பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, April 13, 2014

எதிர் கட்சிகள் பொது அணியில் திரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெற்றுள்ள அரசு - கலாநெஞ்சன்


(இக்கட்டுரை 13-4-2014 இன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
  
மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை போன்ற பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு முன்னர் பாடசாலைகளில் முன்னோடிப் பரீட்சைகளை நடத்தப்பட்டு மாணவர்களின் அடைவு மட்டம்  இனங்காணப்படும்.
இந்;த முன்னோடிப் பரீட்சைகள் மூலமாக மாணவர்களும் தமது கல்வி நிலையை அறிந்து கொண்டு பரீட்சைக்கு மேலும் சிறப்பான முறையில் தயாராவர்;. அந்;த முன்னோடிப் பரீட்சைகளின் பெறுபேறுகளே மாணவர்கள் தோற்றும் அந்தப் பொதுப் பரீட்சையின் பெறுபேறாகவும் பெரும்பாலும் அமைந்துவிடும்.

நடந்து முடிந்த மேல்; மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களின் முடிவுகளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஜனாதிபதி; தேர்தலுக்கு முன்னர் எழுதிய முன்னோடிப் பரீட்சையாகவே  அமைந்துள்ளது.

முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்கள்  ஒரு சிலர்; பொதுப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெறுவதற்காக தமது தவறுகளையும் குறைபாடுகளையும் திருத்திக் கொண்டு மேலும் முயற்சி செய்து நன்றாகக் கற்று பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேற்றினை பெறுவர். அதேபோன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயற்பட்டாலே ஒழிய, இனி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களில்  அரசாங்கம் தனது தொடர்ச்சியான  தேர்தல் வெற்றிகளை தக்க வைத்துக் கொள்ள முடியாது.

தேர்தல் முடிவுகள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. அந்த முடிவுகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும்  பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எச்சரிக்கை பலவற்றை விடுப்பதாக அமைந்துள்ளன. மக்கள் இந்த  தேர்தலில் சில விடயங்களை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.  தேர்தல் முடிவுகளை நன்கு அலசி ஆராய்ந்;தால் அது நன்கு புலப்படும்.

 குறிப்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி குறைந்;துள்ளதுடன்   ஆசனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு நடை பெற்ற   மேல் மாகாண சபை  தேர்தலோடு  ஒப்பிடுகையில் இரு  பிரதான கட்சிகளினதும் ஆசனங்கள் குறைந்துள்ளன என்பதே கசப்பான உண்மையாகும். அந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 68 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு  30 ஆசனங்களும் கிடைத்தன. அதேபோன்று,  இந்த தேர்தலில் மேல் மாகாண சபையில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12 ஆசனங்களையும். தென் மாகாண சபையில் 5 ஆசனங்களையும் இழந்துள்ளது. தென் மாகாண சபையில் 2009 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 804,071 வாக்குகளைப பெற்றது. ஆயினும், இம்முறை 699,408 வாக்குகளையே பெற்றுள்ளது.

அதேபோன்று 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற   மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 688,253 வாக்குகள் கிடைத்தன. இம்முறை  நடைப்பெற்ற தேர்தலில் 679,682 வாக்குகளே கிடைத்துள்ளன.  அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை இரண்டு ஆசனங்களை இழந்துள்ளன. ஆயினும்,  தென் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்   இம்முறை 13251 வாக்குகளால் அதிகரித்துள்ளன.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள சில தேர்தல் தொகுதிகளில்  அதன் வாக்குகள் 2009 ஆம் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளைவிட இம்முறை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு தேர்தல் தொகுதி இதற்கு சிறந்த உதாரணமாகும். 2009 இல் நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் 32475 வாக்குகளைப் பெற்றது. இம்முறை 28763 வாக்குகளையே பெற்றது. 3712 வாக்குகளை அக்கட்சி இழந்துள்ளது. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 2009 இல் நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் 17823 வாக்குகளைப் பெற்றது. இம்முறை 22687 வாக்குகளைப் பெற்று தனது வாக்குகளை 4864 ஆல் அதிகரித்துக் கொண்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளன. ஆயினும், அரசாங்கம் அவற்றை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மாறாக மக்கள் தமது ஆதரவை அரசாங்கத்திற்கு அளித்து மீண்டும் வெற்றியைத் தந்துவிட்டார்கள் என்று ஆளும் தரப்பினர் வெற்றி முரசு கொட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
மாகாண சபை தேர்தல் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள். சிறு சிறு கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள்  சிலர் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளமையும் குறிப்படத்தக்கது.

