பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Tuesday, August 30, 2011


நோன்புப் பெருநாள் தினத்தில் ரமழான் கற்றுத் தந்த போதனைகளை நினைப்போம்


புண்ணியம் பொழிந்த மாதம் எம்மை  விட்டு பிரிந்து விட்டது. கண்ணியமிகு மாதம் எம்மை விட்டு அகன்று விட்டது.
ஆம்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பை ஒரு மாத காலம் நோற்று விட்டு ஷவ்வால் மாத தலைப்பிறையைக் கண்டு இன்று நாங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறோம்.


முஸ்லிம்களின் முதல் பெருநாளும் முக்கிய பெரு நாளுமாகிய 'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சாந்தியை, சமாதானத்தை ஏற்படுத்தும் உன்னத நாளாக விளங்குகிறது.
இன்றைய பெருநாள் தினத்திலே முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து ,குளித்து புத்தாடையணிந்து , நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர்.
பள்ளிவாசல்களிலே தமது சகோதரர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வர்.
அதே போல், தமது உறவினர், நண்பர்கள், அயலவர்கள் இல்லம்  சென்று இவ்வாறே பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.
பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து நல்லமல்கள் பல புரிந்து இன்று பெருநாள் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான இனிய நாளில் புனித ரமழான் கற்றுத் தந்த பாடத்தை , போதனையைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
இஸ்லாம் ஒரு வாழ்க்கை முறையாகும் அந்த வாழ்க்கை முறைக்கான பயிற்சியை நோன்பு வழங்கியது.
சரியான முறையில் நோன்பு நோற்றதன் மூலமாக இனிய குணம், கற்புடைமை, பொறுமை,நேர்மை, நன்நடத்தை, சகிப்புத் தன்மை, உளத் தூய்மை, வீரம், ஏழைகளின் துயரை உணரும் தன்மை, உதவும் மனப்பான்மை,மனித நேயம் என்பன போன்ற பல்வேறு நற்பண்புகளை ஒருவர் அடைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இந்த நற்பண்புகளை ஒரு முஸ்லிம் ஏனைய மாதங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.அதற்கானே பயிற்சியே ரமழான் மாதமாகும்.
இறைவன் மனிதனை படைத்ததன் நோக்கம் அவனுக்கு முற்றாக கீழ்படிவதுதான். இறை விருப்பத்தையம் அவனது நெருக்கத்தையும் அடைவதில் ஒருவன் வெற்றி பெற்றால் அதுதான் பெரிய வெற்றியாகும்.அதுதான் பெரிய பெருநாளாகும்.
அந்த வகையில் இறையச்சம் என்ற ஆடையை அணிவதன் மூலமாக உண்மையான பெருநாளைக் கொண்டாட முடியும்.நாம் மனித இனத்தை இறைவனின் பக்கம் கொண்டு போய் சேர்த்தால் அதுதான் நமக்கான உண்மையான பெருநாளாக இருக்கும்.
இன்றைய பெருநாளைக்காக நாம் அணிந்துள்ள புத்தாடைகள் ஒருநாள் பழையதாகிவிடும்.ஆனால் அந்த நிரந்தரமான பெருநாளுக்கான ஆடைகள் பழையதாய்ப் போய்விடுவதில்லை. அது நிரந்தரமான பெருநாளாகும்.நாங்கள் அந்த நிரந்தரமான பெருநாளைக்கு தயாராக வேண்டும்.
“தக்பீர்” ஓசை இறை பள்ளிவாசல்களில் முழங்க, பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான நாளில் நோன்பு கற்றுத் தந்த இனிய போதனைகளை என்றும் மனதில் இருத்தி வாழ் நாள் முழுவதும் அதன்படி நடப்போமாக. ஈத் முபாரக்!!

     -  கலாநெஞ்சன் ஷாஜஹான்  B.Ed

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்