பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, August 6, 2014

மக்களை பொருளாதார சுமைகளிலிருந்து காப்பாற்றப்போவது யார்? - தேச நேசன்

(இக்கட்டுரை  3-8-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’  வாரப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
வாழ்க்கைச் செலவு வானுயர உயர்ந்து நின்று  சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் சோதனைக்கு மேல் சோதனைகளை கண்டபடி வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அரசாங்கம் அடுத்த தேர்தல்களிலும் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று திட்டங்கள் வகுத்து அதனை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வாக்காளப் பெருமக்களான பொது மக்கள் படுகின்ற  பொருளாதார அவஸ்தைகளை, இன்னல்களை சிந்திப்பதற்கு அதனைப் பற்றிப் பேசுவதற்கு வெகு சிலரே உள்ளனர். தற்போது நடக்கப்போகும் தேர்தலைப் பற்றி கட்சிகள் சிந்திக்கும் காலமாகும்.

முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தது. தற்போது அதனை கைவிட்டு விட்டது. பாராளுமன்றத்தில் அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் விலைவாசி அதிகரி;ப்பு தொடர்பாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும், அரசாங்கத்தின் ஊழல் தொடர்பாகவும் குரல் எழுப்பி வருகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். சரத் பொன்சேகா மக்கள் சந்திப்பின் போதும், கூட்டங்களிலும் இது தொடர்பாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

ஆயினும், செவிடன் காதில் ஊதிய சங்காக அரசாங்கத்தின் காதில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. விலைவாசி வானை எட்டிப் பிடித்தாலும் மக்கள் தேர்தலின் போது தமக்கே வாக்களிப்பார்கள் என்பது அரசாங்கத்தின் கடந்த கால அனுபவமாக இருந்தது. அந்த நம்பிக்கை மீது தற்போது அடிவிழுந்துள்ளதை வட மாகாணம் மற்றும் மேல்ஈ தென் மாகாணங்களின்  தேர்தல் முடிவுகள் ஓரளவு எடுத்துக்காட்டியுள்ளன. அதன் காரணமாக அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.



பொருளாதார சுமையில் மக்கள்

மக்களின் வருமானம் அதிகரிக்காத நிலையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு மக்களின் கொள்வனவு ஆற்றலை குறைத்துள்ளதுடன் அவர்களை கடனாளியாக்கியுள்ளது.
இரவு நித்திரைக்குச் சென்று காலையில் துயில் எழும்பும் மக்கள்  பொருளாதார விடியலைக்; காணாமலேயே விழிக்கின்றனர். அவர்கள் பொருளாதார விடியலைக் காணாமல் வறுமை இருட்டுக்குள் வாழ்ந்து வருகின்றனர்.
பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில், மக்கள் மூன்று வேலையும் வயிறார உண்ண  முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் உணவில் போசணை குறைபாடு காணப்படுகிறது. போசணை குறைபாடுடைய சந்ததிகள் மெதுவாக உருவாகி வருகின்றனர். பொதுமக்களின் வருமானம் மின்சாரக் கட்டணத்திற்கும் மருத்துவச் செலவிற்கும், பிள்ளைகளின் கல்விச் செலவிற்கும், போக்குவரத்துச் செலவிற்கும்  போதாமல் இருக்கிறது. மூன்று வேளையும் உணவு உண்ண முடியாமலும், தேவைக்கேற்ற அளவு  போசனை மிகு உணவு உட்கொள்வதற்கு பொருளாதார சக்தியற்ற நிலையிலும, பலர் அரை வயிறு கால் வயிறு உணவுண்டு வெம்பிய மனதோடு வாழந்து வருகின்றனர்.

யுத்தம் நிலவிய காலப் பகுதியில் இருந்ததை விட தற்போது மக்கள் பொருளாதார கஸ்டத்தை அனுபவிக்கின்றனர். உண்மையில் அவர்கள் பொருளாதார யுத்தத்தில் சிக்கி தினம் தினம் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். கீழ மட்ட வருவாயை உடைய மக்களும் , நடுத்தர வருமான முடைய மக்களும் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவெனும் கனரக வாகனத்தில் மோதுண்டு நசுங்கிப் போயிருக்கிறார்கள். இவ்வாறு, அரசாங்க ஊழியர்கள் , தோட்டத் தொழிலாளர்கள், மற்றும் தனியார் துறை ஊழயர்கள் விலைவாசி அதிகரிப்பினால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக மாத வேதனம் பெறுகின்ற ஊழியர்கள் வேதனத்தை பெற்று சில தினங்களில்  கையில் பண இருப்பு அற்றவர்களாகவும், அடுத்து வரும் நாட்களை  எப்படி கடத்துவது என்ற சிந்தனையில் வாடுபவர்களாகவும் உள்ளனர். 'வரவு எட்டனா செலவு பத்தனா' என்ற நிலை அவர்களுடையதாகும்.