இந்நிலையில் , நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, உண்மையை சொல்லப் போய்  ஜனாதிபதியின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளார்;ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்   வாக்குகள் குறைந்தமைக்கான காரணத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  அங்கு தெரிவிக்கும் போது , பாரிய அபிவிருத்தி திட்டங்கள், வாக்குகளை சேகரிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  இதன் காரணமாகவே அமைச்சர் ஜனாதிபதியின் கண்டிப்பக்கு ஆளாகியுள்ளார்.
இனிமேல். அரசாங்கத்தை பலயீனப்படுத்தும்  இவ்வாறான கூற்றுக்களை வெளியிடவேண்டாம் என்றும் ஜனாதிபதி அமைச்சரை கண்டித்துள்ளார். இந்த விடயத்தை சகல ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.


அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருட பெப்ரவரியில் நடத்துமா?;

இந்நிலையில், மாகாண சபை தேர்தல் முடிவுகளால் ஆடிப்போயுள்ள அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையோ, பொதுத் தேர்தலையோ நடத்தப்போவதில்லையென  எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின் போது அடித்துக் கூறியுள்ளார.;
அரசாங்கம் என்ற மரத்தின் வேர்களை மக்கள் தமது வாக்குப் பலத்தால் தளர்வடையச் செய்துள்ளனர். இனி அரசாங்கம் என்ற மரத்தை கீழே சாய்த்துவிடுவதே எஞ்சியுள்ளது. இதற்காக ஜே.வி.பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயகக் கட்சி உட்பட அனைவரும் ஒன்றுசேர வேண்டும். அது மட்டுமல்லாது பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்தால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும். அதற்காக வீதியில் இறங்கி தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையோ, பொதுத் தேர்தலையோ நடத்தப் போவதில்லை.  தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தை ஆட்டங்காண வைத்துள்ளது என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.


பிரதான எதிர் கட்சியின் குற்றச்சாட்டுக்கள்
 இந்நிலையில், அதிகார பலத்தையும் அரச வளங்களையும் முழுமையாக பயன்படுத்தியே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியடைந்துள்ளது என்று ஐ.தே.க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும் எம்.பி.யுமான கருஜெயசூரிய கருத்துத் தெரிவித்துள்ளார்.
17ஆவது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டு தேர்தல்கள், அரச சேவைகள், நீதிச்சேவைகள் உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனாதிபதி  தன்வசப்படுத்திக் கொண்டார். இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே தென், மேல் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜனாதிபதியே தேர்தல் சட்டங்களை மீறினார் அமைச்சர்கள் அதிகாரிகளும் அதனையே பின்பற்றினார்கள்.  அரச ஊடகங்கள் வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறானதோர் சூழ்நிலையிலும் அரசாங்கத்திற்கு மக்கள் சிகப்பு சமிக்ஞையை காட்டியுள்ளனர். என்று  கரு ஜெயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி எது?

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே வெற்றியடைந்துள்ளன என்பதே உண்மையாகும். சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி குறுகிய காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளதுடன்  மூன்றாவது சக்தியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. புதிய தலைமையின் கீழ் தேர்தலில் களமிறங்கிய மக்கள் விடுதலை முன்னணி மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற தேர்தல்களில் இந்த இரு கட்சிகளும் ஆளும் கட்சியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் வாக்குகளை  அதிக எண்ணிக்கையில் உள்வாங்கிக் கொள்ளும் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.
,அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகள், ஊழல், வீண் விரயம், அடக்குமுறை, போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் மக்கள் மாற்றுத் தீர்வாக கண்டு கொண்ட கட்சிகளே இவ்விரு கட்சிகளுமாகும். பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி விழித்துக் கொள்ளாவிட்டால், அக் கட்சி தொடரந்தும் பிரதான எதிர் கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சிகளில் ஒன்றாக அமைந்துவிடும்.


