பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, April 16, 2014

'இலங்கையை மியன்மாராக மாற்ற முயலும் பொது பல சேனா'

-     எம்.இஸட்.ஷாஜஹான்
 (இக்கட்டுரை 17-4-2014 இன்றைய விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏந்தியிருக்கிறது. ஆம். பொதுபலசேனா மீண்டும் தனது சண்டித்தனத்தை ஆரம்பித்திருக்கிறது.
1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து  வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பொதுபல சேனா அமைப்பு வன்மையாக எதிர்த்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள மறிச்சுக்கட்டி கிராமத்துக்கு வந்த பொதுபலசேன அமைப்பினர் அக்கிராம மக்களை நோக்கி தகாத வார்த்தைகள் பேசி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

 இந்நிலையில், ஜாதிக பலசேனா அமைப்பு கொழும்பு நிப்போன் ஹோட்டலில்  ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அத்துமீறி நுழைந்த பொது பலசேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கு நடந்து கொண்ட விதம் பாதாள உலகத்தினர் செய்யும் சண்டித்தனத்தை மிஞ்சுவதாக அமைந்திருந்தது. ஞானசார தேரர்  திரைப்படங்களில் வருகின்ற மூர்க்கத்தனமான பாதாள உலகத் தலைவன் போன்று நடந்து கொண்டதை காணொளிகள் எடுத்துக்காட்டுகின்றன.
பொலிஸார் பார்த்;திருக்க பொதுபலசேனா பௌத்த மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள் மீது வசைமாறி பொழிந்து, வேண்டத் தகாத வார்த்தைகளை பேசி, ஜாதிக பலசேன அமைப்பின் செயலாளர் பூஜித வட்டரெக்க விஜித தேரரை மன்னிப்புக் கேட்கச் செய்தமை, அங்கிருத்து  துரத்தியமை  ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே  இடம்பெற்றது.
இனவாத அமைப்பான பொது பலசேனாவின் இந்த அடாவடித்தனம் முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீறும் இன்னொரு சம்பவம் மட்டுமன்றி, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் மத நல்லிணக்கத்திற்கும் சவால்விடும் காட்டுமிராண்டித்னமான செயலாகும். குறிப்பாக ஜனநாயக விரோத செயலாகும்.
கருத்து வெளியீட்டு சுதந்திரம் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்தவொரு நபருக்கும் தனது கருத்தை ஊடகங்களுக்கு வெளியிட உரிமை உள்ளது. அதனை தடுக்க எந்தவொரு அமைப்பிற்கோ தனிமனிதனுக்கோ அதிகாரம் கிடையாது.
ஜாதிக பலசேனா அமைப்பிற்கு எதிராக பொது பலசோனா அராஜகம் புரிய அதிகாரம் அளித்தது யார்? ஜாதிக பலசேனா பொதுபலசோனாவுக்கு அடிபணிந்து அல்லது பயந்தது ஏன்? பொது பலசோனாவுக்கு பின்னால் அரச பலம் இருப்பதே காரணமாகும். அதனால்தான் ஜாதிக பலசேனா  அன்று மன்னிப்புக் கேட்க வேண்டியேற்பட்டது என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொது பலசோனா ஒரு பொம்மை மாத்திரமே அதனை ஆட்டுவிக்கும்  இரும்புக் கரம் அரச தரப்பில் உள்ளது என்பது  சில தரப்பினரால் வெளிப்படையாகவும் பலரால்; மறை முகமாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டாகும்.
ஞானசார தேரர் நடந்துகொள்;ளும் விதத்தை  உன்னிப்பாக அவதானித்துப் பார்க்கும் போது, அவரின் பின்னால் மறை கரங்கள் இருப்பதையும,; அந்த துணிவில் அவர்  சர்வாதிகரமாக நடந்து கொள்வதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
 இலங்கையில் எந்தவொரு அமைப்போ அல்லது  எதிர் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளோ  அன்றி மதத்தலைவர்களோ சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பகிரங்கமான முறையில்  இவ்வாறு நடந்து கொள்ள முடியாது. அவ்வாறு நடந்து கொண்டால் அநேகமாக  கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், பொது பலசேனாவின் அடாவடித்தனம் தொடருகின்ற நிலையில,அந்த அமைப்புக்கு எதிராக சட்டம் தனது கடமையையும் பொறுப்பையும் கைவிட்ட நிலையில் உள்ளதையும் கண்டும் காணாத நிலையில் இருப்பதையும் காணமுடிகிறது.


