பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, April 3, 2013

சட்டத்தை கையில் எடுத்துள்ள பொது பலசேனாவும் பேரினவாதிகளும்


- எம்.இஸட்.ஷாஜஹான் B.Ed

இலங்கை முஸ்லிம்களுக்கு சோதனைகளும் வேதனகளும் மிகுந்த காலம் இது. நாளுக்கு நாள் பேரினவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டு
வருகின்றனர்.

நாட்டின் அரசியல் யாப்பு, சட்டம், ஒழுங்கு,ஜனநாயகம்  போன்றவைகளை பொருட்படுத்தாத சில பௌத்த தேரர்களும், சில அரசியல்வாதிகளும் ,பேரினவாதிகளும் ஒன்றிணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் குழுவினரால் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் மெதுமெதுவாக மறுக்கப்படும் முனைப்புக்கள் தெரிகின்றன.

காவியுடை அணிந்த ஆனால் பொலிஸ் சீருடை அணியாத இந்தக் குழுவினரதும், சில அரசியலவாதிகளினதும் தலைமையிலும் வழிகாட்டல்களிலும் அண்மை காலத்தில் தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்க எதிரான நடவடிக்கை கடந்த வாரம் பெப்பிளியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வரை நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருகிறது.

பெப்பிளியான வரத்தக நிலையம் மீதான தாக்குதல் பொலிஸார் முன்னிலையில் தேரர்கள் சிலரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதை இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் இடம்பெற்ற காணொளிகளும் செய்திப் படங்களும் வெளிப்படுத்துகின்றன.
இத்தாக்குதல் தொடர்பாக செய்திகள் கல்ப் நியூஸ், அல்ஜஸீரா, பிபிஸி தமிழ் உட்பட சர்வதேச ஊடகங்கள் பலவற்றில் இடம்பெற்றன.
நாட்டில் சட்டம் , ஒழுங்கு இருக்கிறதா? ஏன்ற சந்தேகம் சிறுபான்மையினர் மத்தியில் தற்போது பலமாக எழுந்துள்ளது.

சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ள பொது பலசேனாவுக்கு அதிகாரம் வழங்கியது யார்? , ஒரு இனத்தின் சமய சட்டதிட்டங்கள், கலாசார  விழுமியங்கள் மீது அடக்கு முறை பிரயோகிக்க அல்லது கட்டுப்பாடுகளை விதிக்க பொது பலசேனாவுக்கு அதிகாரம் வழங்கியது யார்? இந்தக் குழுவினரின் சட்ட விரோத , ஜனநாயக விரோத, மத விரோத நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? ஏன்பன போன்ற பலவிதமான கேள்விகள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல ஏனைய சமயத்தவர்களிடத்திலும் எழுந்துள்ளன.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது தேரர் ஒருவர் குறித்த விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு கமராவை கல்லால் அடித்து உடைக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அவர் பொலிஸார் முன்னிலையிலேயே தாக்குதல் மேற்கொண்டமையை காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

இனவாத தேரர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தான்தோன்றித்தனமாக நடப்பதை போன்று ஏனைய மதத்தலைவர்கள் நடந்து கொண்டால்,சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரும் ஆட்சியாளர்களும் வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பார்களா? என்று பலரும் கேட்கின்றனர்.

ஹலால் பிரச்சினையின் பின்னர் முஸ்லிம் பெண்கள் 'அபாயா' அணிவது தொடர்பாக பொதுபலசேனா  தெரிவித்த கருத்து நாட்டின் பல இடங்களில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட காரணமாய் அமைந்தன.

அச்சுறுத்தல்கள் தொடர்பில் சில சம்பவங்களே வெளிவந்துள்ளன. பல சம்பவங்கள் வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.குருணாகல் உட்ப சில பிரதேசங்களில் முஸ்லிம் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்த்து வருகின்றனர் எனவும் தெரியவருகிறது
1983 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவன்செயல்களின் பின்னர் தமது அன்றாட கருமங்களுக்காக வெளியிடங்களுக்கும் பொது இடங்களுக்கும் செல்லும் மக்கள் தமது தாய்மொழியாம் தமிழில் பேசுவதை பயந்தின் காரணமாக தவிர்த்தனர். தமிழ் பெண்கள் பொட்டு வைக்காமல் வெளியில் சென்றனர். கொழும்பு உட்பட பல இடங்களில் இந்நிலை காணப்பட்டது. தற்போதும் கூட இந்நிலை ஓரளவு உள்ளது.
தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான பொது பலசேனா உட்பட பேரினவாதிகளின்  செயற்பாடுகள் பல பிரதேசங்களில் முஸ்லிம் மக்களிடையேயும் தமிழ் மக்களுக்கு அன்று ஏற்பட்ட நிலையை தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளது.

