பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, July 28, 2013

புனித ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்ர்' இரவு

புனித ரமழானின் மூன்றாவது பகுதி இன்னும் இரண்டு தினங்களில் (செவ்வாய்க்கிழமை) ஆரமபமாகிறது. ரமழானில் மறைந்திருக்கும் தீர்ப்புக்குரிய 'லைலத்துல் கத்" இரவு மூன்றாவது பகுதியில் மறைந்திருக்கிறது.


ரமழானின் கடைசிப் பத்து தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும். இத்தினங்களில் ஒற்றைப்பட இரவுகள் ஒன்றில் 'லைலத்துல் கத்ர்" இரவு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக முகம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த இரவிலேயே புனித அல்குர்ஆன் முதன் முதலில் இறக்கப்பட்டது. ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாக 'லைலத்துல் கத்ர்
  இரவு விளங்குகிறது. இந்த இரவில்தான் வானவத் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களும் மலக்குகளும் பூமிக்கு இறங்குகிறார்கள். காலை உதயமாகும் வரை அந்த இரவு சாந்திமிக்கதாக இருக்கும் என் திருக்குர்ஆன் கூறுகிறது.
இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது,

'நிச்சயமாக நாம் இந்த அல்குர்ஆனை தீர்ப்புக்குரிய இரவில் இறக்கி வைத்தோம். தீர்ப்புக்குரிய இரவு என்றால் என்னவென்று உமககு அறிவித்தது எது? அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிகச்சிறந்ததாகும். அதில் வானவர்களும் அந்த ஆன்மாவும் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகத் தங்கள் இறைவனின் கட்டளையுடன் இறங்குகின்றனர். விடியற்காலை தோன்றும் வரை (அது முற்றிலும்) சாந்தியானதாகவே இருக்கும். (அல் கத்ர் 1-6)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'லைலத்துல் கத்ர'; இரவு பற்றி பின்வருமாறு கூறினார்கள்.

'ரமழானின் கடைசி பத்து இரவுகளில்; ஒற்றை இரவுகளான 21 ஆவது இரவு , 23 ஆவது இரவு, 25 ஆவது இரவு, 27 ஆவது இரவு, 29 ஆவது இரவு, 'லைலத்துல் கத்ர், ஆக இருக்கலாம் அதனைத் தேடுங்கள்.'

அதன்பொருளானது கடைசி பத்து நாட்களில் அதனை பெறுவதற்கு அசாதாரணமான முறையில் முயற்சி செய்யுங்கள். அதிகமாக உழையுங்கள் என்பதாகும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
' எனக்கு 'லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டுவிட்டது.எனவே, நீங்கள் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனை தேடுங்கள்.

ஆயிஷா (ரலி) அறிவித்தாதாக புகாரியில் இவ்வாறு வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்த நாட்களில் இஹ்திகாப் இருந்து வருவார்கள்.அன்னாருக்குப் பிறகு அன்னாரின் மனைவிமார்களும் இஹ்த்திகாப் இருந்து வந்தார்கள்.

நபி (ஸல்) கூறியதக ஹஸ்ரத் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
'அமல்களின (நற்கிரியைகளின்); அடிப்படையில் இறைவனிடத்தில் கடைசிப் பத்து நாட்களைவிட சிறந்த கண்ணியமுள்ள,விருப்பத்திற்குரிய வேறு எந்த நாட்களும் இல்லை. இந்த நாட்களில் 'லா இலாஹ் இல்லல்லாஹ்' அதிகமான முறையில் ஓதவேண்டும். 'அல்லாஹ் அக்பர்' என்று அதிமான முறையில் கூற வேண்டும்.'

அல்ஹம்து லில்லாஹ்;' என்றும் அதிகமான முறையில் கூறவேண்டும்.'
ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். 'அல்லாஹ்வின் தூதரே எனக்கு 'லைத்துல் கத்ர'; கிடைக்கப் பெற்றால் நான் எந்த துஆவை கேட்க வேண்டும் என்று நபியவர்களிடம் வினவினேன்.அதற்கு நபியவர்கள் 'லைத்துல் கத்ர'; இரவு கிடைக்கப் பெற்றால் 'ஏ அல்லாஹ்! நீ அதிகமாக மன்னிப்பளிப்பவன். மன்னிப்பை விரும்புகிறாய். எனவே என்னை மன்னித்தருள்வாயாக' என்ற துஆவை செய்வாயாக என்று கூறினார்கள்

'லைத்துல் கத்ர்' இரவு தனிப்பட்ட ஒரு மனிதனோடும் ஒரு குறிப்பிட்ட இரவோடும் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது துஆககள் ஒப்புக் கொள்ளப்டுகின்ற ஒரு குறிப்பிட்ட நேரம் மனிதனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இரவு ஒரு குறிப்பிட்ட இரவிலேயே வருகிறது.

ஆகவே, அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நாம் ஒவ்வொருவரும் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்-

'கடைசி பத்து நாட்களில் நபியவர்கள் வணக்கங்களில் எந்தளவு முயற்சிகள் செய்வார்கள் என்றால் ஏனைய நாட்களில் இந்தளவு முயற்சிகள் செய்வதை காண முடியாது.

இறைவனின் புறமிருந்து அருளாக வெளிப்படும் இந்த இரவை அடைந்து கொள்வதற்காக இறுதிப் பத்து தினங்களில் ஒவ்வொருவரும் பெரு முயற்சி செய்ய வேண்டும். இந்த இரவை சரியாக அடையப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகளாவர்.

ஒரு தடைவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஜிப்ரீல் (அலை) அவர்;கள் என் முன் தோன்றி எவனொருவன் அருள் நிறைந்த ரமழான் மாதத்தை அடையப் பெற்றும், அதில் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவில்லையோ,அவன் அழிந்து விடட்டும் என்று சாபமிட்டார்கள். நான் ஆமீன்! (அப்படியே ஆகட்டும்) என்று அங்கீகரித்தேன்.'

ஆகவே, இறுதிப் பகுதியான நரக வேதனையிலிருந்து பாதுகாப்பு அல்லது விடுதலை கிடைக்கின்ற பகுதியில், நாங்கள் புனித இரவின் பயனை அடைவதற்காக முயற்சிக்க வேண்டும்.அதற்காக அதிக வணக்கங்களிலும், அதிகமதிகமாக துஆ கேட்பதிலும் பாவமன்னிப்பு கேட்பதிலும், குர்ஆனை ஓதுவதிலும் ஈடுபட வேண்டும்.

அத்துடன், ரமழான் மாதத்தில் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றப்படும் நோன்புக் கடைமையுடன் அல்லாஹ்தஆலாவின் படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடைமைகளையும் நிறைவேற்ற வேண்டும். ஏழைகள், விதவைகள்,அநாதைகள், தேவையுடையவர்கள், இடம்பெயர்ந்தவர்களுக்கு தாராளமாக உதவி செய்ய வேண்டும்.


ஏக நாயன் அங்கள் எல்லோருக்கும் புனித 'லைத்துல் கத்ர் இரவை கிடைக்கச் செய்வானாக. ஆமீன்.

(என்னால் எழுதப்பட்ட இக்கட்டுரை (28-7-2013) 'தமிழ்த்தந்தி' வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது) 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்