பொதுபலசேனாவுக்கு எதிரான கருத்துக்களும் பொதுபலசோனாவின் சவாலும்

இதேவேளை,பொது பலசோனவின் இந்த அடாவடித் தனம் குறித்து பலர் கருத்து  தெரிவித்திருக்கிறார்கள். அதில்  அமைச்சர் வாசுவே நாணயக்கார தெரிவித்திருக்கும் கருத்து குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுபலசேனாவும் அதன் ஞானசார தேரரும் அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடனேயே   அவர்களது செயற்பாடுகளை செய்து வருகிறார்கள் எனவும், பொதுபலசேனா இந்த நாட்டில் மீண்டும் ஒரு நெருப்பை வைக்க முயற்சிக்கிறது எனவும,; பௌத்த  மதத்திற்கு இந்த நாட்டில் இடைஞ்சல்கள் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அதனை கவனிப்பதற்கு பௌத்த சாசன அமைச்சு என்று ஒன்று உள்ளது எனவும், அவ்வாறு பௌத்த மதததிற்கு பங்கம் ஏற்பட்டால் ஞான சார தேரர் அது தொடர்பில் பௌத்த சாசன அமைச்சிடம்  சென்று முறையிட வேண்டும். அதனை விடுத்து சட்டத்தையும் நீதியையும் தனிநபர்கள் கையிலெடுக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  
அத்துடன், அண்மைக்காலமாக ஞான சார தேரர் ஏனைய மதங்களையும் மத நிலையங்களையும் தாக்குவதற்கு அல்லது விமர்சிப்பதற்கு எந்த அரசாங்கம்  அவருக்கு அதிகாரம் அளித்தது? எனவும்  அமைச்சர் கேட்டுள்ளார்.
அதேபோன்று, மக்கள் விடுதலை முன்னணியும் இவ்விடயம் தொடர்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,   பொதுபல சேனா அமைப்பின் இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் எதிர்கால நிலை குறித்து சொல்ல வேண்டியத் தேவையில்லை. தேசிய ஒருமைப்பாடு குறித்து கதைத்துக் கொண்டிருக்கும் தற்சமயத்தில், இலங்கை பிரஜை ஒருவர் இனவாதம், மதவாதம் பேசுவது கண்டனத்திற்குரியது. பொலிஸார் இருக்கும் போதே பொதுபல சேனா இவ்வாறு நடந்து கொள்வது அவர்களுக்குப் பின்னால் அரசாங்க பலம் இருப்பதை காட்டுகிறதே தவிர வேறொன்றும் இல்லை என குறிப்பிடப்பட்டள்ளது.
ஆயினும், இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எப்போதும் போலவே மௌன விரதம் அனுஷ்டிக்கிறது.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டியதும் அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும். சிறுபான்மை இன மக்களின் மத, சமய, கலாசார ரீதியிலான உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாகும். அதன்  காரணமாகவே, இதுபோன்ற அராஜக சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்;று வருகின்றன.
பல்லினங்களையம் பல  மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில்அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாப்பும் அரசாங்கத்திடமே உள்ளது. கடந்த சில வருடங்களாக முஸ்லிம் மக்களின் மீது  பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு நம்பிக்கைத் தரும் விதமாக அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக   பெரும்பான்மையான தமிழ் மக்களைப் போன்று முஸ்லிம் மக்களும் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிடமிருந்து (அரசாங்கத்திடமிருந்து) விலகிச் செல்லும் இடைவெளி  அதிகரித்துச் செல்வதை  தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில், பொதுபலசேனா விடயத்தில் அரசு மௌனம் சாதிப்பது ஏன் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் சம்பந்தமாக அரசாங்கம் இதுவவரை எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும், ஜாதிக பல சேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர,; அதனை குழப்பிய சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கவேண்டும் எனவும், பொதுபல சேனா நடந்து கொண்ட விதம் தொடர்பில் அரசாங்கம் இதுவவரை வாய்த்திறக்கவில்லை  எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் குற்றம் சுமத்தியுள்ளா,
இதேவேளை, வழமை போன்று இவ்விடயம் தொடர்பில் ஸ்ரீலங், முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கருத்துககளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பொது பலசேனாவின் ஞானசார தேரர் அமைச்சர்களான ரஹுப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன், திலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச ஆகியோரை தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விடுத்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் தேசத்துரோகிகள் அல்ல

சிறுபான்மையின மக்கள் தேசத்துரோகிகள் அல்ல. நாட்டுப்பற்றாளர்களே என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இருபதுக்கு - 20 உலக கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி கொண்டு நாடு திரும்பிய போது முஸ்லிம் தமிழ், கிறிஸ்தவ மக்கள் பெருமபான்மையின மக்களுடன் இணைந்து வெற்றி விழா கொண்டாடியது நாட்டுப்பற்றின் காரணமாகத்தான். இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை புரிந்ததும், போட்டிகளின் போது ஆதரவு தெரிவித்ததும் நாட்டுப்பற்றின் காரணமாகத்தான்.
இது போன்ற பல உதாரணங்களை வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்ட முடியும.;
 கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும்  சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதை சீர்குழைக்கச் செய்யும் பொதுபலசேனாவின்  செயற்பாடானது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். சர்வதேசம் இலங்கையில் நடைபெறுவதை மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த முனையும்; பேரினவாத அமைப்புக்கள் மற்றும் கட்சிகளை கட்டுப்படுத்த  அல்லது ஒடுக்க பொறுப்புள்ள  அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல், அரசாங்கமே தனது அரசியல் இருப்புக்காக  பொதுபலசேனா, ராவணா பலய போன்ற அமைப்புக்களையும், இனவாதம் பேசும் கட்சிகளையும்  பாலூட்டி சீராட்டி வளர்த்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாகவிடும்.
,இந்நிலையில், இன்னொரு மியன்மாராக மாற்றும் விதமான நடவடிக்கையிலேயே பொது பலசேனா இறங்கியுள்ளது. மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை எமது நாட்டிலும் ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்பதே இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்