அம்பாறையில் இம்முறை இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வருகை தந்ததற்கு இனவாதிகளின் 'பர்தா' தொடர்பான அச்சுறுத்தலும் தமக்கு ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும் என்ற அச்சமுமே பிரதான காரணங்களாகும் என்பதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
இதேவேளை, பொதுபலசேனாவுக்கு அரசாங்கத்தில் உள்ள பலம் வாய்ந்த சிலரின் ஆதரவும்  உதவிகளும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் கட்டிடம் ஒன்றை இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ திறந்து வைத்ததை இதற்கு அவர்கள் உதாரணம் காட்டியுள்ளனர் .

பொதுபல சேனா அமைப்பின் கட்டடத்தை அண்மையில் பாதுகாப்பு செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ திறந்து வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம், அந்தக் கூட்டத்தில் அவரை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
பாதுகாப்பு செயலர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விட்டதாக அமைச்சர் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொது பல சேனா அமைப்பினரின் மதவாத இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக பொது பல சேனா இயக்கத்தை தடை செய்து நாட்டில் சட்டத்தையும், சமூக நீதியையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம், நாட்டின் பொருளாதாரம் போன்ற நல்லாட்சியின் அடையாளச் சின்னங்களைத் தகர்த்தெறிந்து இனவாதம், மதவாதம், கலவரம், அராஜகம் போன்ற காட்டுமிராண்டித்தனம் நிறைந்த சர்வாதிகாரக் காட்டாட்சிக்கு முயற்சித்து வருகின்ற பொது பல சேனாவின் செயற்பாடுகளை பிரித்தானியாவில் வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்வியக்கத்தின் அராஜகச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், அரசாங்கமும் இன்னமும் காலந்தாழ்த்தாது உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

சர்வதேச நாடுகளிலும் குறிப்பாக எமது நாட்டிற்கு ஆதரவாகவுள்ள முஸ்லிம் நாடுகளிலும், எதிராகவுள்ள மேற்கு நாடுகளிலும் எமது தேசத்தின் நற்பெயருக்கும், ஜனநாயக இருப்புக்கும் மீண்டுமொருமுறை களங்கத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த பொது பல சேனாவின் சமகாலத் தீவிரவாதச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இந்த மூன்றாவது பயங்கரவாத சக்தியின் அராஜக நடவடிக்கைகளை அடக்கியொடுக்குவதற்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற வகையில் உடனடியாகவே தகுந்த நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமுமாகும் எனவும் அக்கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் அங்கீகாரம் தேவை, பெப்பிளியான வர்த்தக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக ஞாயிற்றுக்கிழமை (31-3-2013) அமைச்சர் பௌசியின் வீட்டில் இடம்பெற்ற முஸ்லிம் அமைச்சர்களின் சந்திப்பொன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் அமைச்சர்களான பௌஸி, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், அதாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்
.;
இதேவேளை, பொதுபலசேனா உட்பட நாட்டிலுள்ள தேசியவாத அமைப்புக்கள் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் மீது தடை விதிக்கக் கோரும் அமைச்சரவை பத்திரமொன்றை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார் இது வரவேற்கத்தக்கது.

நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்காக எந்த வர்க்கத்தைச் சேர்ந்த தனி நபரோ, குழுவினரோ செயற்படுவார்களாயின் சமாதானத்தையும், சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு போவதும் பின் நிற்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பேருவளை சப்புகொட ஸ்ரீ மகா விகாரையைப் புனரமைத்து திறந்து வைக்கும் வைபவத்தின் போது தெரிவித்துள்ளார்.

இனத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் பேரினவாதிகள் சுய இலாபம் அடைய துணிவார்களாயின் நாடு மீண்டும் ஒரு தடைவை படுபாதளத்தில் வீழ்வது மாத்திரம் நிச்சயமாகும்.
பொறுப்புள்ள அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் பொறுப்புடனும் நீதியுடனும் நடந்து கொள்ளாவிடில் சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூறவேண்டிவரும் என்பதும் நிச்சயமாகும்.

அப்போது அரசாங்கத்தை காப்பாற்ற இந்த பேரினவாதிகளால் முடியாமல் போகும் என்பது சர்வ நிச்சயமாகும்.

 நன்றி - வீரகேசரி பத்திரிகை (3-4-2013)



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்