தேர்தல் கற்றுதம் தரும் பாடங்கள் 

நடைபெற்று முடிந்த  மாகாண சபை தேர்தல்கள்; பல பாடங்களை அரசுக்கு கற்றுத் தந்துள்ளன என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அவற்றில் சிலவற்றைப் பாரப்போம்.
 இந்த தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கவில்லை. இதன் காரணமாக மேல் மாகாண சபையில் அரசாங்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட முஸ்;லிம், தமிழ் வேட்பாளர்கள் ஒருவரும் வெற்றி பெறவில்லை. போனஸ் ஆசனம் மூலமாகவே கொழும்பு மாவட்டத்தில்  அமைச்சர் பவுஸியின் மகன் நவுஸர் பவுஸி மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்  மக்கள் தமது ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு  கொழும்பு மாவட்டத்தில் வழங்கியுள்ளனர். அங்கு இரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்திலும்  இணைந்து போட்டியிட்ட   அமைச்சர் ஆறுமுகம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலும், அதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கைய அதிகரித்துக் கொள்ள முடியவில்லை. மாறாக ரிஸாத் பதியுதீனின்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி  கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது.

 முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு  பிரதானமாக வழங்கியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் மூவர் அக்கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ளனர். அதேபோன்று நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் மக்கள் தமது வாக்குளை  சரத் பொன்சேகாவின் கட்சிக்கும் , ஜே.வி.பி. இற்கும் வழங்கியுள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் தமது ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வழங்கியுள்ளார்கள் ஆயினும்;,  கொழும்பில் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு அந்த  விருப்புவாக்குகள் போதவில்லை.  கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டமையினால் வாக்குகள் சிதறியமையும், தமிழ் மக்கள் அதிகம் வாக்களிக்கச் செல்லாமையும் இதற்கு பிரதான காரணமாகும்.
சிறுபான்மை மக்கள் இந்த தேர்தலில் அரசாங்கத்திறகு ஆதரவை தெரிவிக்கவில்லை. சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றமை, சிறுபான்மை மக்களின் உரிமைகள் மீதும் சமயத்தளங்கள் மீது கை வைக்க இடமளிக்கப்பட்டுள்ளமை ஆகிய    காரணங்கள்  பிரதானவைகளாகும். ஏனைய காரணிகள் சகல இன மக்களுக்கும் பொதுவான வாழ்க்கைச்; சுமைப் பிரச்சினைகளாகும்.

இதேவேளை, 2009 ஆம் நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடுகையில் தென்மாகாணத்தில் அரசின் வாக்கு பலம் எவ்வாறு சரிந்துள்ளது என்று பார்ப்போம்.
தென் மாகாண சபையில் 38 ஆக இருந்த அரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. 68 வீதமாக இருந்த வாக்கு வங்கி 58 வீதமாக குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு முழுமையாக கவனம் செலுத்திய மாவட்டம் அம்பாந்தோட்டை மாவட்டமாகும். இது ஆளும் குடும்பத்தின் சொந்த மாவட்டமாகும். தேர்தல் முடிவுகளின்படி இந்த மாவட்டத்தில்  ஆளும் தரப்பின் வாக்கு வங்கி 67 வீதத்திலிருந்து 57 வீதமாக குறைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் 68 வீதமாக இருந்த  வாக்கு வங்கி 59 வீதமாக குறைந்துள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 12 இல் இருந்து 10 ஆக குறைந்துள்ளது.
அதேபோன்று காலி மாவட்டத்தில் 68 வீதமாக இருந்த  வாக்கு வங்கி 57. 5 வீதமாக குறைந்துள்ளது. அத்துடன் காலி தேர்தல் தொகுதியையும் அரசு இழந்துள்ளது. காலி மாவட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 16 இல் இருந்து 13 ஆக அரசுக்கு குறைந்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலும் அரசின் வாக்கு வங்கி 69 வீதத்திலிருந்து 58 வீதமாக குறைந்துள்ளது. அங்கு 4 உறுப்பினர்களை அரசு இழந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 69 வீதத்லிருந்து 59 வீதமாக வாக்கு வங்கி குறைந்துள்ளது. ஒரு உறுப்பினரையும் இழந்துள்ளது.

