பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Friday, March 7, 2014

இனவாத அமைப்ப்புக்களின் செயற்பாடுகள் வெற்றி அடையது - நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஓ.எம்.ஹீஸான்

(நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும்
மேல்மாகாண சபையின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான எம்.ஓ.எம்.ஹீஸான் 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி.23-2-2014 அன்று பிரசுரமானது)

நேர்காணல்;- எம்.இஸட்.ஷாஜஹான்

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ்  கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. பின்னர்     அரசாங்கத்துடன் இணைந்து  கொண்டது.  மேல் மாகாண சபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. பின்னர் இணைந்து கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே, முஸ்லிம் காங்கிரஸ்   தனித்து போட்டியிடாமல்  அரசாங்கத்துடன்  இணைந்து  தேர்தலில் போட்டியிட்டால் என்ன?

பதில்;: மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது எமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காகவேயாகும். பிரதான கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும்.
உதாரணமாக, கம்பஹா மாவட்டத்தில்  எமது கட்சி தனித்து போட்டியிட்டால் மாத்திரமே பிரதிநிதித்துவத்தை பெற முடியும். விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் சிறுபான்மை கட்சிகள்  சில 
மாவட்டங்களில் தனித்து கேட்பது சாதகமானதாகும்.  இல்லையேல் பெரும்பான்மை கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் அதிகூடிய வாக்குகளை பெற வேண்டியிருக்கும்.  எமது கட்சி தனித்து போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டாலேயே எமது கட்சியின் தனித்துவத்தையும் பலத்தையும் வெளிப்படுத்த முடியும்.
 அதன் பின்னர் எந்த கட்சியுடன் இணைந்து கொள்வது என்பதை  கட்சியின் தலைமைத்துவமும் உயர் பீடமும் தீர்மானிக்கும்.



கேள்வி:முஸ்லிம் சமூகம் அண்மைக் காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு யார் காரணம்?

பதில்: பொதுபலசேனா, சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புக்களே இதற்கு காரணமாகும். தமது பிரபல்யத்திற்காக பௌத்த கொள்கைக்கு முரணாக இந்த அமைப்புக்கள் செயற்படுவதையே காணக்கூடியதாக உள்ளது.
இந்த அமைப்புக்களின் செயற்பாடுகளினால் நாட்டில் பிரச்சினைகளே உருவாகும். அதற்காகத்தான் அவர்கள் செயற்படுகிறார்கள். இந்த இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் தவறு என்பது பெரும்பான்மையான பௌத்த மக்களுக்கு நன்குத் தெரியும். இந்த அமைப்புக்களின்  இனவாத செயற்பாடுகள் வெற்றி அடையாத நிலையே உள்ளது. இதற்கு எமது கட்சியே காரணமாகும். சில விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படையாக சொல்ல முடியாது. அவ்வாறு தெரிவித்தால் பிரச்சினைகள் ஏற்;படலாம்.
பௌத்த மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை சீர்குழைப்பதற்காகவே இந்த பேரினவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. பொதுபலசேனா அமெரிக்காவுக்குச் சென்ற போது புலம் பெயர்ந்த தமிழ் மக்களை சந்தித்து உரையாடியது. சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்தும் சதித்திட்டத்தை   புலம் பெயர்ந்த  சில தமிழ் அமைப்புக்கள் பொது பலசேனா போன்ற  பேரினவாத அமைப்புக்கள் மூலமமாக  அரங்கேற்றுவதாக நாங்கள் கருத வேண்டியுள்ளது.

முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களின் மேல் வெறுப்படைந்து தமிழ் மக்களுடன் சேர்ந்து வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பதற்கு  அப்போது உதவுவார்கள் என்பதே புலம் பெயர் அமைப்புக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பதற்கு   முஸ்லிம் காங்கிரஸ் என்றும் துணை போகாது.


கேள்வி: பேரினவாத அமைப்புக்களாலும் கட்சிகளாலும் முஸ்லிம் மக்களுக்கு  எதிராக மேற்கொள்ளப்படும் அநீதியான செயற்பாடுகள், அழுத்தங்கள் தொடர்ந்தால் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதை நிறுத்திக்கொள்ளுமா?

பதில்: அரசாங்கத்துடன்   நாங்கள் இணைந்திருந்த போதும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்ற போது எமது கட்சி  அதற்கெதிராக குரல் கொடுத்து வந்துள்ளது. நடவடிக்கை எடுத்து வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வந்தபோது, எமது கட்சித் தலைவர்  அவரை சந்தித்தார். அதன் போது விடுதலை புலிகளும், பௌத்த இனவாதிகளும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கையினை அவர் கையளித்;துள்ளார்.
 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின்; ஆட்சி காலத்தில் மாவனல்லையில் முஸ்லிம் கடைகள், பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது  அரசாங்கத்தில் அங்கம்  வகித்த எமது கட்சி அமைச்சர்கள் சந்திரிகா அம்மையாருடன் வாக்குவாதப்பட்டதுடன், உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அமைச்சு பதவிகளையும் துறந்தனர் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

இதன் பின்னர், 12 வருடங்களுக்கு மேலாக எமது கட்சி எதிர் கட்சியிலேயே அங்கம் வகிக்க வேண்டி ஏற்பட்டதையும், இதன் காரணமாக எமது மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் போனதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் எமது கட்சி, ஆதரவை விளக்கிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனை மேற்கொள்ளத் தயங்காது.


