பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, May 8, 2014

அரசியலில் கசினோ விளையாடும் முஸ்லிம் தலைமைத்துவங்கள் - எம்.இஸட்.ஷாஜஹான்

(இக் கட்டுரை 8-5-2014  அன்று வீரகேசரி பத்திரிகையில் பிரசுமாகியுள்ளது.)

 எமது முஸ்லிம் தலைமைத்துவங்களில் பலர் தமது முதுகெலும்பற்ற தன்மையையும் சுயநல அரசியல் செயற்பாடுகளையும் அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அதுபோன்ற வெளிப்படுத்தல்கள் தொடர்ந்து இடம்பெறும் கால கட்டமாக தற்போதைய நாட்டு சூழ்நிலையும் அரசியல் சூழ்நிலையும்  அமைந்து உள்ளன.
கசினோ சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று திட்டங்களாக அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்களின கீழான கட்டளை ஆளும் தரப்பு  முஸ்லிம்  தலைமைத்துவங்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆகியன வாக்களித்துள்ளன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,  மற்றும் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அதே போன்று  ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
முதல் நாள் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டிலான் பெரேரா இரண்டாம் நாள் விவாதத்தின் போது சபையில் பிரசன்னமாகி இருந்த போதிலும் சபையில் இருந்து வெளியேறியிருந்தார். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன விவாதங்களிலோ வாக்களிப்பிலோ கலந்துகொள்ளவில்லை.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின் அத்துரலிய ரத்னதேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில்,ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர்களான ஏ.ஆர்.எம்.அப்துல் காதர்,பைஸல் முஸ்தபா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அகியோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.



இஸ்லாமும் முஸ்லிம் தலைமைகளும்

இஸ்லாமிய  அரசியல் தலைமைத்துவத்திற்கும் ஏனைய அரசியல் தலைமைத்துவங்களுக்கும்  இடையில் பெரும் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும்  அல்குர்ஆன் குறிப்பிடும் வழியிலும் நபியவர்கள் காட்டித் தந்த வழியிலும் வாழ வேண்டியது கட்டாயமாகும். அது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்திற்கும் பொருந்தும். அதனை மீறி யாரும் நடந்து கொள்ள முடியாது.

இஸ்லாம்  ஒரு பரிபூரண வாழ்க்கை முறையாகும். அது தலைமைத்துவம் தொடர்பாகவும்,  தலைமைத்துவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கூறியுள்ளது.  நபியவர்கள் அதனைக்  சொல்லிலும் செயலிலும் காட்டித் தந்துள்ளார்கள். இறையச்சத்தை இதயத்தில் ஏந்தியிருக்கும்  இஸ்லாமிய தலைமைத்துவங்கள் இஸ்லாம் கூறும் வழியிலேயே முழுமையாக நடந்து கொள்ளும்.
உலக வாழ்க்கையானது  மறுமை வாழ்க்கையின் (மரணித்த பின்னர் உள்ள வாழ்க்கை) விதை நிலமாக உள்ளது. ஆகவே, இறையச்சத்துடன் வாழும்  முஸ்லி;ம் தலைமைத்துவங்கள் இஸ்லாம் கூறுகின்ற வழியிலேயே நடந்து கொள்ளும்.  சுய இலாபங்;களுக்காக அல்ல.
தலைமைத்துவம் என்பது  மக்களுக்கு சேவை செய்வதற்காகவே. தம்மை அலங்கரித்துக் கொள்வதற்காக அல்ல. அரசியலில் சமயத்தை பயன்படுத்திக்கொள்ளும் எமது தலைவர்களில் பலர் சமயம் சொல்வதை அரசியலில் பயன்படுத்துவதில்லை. இதனை நிரூபிக்கும் வகையிலேயே இந்த சட்ட மூலத்திற்கு  முஸ்லிம் தலைமைத்துவங்கள் ஆதரவாக வாக்களித்தமை அமைந்துள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்; அத்துரலிய ரத்னதேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பிரேரணைகளுக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில்  ஆளும் கட்சியின் பங்காளிகளான முஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமை பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.



ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு ஏனைய தரப்பினரின் சாடல்

கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையான கசினோ சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால் கூறப்படுகின்றது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புவதாகவும் அமைச்சர்கள் கூறுகின்றனர். எனினும, மாநாயக்க தேரர்களே இவ்விடயத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை திருத்தியமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவேதான் மனச்சாட்சி உள்ள ஆளும் கட்சி உறுப்பினர் சூதாட்டத்தைக் கொண்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் நின்று விடாது ஆளும் கட்சியின் பங்காளியான அத்துரலியே ரத்ன தேரர் எதிர்த்து வாக்களித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்காததன் மூலம் மனித குலத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இஸ்லாத்துக்கும் மிகப்பெரும் துரோகம் செய்து விட்டன என முஸ்லிம் மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அந்தக் கட்சியின் குற்றச்சாட்டு என்னவென்று பார்ப்போம்.
மத பாரம்பரியங்களை கொண்ட இந்த நாட்டில் கசினோ சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் மூலம் முழு நாடும் சீரழிவை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சீரழிவிற்கு குர்ஆன் ஹதீஸ் என சொல்லிக்கொண்ட கட்சியும் அக்கட்சியின் மூலம் அரசியல் முகவரி கொண்டவர்களும் துணைபோயுள்ளமை மிகப்பெரும் வரலாற்றுத் துரோகமாகும். இதன் மூலம் பதவிகள் என்றால் சமூகத்தைக்கூட இவர்கள் விற்கத்துணிந்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.