தென் மாகாணம் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பாரிய அபிவிருத்திகளை கண்ட மற்றும் கண்டு வரும் மாகாணமாகும். இந்த மாகாணத்தில் அரசின் வாக்கு வங்கி வீழ்ச்சி கண்டிருப்பது தொடர்பில் எதிர் கட்சிகள் ஆராய்வதைவிட ஆளும் தரப்பே நன்கு ஆராய வேண்டும். ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் பிரேரணை கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டு அடுத்த தினம் நடந்த தேர்தல் இதுவாகும்.
அப்படியானால், பெரும்பான்மை மக்களும் அரசாங்கத்திற்கு சில அபாய சமிக்ஞைகளை விடுத்துள்ளனர். அவை எவைநாட்டில் சகல இன மக்களையும் வாட்டி வதைக்கும் அதிகரித்துச் செல்லும் பொருளதாரா சுமை, போதியளவு வருமானம் இன்மை, ஜனநாயக விரோத செயல்கள், ஊழல் உட்பட பல காரணிகளை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
மக்கள் பசிப் பிணியோடு கார்பட் வீதிகளிலும், கொங்ரீட் வீதிகளிலும், அதிவேக வீதிகளிலும், மேம்பாலங்களிலும்பயணிக்க விரும்புவார்கள் என்றோ? தமது மாகாணத்தில் அல்லது தமது மாவட்டத்தில் துறைமுகம், விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதற்காகவோ, பசியோடும் குடும்ப  பொருளாதார கஸ்டங்களுடனும்  அவற்றை பொருத்துக் கொள்வார்கள் என்றோ நினைப்பது அறிவீனம். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள்.  வாக்குக் கேட்கும் அரசியல்வாதிகள் மக்களின் பசிப்பிணியையும், ஏனைய உரிமைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 
அதனால்தான், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றைக் கண்டுள்ள இவ்விரு மாகாணங்களிலும்  இடம்பெற்ற தேர்தல்களில்; 33 சத வீத மக்கள் வாக்களிக்கவில்லை என்பது மக்கள் இந்த தேர்தலில் அதிக அக்கறைக்காட்டவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. , அத்துடன் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல வாக்காளர்கள் தமது வாக்குகளை வேண்டுமென்றே செல்லுபடியற்றதாக்கி இpருக்கிறார்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.


 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க  மீணடும் அரசியலுக்கு?

இதேவேளை, இரண்டு முறை நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த தனக்கு, மீண்டும் அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்துள்ளார். 18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் தனக்கு அந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமுல்படுத்தியுள்ள 18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவின் இந்த அறிவிப்பு  அவர் அடுத்த தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கலாம் என்ற எதிர்பார்ப்பை  தோற்றுவித்துள்ளது.

பொது வேட்பாளராக சந்திரிக்கா குமாரணதுங்க களமிறங்கினால் அது நிச்சயமாக ஆளும் தரப்பிற்கு சவாலாக அமையும் என்பது உறுதி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  ஆதரவாளர்களின் கணிசமான வாக்குகளை  அவரால் கவரமுடியும். அது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு சவாலாக அமையும்.
அரசாங்கத்தின் வாக்குவங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சிப் போக்கு தொடர்கதையாகுமா? என்ற கேள்வி ஓங்கியிருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க  எதிர்கட்சிகளுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கினால் அது  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
இந்நிலையில், மேல்  மற்றும் தென்;மாகாண சபை தேர்தல் எனும் முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப பெற்றுள்ள அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் உட்பட இனி நடத்தவுள்ள தேர்தல்களில் அதிக புள்ளிகளைப் பெற்று சிறப்பாக சித்தியடைய வேண்டுமாயின், முன்னோடிப் பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெறுகின்ற மாணவர்கள்  பொதுப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொள்வதற்காக தமது தவறுகளையும் குறைபாடுகளையும் திருத்திக் கொண்டு மேலும் முயற்சி செய்து நன்றாகக் கற்று சிறந்த பெறுபேற்றினை பெறுவது போன்று அரசாங்கமும் நடந்து கொள்ள வேண்டும்.








No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்