இந்நிலையில், நாட்டில்; பண வீக்கம் அதிகரித்துள்ளது.  பொது மக்களின் சேமிப்பு குறைவடைந்துள்ளது. மக்கள் தமது நகைகளை வங்கிகளிலும் நகை அடகு பிடிக்கும் நிலையங்களிலும் அடகு வைக்கின்றனர். பலரது நகைகள் மீண்டும் மீட்க முடியாமல்  அறுதியாகி வருகின்றன. பலரது காணிகள் ஈடு வைக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஒரு தரப்பினர், பொருளாதார சுபீட்சத்;திற்காக உயிரை பணயம் வைத்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக பயணம் செய்கின்றனர். இவர்கள் தமது நகைகளையும் உடைமைகளையும் விற்று அல்லது கடன் பெற்றே அங்கு செல்ல முயற்சிக்கின்றனர்.  இவர்களில் சிலர் கடலில் முழ்கி பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர். பெரும்பாலானவர்கள் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் உண்மையான புகலிடக் கோரிக்கையாளர்கள் இருப்பது வேறுவிடயம்.
அரசாங்க ஊழியர்களில் பெரும்பாலானவர்கள்  தமக்குரிய சகல விதமான கடன்களையும் பெற்று, பின்னர் எஞ்சிய மாத வேதனத்தில் கஸ்டத்துடன் வாழ்க்;கை நடத்துகின்றனர்.
அதேபோன்று, வறுமைக் காரணமாக தமது பிள்ளைகளை விட்டுவிட்டு பெண்கள் அரபு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்கின்றனர். இதன் காரணமாக பிள்ளைகள் உடல், உள ரீதியில் பாதிக்கப்படுவதுடன், சமூக பிரச்சினைகள் தோன்றியுள்ளன.


வரி அதிகரிப்பு

நாட்டில் அத்தியவாசியப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கும் சேவைகளுக்கும் அதிகரித்த அளவு வரிகள் அறவிடப்படுகின்றன.
உதாரணமாக, எரிபொருளுக்கு அதிக அளவில் வரி அறவிடப்படுகிறது. ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 43 ரூபா 50 சதம் வரி அறவிடப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளன: பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரிக்கின்றன. எரிபொருட்களுக்கு  அதிக வரி அறவிடப்படுகின்ற போதிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்திலேயே இயங்குகிறது.


சட்டவிரோதமாக சம்பாதிக்கும் குழுவினர்

இவ்வாறு, பொது மக்கள் பொருளாதார புயலில் சிக்கித் தவிக்கும் போது இன்னொரு குழுவினர் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர்.
நாட்டில் போதைப் பொருள் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. கொள்கலன்களில் 100 கிலோகிராம் 200 கிலோகிராம் என்று ஹெரோயின் போதைப் பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தையில் ஹெரோயின் தாராளமாகக் கிடைக்கிறது. எத்தனோல் இறக்குமதியும் அவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போதைப் பொருள் வியாபாரிகளும் சட்ட விரோத மதுபானம் தயாரிப்போர் மற்றும் கள்ளச் சாராய வியாபாரிகளும் நாட்டில் அதிகாரம் படைத்தவர்களாக உலா வருகின்றனர். அவர்களுக்க அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பது பகிரங்.கமானது. சில அரசியல்வாதிகள் மேற்படி சட்டவிரோத செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல ஆளும் தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

அரசியலுக்கு வரும் போது முச்சக்கர வண்டி ஒன்றுக்கு கூட உரிமையாளராக இல்லதவர்களின் வீட்டு வாசலில் பலகோடி ரூபா பெறுமதியான நவீன ரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்னும்; சில அரசியல் வாதிகள் தாம் சட்ட விரோதமாக சம்பாதித்த கறுப்புப் பணத்தை சுவிஸ் வங்கி உட்பட வெளிநாட்டு வங்கிகளில் இரகசியமாக சேமித்து வைத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றச்hட்டு சுமத்தி வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் முகமூடி நபர்கள் ஆயுத முனையில் நிதி நிறுவனங்களிலும், நகை கடைகளிலும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். சிலர் கைது செய்யப்பட்டாலும்,  பல சந்தர்ப்பங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இது வரை மீட்கப்படவில்லை. நீர்கொழும்பு நகரில் இடம்பெற்ற  வெளிநாட்டு நாணய மாற்று முகவர் நிலையம் மற்றும் நகை கடைகளாக இயங்கிய நிலையங்கள்; இரண்டில் இந்த வருடம் ஆயுத முனையில் முகமூடி நபர்களால் கொள்ளையிடப்பட்ட பல கோடி ரூபா பணம் மற்றும் நகைகள் இதுவரை மீட்கப்படவில்லை என்பது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
கொள்ளைச் சம்பவங்கள் போன்று திருட்டுச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருளுக்கு அடிமையானோர் மற்றும் தொழிலற்ற இளைஞர்கள் இந்த திருட்டுக்களில் பெரும்பாலும் ஈடுபடுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சிறுவர் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபடுவதும், என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. எமது நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளும்  இங்கு  வல்லுறவுக்குட்படுத்தபடுவதும் , பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதும் அவ்வப் போது நடந்து வருகிறது.
நாட்டில்  சட்டம் ஒழுங்கு இல்லாத போது, வருமை, விரக்தி அதிகரிக்கும் போது இது போன்ற சட்ட விரோத செயல்கள் இடம்பெறுவது அதிகரித்து காணப்படும் என்று சமூக ஆய்வாளர்;கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றின் வாழ்க்கைச் செலவினம்