கேள்வி: கல்முனை தரவைக் கோவில் வீதிக்கு கடற்கரை பள்ளிவாசல் வீதியின் பெயரை சூட்டுவதற்கு  கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் முயற்சி செய்ததை அடுத்து, அதனை எதிர்த்து கல்முனையில் தமிழ் மக்களால் பேரணி நடத்தப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பில் தங்களது கருத்து என்ன?

பதில்: முஸ்லிம் தமிழ் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு அங்குள்ள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவர்  முயற்சி செய்ததன் விளைவே இந்த எதிர்ப்பு நடவடிக்கையாகும். ஆர்ப்பாட்டத்தின் போது பௌத்த மத தேரர் ஒருவர் பங்குபற்றியமையும் இதனாலேயாகும்.
பேரினவாத அரசியல் வாதிகள்  இரு இனங்களுக்கிடையேயும் பிரச்சினையை  ஏற்படுத்தி அதனை பெரிதுபடுத்தவே விரும்புகின்றனர். இதற்கு அங்குள்ள சில தமிழ் மக்களும் துணை போயுள்ளனர். தற்போது புதிய பெயர் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு  அங்குள்ள தமிழ், முஸ்லிம்  தலைவர் கலந்துரையாடி சுமுகமான  முடிவை எடுப்பார்கள். இரு தரப்பினரிடையேயும் பிரச்சினை ஏற்படுமாக இருந்தால்  புதிய பெயர் மாற்றத்தை நிறுத்துவதே நல்லதாகும் என்பது எனது  தனிப்பட்ட கருத்தாகும்.


கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப்பின் மனைவி பேரியல் அஷ்;ரப் உங்களது கட்சியை வழிநடத்தியுள்ளார். ஆயினும், உங்கள்  கட்சியில் பெண்கள் பிரதிநிதித்துவம்  விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே உள்ளது. நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கட்சியின் சார்பில்  முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனரா?

பதில்: இல்லை. முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க முன்வரவில்லை.  அப்படி முன்வருவார்களானால் பொருத்தமானவர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவர். ஆயினும், சிங்கள பெண் வேட்பாளர் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில்  எமது கட்சியின்  சார்பில் போட்டியிடுகிறார்.


கேள்வி: நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருக்கும் நீங்கள்  இரண்டாவது தடைவையாக மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதன் காரணம் ?    
பதில்: 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  மேல் மாகாண சபை தேர்தலிலும் நான் போட்டியிட்டேன். ஆனால், வெற்றி பெறவிவில்லை. இம்முறையும் தேர்தலில் போட்டியிடுகிறேன்.  எமது கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டு தடைவைகள் வெற்றி பெற்றுள்ள கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம் மாகாண சபை உறுப்பினராக இருந்து செய்துள்ள சேவைகளைப் பார்த்ததன் காரணமாகவும், அவருடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததன் காரணமாகவும் மாகாண சபை  உறுப்பினராக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு ஏற்பட்டது. மாநகர சபை உறுப்பினராக இருந்து செய்யும் சேவையை விட பல மடங்கு அதிகமான சேவையை மாகாண சபை  உறுப்பினராக இருந்து செய்ய முடியும். இந்த தடைவை கம்பஹா மாவட்டத்தில் இரண்டு  அல்லது மூன்று பேர் எமது கட்சியின் சார்பில் தெரிவாவர். நான் இரண்டாமிடத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி: இறுதியாக  மேல் மாகாண சபை தேர்தல் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இந்த தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குள் பயனற்றதாகிவிடக் கூடாது.  அதாவது சிதறிவிடக் கூடாது. எனவே, தனித்துவமான கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன். மேல் மாகாண சபையில் எமது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். கம்பஹா மாவட்டத்தில் இரண்டு தடைவைகள் தொடர்ச்சியாக எமது பிரதிநிதித்தவம் இருந்ததன் காரணமாக மாவட்ட மக்கள் நன்மையடைந்தனர். ஆகவே, இம்முறையும் எமது கட்சி உறுப்பினர்கள் இரண்டு  அல்லது மூன்று பேர் கம்பஹா மாவட்டத்தில் தெரிவாவர் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.


முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி முஸ்லிம்களின் வெற்றியாகும.; முஸ்லிம்களின் சக்தி முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்