பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, August 27, 2014

சிறுபான்மை மக்களை அடக்கி பெரும்பான்மையின மக்களை நம்பி தேர்தலில் குதிக்கத் தயாராகும் அரசு! - தேச நேசன்


(இக்கட்டுரை 24-8-2014 அன்றைய தமிழ்த் தந்தி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)

படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள 400 வருடம் பழமை வாய்ந்த திருகோணமலை வெள்ளை மணல் கருமலையூற்று பள்ளிவாசல்  இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
 பிரதேசத்தில்  கடும் மழை பெய்து கொண்டிருக்கையில்  அந்த  நேரத்தைப் பயன்படுத்தி கனரக இயந்திரத்தைக் கொண்டு பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளி நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு மீண்டும் ஒரு தடைவை முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது தாக்குதலை  மேற்கொண்டு பேரினவாதம் உவகை அடைந்துள்ளது. பள்ளிவாசல்கள் மீது விலங்குகளின் கழிவுகளை கொட்டியும், தீ வைத்து எரித்தும், சிறிய குண்டுகளால் தாக்கியும், கற்களையும் கழிவு எண்ணெய்களை வீசியும்  தாக்குதல்களை மேற்கொண்டு,  தமது வெறுப்பைக்காட்டிய பேரினவாதம், தற்போது  கனரக இயந்திரத்தை பயன்படுத்தி  பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைகள், சொத்துக்கள் , சமயத்தலங்கள் கலாசாரங்கள் போன்றவை மீது பேரினவாதிகள் மேற்கொள்ளும் அடக்குமுறைகளால், தாக்குதல்களால், அடாவடித்தனங்களால்  அரசாங்கத்திற்கும் சிறுபான்மை மக்களுக்குமிடையிலான  இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது.
 பெரும்பான்மை பௌத்த மக்களின் வாக்குகளை நம்பியிருக்கும் இந்த அரசாங்கம் இந்த இனவாத  செயற்பாடுகளினால் நடு நிலை வகிக்கும் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளையும் இழக்க வேண்டி வரும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
; கருமலையூற்று பள்ளிவாசல்  அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்திற்கு பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வரும் முஸ்லிம் மக்கள் மீதான அடாவடி நடவடிக்கைகள் தொடர்பாகவும் கத்தோலிக்க மக்களுக்க எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொதுபல சேனா மீதும் ராவணா பலய மற்றும் சிஹல ராவய மீதும் சில அரசியல்வாதிகள் மீதும் பகிரங்கமான முறையில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில். அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொது பல சேனாவின் நடவடிக்கையினால் அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், இப்படியே சென்றால் தனியாக சிங்கள வாக்குகளை மட்டுமே பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் எனவும், பொதுபல சேனா அமைப்பு உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் தமிழ் வாக்குகளும், பொது பல சேனாவினால் முஸ்லிம் வாக்குகளும் இழக்கப்பட்டுள்ள நிலையில், கத்தோலிக்க மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்முறைகளினால், அவர்களின் வாக்குகளும் இழக்கப்பட்டிருப்பதாகவும் பொது பல சேனாவின் நடவடிக்கையினால்  சிங்கள மக்களின் வாக்குகளும் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ள இந்த கருத்து தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
இனி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது சிறுபான்மை மக்கள் அனேகமாக ஒரே நிலைப்பாட்டில் இருக்கக் கூடிய களநிலையே தற்போது காணப்படுகிறது. இதற்குப் பிரதான காரணம் பொதுபல சேனா உட்பட பேரினவாத அமைப்புக்களின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளும் அதனை கட்டுப்படுத்தாத அல்லது கண்டு கொள்ளாத அரசாங்கத்தின் நிலையுமேயாகும்.
பொதுபல சேனா அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும்  சவால்விடும் அமைப்பாகவும் உள்ளது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் பல தடைவைகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் அதிரடியாக இன்னொரு விடயத்தை தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தாம் களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ள விடயமே அதுவாகும். சிங்கள பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட தமது அமைப்பின் யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் அறிவிக்க உள்ளதாகவும,; அவ்வாறு இந்த யோசனைக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாயின் தாம் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
அதேபோன்று தாம் ஆதரிக்கவுள்ள பொது வேட்பாளர் யார் என்பதை செப்டம்பர் மாதம் அறிவிக்கவுள்ளதாகவும் கலகொட அத்தே ஞான சார தேரர் அறிவித்துள்ளார்.