 இத்தகைய கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும். அதே போல் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பதற்கேற்ப ஹக்கீம், ரிசாத் , அதாவுல்லா தலைமைகளிலான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சட்ட மூலத்தை எதிர்க்காமல் நழுவிக் கொண்டதன் மூலம் இச்சட்ட மூலம் நிறைவேறுவதற்கு அப்பட்டமாக துணை போயுள்ளமையை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. இவர்களின் இந்தச் செயல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாரிய தலைகுனிவுக்குள் தள்ளியுளளது எனவும் முஸ்லிம் மக்கள் கட்;சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பல தரப்பினரும்  குறித்த சட் மூலத்திறகு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்கள் மீது  குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


வாக்களித்தவர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களும்

ஆளும் தரப்பு முஸ்லிம் தலைமைத்துவங்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை,  வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத முஸ்லிம் பங்காளிக் கட்சிகளும் மறைமுகமாக  அதனையே செய்துள்ளன.
பிரேரணையை எதிர்க்கத் துணிவில்லாத நிலையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் முஸ்லிம் பங்காளிக் கட்சிகள் இந்த பிரேரணைக்கு  ஆதரவு தெரிவித்துள்ளன. அல்லது அரசாங்கத்திற்கு தமது விசுவாசத்தை பறைசாற்றியுள்ளன.
ஆளும் தரப்பைச் சேர்ந்த சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலையில், பிரேரணைகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆகியன வாக்களித்துள்ள நிலையில,எந்த அடிப்படையில் இந்த முஸ்லிம் தலைமைத்துவங்கள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளன.? அதேபோன்று எதிர்ப்பு தெரிவிக்காமல் நழுவியுள்ளன? கட்சி அடிப்படையிலா? மார்க்கத்தின் அடிப்படையிலா? இவர்கள் வாக்களித்துள்ளார்கள்?
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையானது கசினோ சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை  என்று இந்த முஸ்லிம் தலைமைத்துவங்கள் உறுதியாக கூறுகின்றனவா? சூதாட்டம், விபச்சாரம், மதுபானம், போதைப் பொருள், பாதாள உலக நடவடிக்கை போன்றவற்றிற்;கு சிறந்த களம் அமைத்துக் கொடுக்கும் இந்த சட்ட மூலம் நிறை வேற்றப்பட்டதன் ஊடாக நாட்டின் கலாசார. பண்பாட்டு.  ஒழுக்க விழுமியங்கள் பாதிக்கப்படும் என்று பலராலும் சுட்டிக்காட்டபட்டுள்ள நிலையில், இவை எவையும் நடைபெறாது என்று இந்த முஸ்லிம் தலைமைத்துவங்கள்  உத்தரவாதம் தருகின்றனவா? வாக்களிப்பு இடம்பெறுவதற்கு முன்னர் இந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த சட்ட மூலம் தொடர்பாக நன்கு ஆராய்ந்துள்ளனரா? அவ்வாறாயின் அது தொடர்பில் அவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது முஸ்லிம் மக்களின்  கேள்வியும் எதிர்ப்பார்ப்புமாகும்.
நாட்டில்  பாரிய அளவில் கசினோ இடம்பெறுமானால் அதில்  வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி எமது நாட்டு வசதிபடைத்தவர்களும் கசினோ விளையாடுவர். அதில் முஸ்லிம்களும் அடங்குவர். அப்படியாயின் எம்மவர்கள் கசினோ விளையாட, விபசாரத்தில் ஈடுபட , மதுபானம் அருந்த, போதைப் பொருள் பாவிக்க எமது தலைவர்களே வாய்ப்பை உருவாக்கி கொடுத்த  பாவத்தை சுமந்து கொள்வார்கள் என்பது சர்வ நிச்சயமாகும்.
   எப்படியோ, எமது தலைவர்கள் அரசியலில் கசினோ விளையாடுகிறார்கள் என்பதே உண்மையாகும். அந்த ஆட்டம் ஆரம்பமாகி நீண்ட காலமாகிறது. இப்போது அவர்கள்  உலக கசினோ சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்கரின்  ஆடம்பர சூதாட்ட மையத்தில் அமர்ந்து கசினோ விளையாடப்போகிறார்கள். பொருத்திருந்து பார்ப்போம்.










No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்