய்ந்த கட்டமாக இருந்தது. கட்டடத்தின்; யன்னல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரும்பினாலான சட்டம் தொடர்பாக அமைச்சர் அதிகாரிகளிடம் அதிருப்தியைத் தெரிவித்தார். அதில் ஒரு பகுதியில் உறுதியான சட்டம் பொருத்தப்பட்டிருந்தது. மற்றையது உறுதியாக காணப்படவில்லை. சாதாரண கம்பிகளைக் கொண்டு சட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
சிறைச்சாலையின் பாதுகாப்பு கேள்விக்குறி
கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விளக்கமறியல் கைதிகள் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தப்பியோடிய கைதிகள் சுவரில் துளையை ஏற்படுத்துவதற்கு ஆயுதங்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். அந்த ஆயுதங்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? அவர்கள் தப்பியோட முயற்சி செய்ததை ஏனைய கைதிகள் அறியவில்லையா? இரவு நேர பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் உத்தியோகத்தர்கள் அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தனர்? சிறைச்சாலைக்குள் கைதிகள் போதைப் பொருள் விற்பனை செய்தல், பயன்படுத்தி வருதல், மற்றும் தொலைபேசிகளை பயன்படுதி வருதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே உள்ள நிலையில் ஆங்கில படங்களில் வருவது போன்று இளம் கைதிகள் நால்வர் தப்பியோடியுள்ளமை அனைவருக்கும் ஆச்சரியததை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தப்பியோடுவதற்கு யாராவது உதவியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.
சிறைச்சாலையில இடம்பெறும் முறைகேடுகள்
இதேவேளை, சிறைச்சாலையில் பல்வேறு முறை கேடுகள் இடம்பெற்று வருவதாக நீண்ட காலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
கைதிகளை பார்வையிட வருவோரிடமும் கைதிகளிடமும்; பல்வேறு காரணங்களுக்காக பணம் அறவிடப்படல், சிறைச்சாலையில் போதைப் பொருட்களை கொண்டு செல்லல், செல்லிடத் தொலைபேசிகளை கைதிகள் பயன்படுத்த அனுமதித்தல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையின் சில உத்தியோகத்தர்கள் மீதும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஈஸி கேஸ் மூலமாகவும் சில ஜெயிலர்கள் இலஞ்சமாக பணம் பெறுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பாக மக்கள் அறிய ஆவலாகவுள்ளனர். சிறைச்சாலை மறு சீரமைப்பு செய்யப்படுமா?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்