பொதுபல சேனாவினால் நிறுத்தப்படும் வேட்பாளர்  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பது  பெரிய விடயம் அல்ல. ஆனால,; அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வாக்குகளில் இது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாகும். ஆயினும், பொதுபல சேனாவுடன் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ இணைந்து செயற்படுவதால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகளை விட, அந்த அமைப்பை தவிர்த்துக் கொள்வதால் அல்லது கட்டுப்படுத்துவதால் அரசாங்கம் அதிகம் நன்மை அடையும் என்பது நிதர்சனமாகும்.
அதிகரித்துச் செல்லும்; மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள்; இனிமேல் நடைபெறப்போகும்  பிரதான தேர்தல்களில் தாக்கம் செலுத்தவுள்ளதால், அதன் எதிரொலி அரசாங்கத்திற்கு பாதகமாகவும் எதிர்கட்சியினருக்கு சாதகமாகவும்  இருக்கப்போகிறது. இந்நிலையில், பொதுபல சேனா போன்ற பேரினவாத அமைப்புக்களின் நடவடிக்கைககளும் எதிர்கட்சியினருக்கு சாதகமாகவே இருக்கப்போவது நிச்சயமாகும்.
நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்களின் போது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டதுடன் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதை அரசாங்கம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த தேர்தலின் போது முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் பெரும்பாலும் எதிர்கட்சிகளுக்கே வாக்களித்தனர். பெரும்பான்மையின மக்களின் வாக்குகளும் எதிர்கட்சிகளுக்கு சென்றன. ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.  முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் பலர் தெரிவ செய்யப்பட்டனர்.

அதாவது, சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி மேல் மாகாண சபைத் தேர்தலில் 9 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன், தென் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. மேல் மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி. 6 ஆசனங்களையம், தென் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பி ஐந்து ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.

அதேபோன்று, கடைசியாக நடைபெற்ற தென் மாகாண சபை தேர்தலை 2009 ஆம் நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடுகையில்; தென்மாகாணத்தில் அரசின் வாக்கு பலம் சரிந்துள்ளது. என்பது விளங்குகிறது. தென் மாகாண சபையில் 38 ஆக இருந்த அரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக குறைந்துள்ளது. 68 வீதமாக இருந்த வாக்கு வங்கி 58 வீதமாக குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு முழுமையாக கவனம் செலுத்திய மாவட்டம் அம்பாந்தோட்டை மாவட்டமாகும். இது ஆளும் குடும்பத்தின் சொந்த மாவட்டமாகும். தேர்தல் முடிவுகளின்படி இந்த மாவட்டத்தில்  ஆளும் தரப்பின் வாக்கு வங்கி 67 வீதத்திலிருந்து 57 வீதமாக குறைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் 68 வீதமாக இருந்த  வாக்கு வங்கி 59 வீதமாக குறைந்துள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 12 இல் இருந்து 10 ஆக குறைந்துள்ளது.

அதேபோன்று காலி மாவட்டத்தில் 68 வீதமாக இருந்த  வாக்கு வங்கி 57. 5 வீதமாக குறைந்துள்ளது. அத்துடன் காலி தேர்தல் தொகுதியையும் அரசு இழந்துள்ளது. காலி மாவட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 16 இல் இருந்து 13 ஆக அரசுக்கு குறைந்துள்ளது. கம்பஹா மாவட்டத்திலும் அரசின் வாக்கு வங்கி 69 வீதத்திலிருந்து 58 வீதமாக குறைந்துள்ளது. அங்கு 4 உறுப்பினர்களை அரசு இழந்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 69 வீதத்லிருந்து 59 வீதமாக வாக்கு வங்கி குறைந்துள்ளது. ஒரு உறுப்பினரையும் இழந்துள்ளது. அதேபான்று, கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கம் 7 உறுப்பினர்களை இழந்துள்ளது என்று மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி  அப்போது வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில தரவுகளை  இப்போது ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

அதேபோன்று, அடுத்த மாதம்  நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலிலும் அரசாங்கத்தின் வாக்கு வங்கியில்; சரிவு ஏற்படுமாயின் அது நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை அரசாங்கமும் உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே ஊவா தேர்தலின் பின்னரே அடுத்து நடைபெற இருப்பது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பதை அரசாங்கம் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிலவேளை,  ஊவா தேர்தல் முடிவுகளின் பின்னர் இந்த இரண்டு தேர்தல்களையும் தள்ளிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஊவாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது முழு நாட்டிலும் எதிரொலிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட,  அரசு பின்னடைவை சந்தித்து எதிர்கட்சிகள் மேலும் பலமடைந்தாலும் அதுவும் பிரதான தேர்தலின் போது  அரசாங்கத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, அரசாங்கம் சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி கொள்ள வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறுவதாகக் காணோம். நாளுக்கு நாள் சிறுபான்மை இனங்களின்; வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கைகளே நடைபெற்று வருகின்றன.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளை  கொண்டு ஆட்சி அமைக்க முடியும் என்று அரசு கனவு காணுமானால், அந்த கனவு கானல் நீராகிப் போகலாம். அதற்கான ஆதாரங்கள் இந்த பத்தியில் குறித்துக் காட்டப்பட்டுள்ளன.

 இந்த அரசாங்கம் சகல  இன மக்களினதும் அரசாங்கமாகும் என்று அதன்  தலைவர்கள் மேடையில் மட்டும் பேசினால் போதாது, செயலிலும் காட்ட வேண்டும். மக்களே தீர்ப்பாளர்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்