இந்நிலையில, எமது நாட்டில நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றின் வாழ்க்கைச் செலவினத்தை அரச புள்ளி விபரத் திணைக்களம் கணிப்பிட்டிருப்பதாக   பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்து,  அதனை விபரித்துள்ளார். அதன்படி பெருந்தோட்டத்துறையின் தொழிலாளர் குடும்பமொன்றின் மாதாந்த வாழ்;கைச் செலவினமாக 29 ஆயிரத்து 779 ரூபாவும்,  கிராமப்புற மக்களின் குடும்பமொன்றின் வாழ்;கைச் செலவினமாக 37 ஆயிரத்து 561 ரூபாவும், நகர் புற மக்களின் மாதமொன்றுக்கான வாழ்;கைச் செலவினமாக 59 ஆயிரத்து ஒரு ரூபாவும் அமைச்சர் பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
; ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கடந்த வியாழக்கிழமை (24) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். குடும்பமொன்று சீவிப்பதற்குத் தேவைப்படும் மாதாந்த செலவினத் தொகை, குறிப்பிட்ட குடும்பம் ஒன்றுக்கு மாதமொன்றில் உணவுத் தேவைக்கான செலவு மற்றும் உணவு அல்லாத செலவு  ஆகியவை தொடர்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  எந்தளவு காணப்படுகிறது? என்று அவர் எழுப்பிய  கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதி நிதி அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார்.

 மூன்று பேர் உள்ள குடும்பமொன்று 2500 ரூபாவினால் வாழ்க்கை நடத்த முடியுமென இதற்கு முன்னர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.
அரச புள்ளி விபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதன்படி எமது நாட்டு மக்கள் சீவிப்பதற்கு  அத்தகைய வருமானம்  அவர்களுக்கு கிடைக்கிறதா? அல்லது அந்த தொகை போதுமானதா?
எமது சமூகத்தில் கணவன் மனைவி இருவரும் தொழில் செய்வது எல்லா வீடுகளிலும் காணப்படுவதில்லை. பல கணவன்மார்கள் தொழில் இன்றி இருக்கின்றனர். அல்லது உழைப்புக்கேற்ற வருமானம் இன்றி கஸ்டப்படுகின்றனர். நடுத்தர வருமானமுடைய ஊழியர்களின்  சம்பளத்தின் கணிசமான பகுதி போக்குவரத்துக்காகவும் பிள்ளைகளின் கல்விக்காகவும்;, மின்சார கட்டணத்திற்காகவும் செலவிடப்படுகிறது. இந்நிலையில், இருவர் உழைத்தாலும் வாழ முடியாத நிலையே காணப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விடயத்திலும் அத்தியாவசியப் பொருட்களினது விலைகளை குறைக்கும் விடயத்திலும்  அரசாங்கம்  தோல்வி கண்டு நெடுநாளாகிறது.
யுத்தத்தின் போதும் யுத்த வெற்றியின் பின்னரும் பொறுமையுடன் இருந்த மக்கள் தற்போது பொறுமையின் விழிம்பிற்கு வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில், யுத்தத்தையும் யுத்த வெற்றியையும் காட்டி  தொடர்ந்து அரசியல் செய்ய முடியாத அரசு, அடுத்த கட்டமாக இனவாதத்;தை தூண்டி அதில் இலாபம் அடைய முனைவதாக எதிர்கட்சிகள் பகிரங்கமாக சுட்டிக்காட்டி வருகின்றன. அதற்கேற்றாற் போலவே  பேரினவாத குழுக்களின்  செயற்பாடுகளும் அமைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.
இந்நிலையில் மக்கள் தாம் எதிர்;நோக்கும் சகல பிரச்சினைகளில் இருந்தும் தம்மை மீட்கக் கூடிய மீட்பர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.  
அந்த மீட்பரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுப்பர் என்று அரசியல் ஆய்வாளர்கள்  நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.;



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்