பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, September 7, 2014

ஆடைத் தொழிற்சாலை யுவதி சமிலா திசாநாயக்காவை வல்லுறவு புரிந்து கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டணை (கட்டுரை) - எம்.இஸட்.ஷாஜஹான்

        நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலையொன்றில்  பணியாற்றிய இளம் யுவதி ஒருவர் வைத்தியசாலையில் வைத்து வைத்தியர் ஒருவரினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலை கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை  பலருக்கும் அன்று அதிர்ச்சி அளித்த விடயமாக இருந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் (12-11-2007அன்று) நடைபெற்று இக்கொடூரச் சம்பவத்திற்கான தீர்ப்பு கடந்து புதன்கிழமை (3-9-2014)
நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

ஆம். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரான இந்திக சுதர்சன பாலகே ஜயதிஸ்ஸ என்பவருக்கே நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இச்சம்பவத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்த சமிலா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதியே பலியானவராவார்.
குறித்த படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒரு வைத்தியர் என்பதும் குறித்த சம்பவம் வைத்தியசாலையில் இடம்பெற்றமையும்படுகொலை செய்யப்பட்டவர் சிகிச்சைப் பெற வந்த ஆடை தொழிற்சாலை யுவதி என்பதும்யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகமும்அதற்கான ஆதாரங்களும் இச்சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்க்கக் காரணமாக அமைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.












சந்தேக நபரான வைத்தியருக்கு எதிராக  பாலியல் வல்லுறவு புரிந்தமை மற்றும் கொலை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டடிருந்தன.  கொலை குற்றச்சாட்டுக்காக மரண தண்டனையும், பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்காக 15 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஆறுமாத கால சிறை தண்டனை வழங்கவும் நீதிவானால் உத்தரவிடப்பட்டது.
ஆய்வு பூர்வமான சாட்சிகள், ஆதாரங்கள் மூலமாக  பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீரூபிக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிட்ட நீதவான், ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் தினம் ஒன்றில் மரண தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் பிரதிவாதிக்கு கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

'நீதிமன்றத்தால் சமிலா திசாநாயக்காவுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைப் போன்று, எனக்கும் நீதி கிடைக்க வேண்டும்.  இத்தனைக் காலமும் எனக்கு அவமரியாதைகளும் அவமானமுமே கிடைத்தது. அதனை நான்; பொறுத்துக் கொண்டேன். பொலிஸார் எனக்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனது கைவிரல் அடையாளம்  தொடர்பாக பொலிஸார் குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள போதும,; அது ஏன் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் இன்னும்   நீர்கொழும்பு வைத்தியசாலையில்  உள்ளனர். உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். என எதிரியான வைத்தியர் இந்திக சுதர்சன பாலகே  தீரப்பு வழங்குவதற்கு முன்னர் நீதிவானிடம் குறிப்பிட்டார்.


தீர்ப்பு நாள் அன்று










கடந்த  ஏழு வருடங்களாக பலரும் எதிர்பார்திருந்த அந்த தீர்ப்பு நாளான கடந்த புதன்கிழமை (3-9-52014) நீர்கொழும்பு நீதிமன்ற சூழல் பெரும்பரபரப்புடன் காணப்பட்டது. ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வாளர்கள், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், கொலை செய்யப்பட்ட சமிலா திசாநாயக்காவின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள்;, சுதந்திர வர்த்தக வலய  மற்றும் பொது சேவா சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள், பெண்கள் அமைப்பு உறுப்பினர்கள் என பலரும் அங்கு வருகைத் தந்திருந்தனர். அன்று காலை பிரதிவாதி நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட யுவதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ், சட்டத்தரணி துசிர மெலேவ்வென்த்றி ஆகியோர் மன்றில் ஆஜரானார்கள்.
இந்நிலையல், இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாகவும் , வழக்கு விசாரணை தொடர்பாகவும் சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.


சமிலா திசாநாயக்க கொலைச் சம்பவம்

12-11-2007 அன்;று பகல் வேளையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.
தன்னிடம் சிகிச்சைக்காக வந்த யுவதியை குறித்த வைத்தியர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின் பின்னர் அடுத்த நாள் (13-11-2007 அன்று) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அப்போதைய நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மஹிந்த பிரபாத்சிங்க சம்பவ இடங்களை பார்வையிட்டதுடன்  வைத்தியசாலையில் ஆறாவது மாடியில் உள்ள வைத்தியரின் அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
 வைத்தியரின் தங்கியிருந்த அறைக்கு முன்னாள் உள்ள அறையில் இருந்து யுவதியின் கைப்பை, உள்ளாடைகள் மற்றும் பாதணி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டன. அத்துடன் மேலும் சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டன.

பின்னர் நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.
இதேவேளை, உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டணை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி 15-11-2007 அன்று நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. கொலை செய்யப்பட்ட யுவதி பணியாற்றிய தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சக தொழிற்சாலை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாகவும் சென்றனர்;.
16-11-2007 அன்று யுவதியின் பூதவுடல் கட்டானை பிரதேசத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் யுவதியின் சொந்த ஊரான மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு 17—11-2007 அன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.



 சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி

இதேவேளை, சந்தேக நபரான வைத்தியர் 16—11-2007 அன்று சிறைச்சாலையில் வைத்து தனது காற்சட்டை நாடாவை பயன்படுத்தி தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் யுவதியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரெட்டிகள் ஒட்டப்பட்டன.

19-11-2007 அன்று யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு பொலிசாரால் சமர்பிக்கப்பட்டது. ராகமை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சீல் வைக்கப்பட்டு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது. அறிக்கையை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

27-11-2007 அன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான வைத்தியர் வைத்தியசாலையின் சிற்றூழியரால் அடையாளம் காட்டப்பட்டார்.
சந்தேக நபருக்கு உரிய தண்டணை வழங்குமாறு கோரி நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமும் அன்றைய தினம் இடம் பெற்றது.

இதேவேளை, 5-12-2007 அன்று இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளித்த வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி எல்.எம். பியற்றிஸ் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் சந்தேக நபரான வைத்தியர் 'கார்ட்போட்' மட்டையொன்றை இழுத்து வருவதை (ஏழாவது மாடியில் படி ஏறும் வழியில் வைத்து ) கண்டதாகவும் அதில் பெண் ஒருவர் படுத்திருந்ததை கண்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தாதி ஒருவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். சந்தேக நபரான வைத்தியரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மஜிஸ்ரேட் அப்போது உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த வழக்கின் பிரதான சாட்சியான வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி எல்.எம். பியற்றிஸ், நீதிமன்றில் சாட்சியமளித்ததை அடுத்து வைத்தியசாலையின்  அப்போதிருந்த சில அதிகாரிகளாலும், வைத்தியர்களினாலும், மேலும் சிலரினாலும் பல்வேறு வகையிலும்  பாதிப்புககு ஆளானார். இதன்காரணமாக அவர் தனது தொழிலை இழக்க வேண்டி வந்தது. அவரது சாட்சியம் இந்த வழக்கில் பிரதானமாக இருந்ததாகவும், அவருக்க நன்றி கூறுவதாகவும், சமிலாவின் சார்பில்  ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ் தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தார்.


யுவதியின் மரணத்திற்கான காரணம்

தொடரந்து இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது யுவதியின் மரணத்திற்கான காரணம் நீதிபதியால் தெரிவிக்கப்பட்டது.
மேலிருந்து கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பும் முள்ளந்தண்டு எலும்பும் முறிந்ததாலும் மண்டையோடு சிதைந்ததாலும் உள்ளே இரத்தம் கசிந்ததாலும் ஏற்பட்ட மரணம் என நீதிபதி குறிப்பிட்டார். யுவதியின் கழுத்தும் நெறிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.
2008ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபரின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதுடன், சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். இவ்வாறு பலதடவைகள் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.


சந்தேக நபர் சிறைச்சாலையில் மீண்டும் தற்கொலை முயற்சி



 15-09-2008 நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து மனமுடைந்த சந்தேக நபர் 24-09-2008 அன்று இரண்டாவது தடவையாகவும் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
2009 ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதி இவ் வழக்கின் இரண்டாவது டி.என். ஏ. (மரபணு) பரிசோதணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

சந்தேக நபருக்கு பிணை

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கினை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு மேலதிக மஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
பின்னர், இக்கொலை வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , சந்தேக நபர் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நீதிவானால் உத்தரவிடப்பட்டார்.


நீதிமன்றம் அருகில் நீதியை பெற்றுக்கொடுக்குமாறு ஆர்ப்பாட்டம்

இந்த வழக்கு விசாரணை 5-3-2013 அன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் ஆரம்பமானது. இதற்கு முன்னர் இந்த வழக்கு விசாரணை சில தடைவைகள் மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்படத்தக்கது.
மீண்டும் வழக்கு விசாரணை ஆரம்பமான அன்று 'மரணத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறும். சந்தேக நபருக்கு உரிய தண்டணையை வழங்குமாறும் வலியுறுத்தி' நீர்கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அருகில் மாநகர சபை மைதானம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முற்பகல் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்
இந்நிலையில், அன்றைய தினம் நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு நடைபெறுவதன் காரணமாக பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு வருகை தந்திருந்த சமிளா திசாநாயக்காவின் தந்தையான திசாநாயக்க முதியானசலாகே அப்புஹாமி தெரிவிக்கையில்,
எனக்கு எட்டு பிள்ளைகள் உள்ளனர், நான்காவது பிள்ளையே சமிளா ஆவார். குடும்ப வறுமை காரணமாகவே அவர் தொழிலுக்கு அனுப்பப்பட்டார். எனது மகள் கொலை செய்யப்பட்டு 5 வருடமாகிறது. நாங்கள் பெரும் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறோம். நீதி நிலை நாட்டப்பட வேண்டும். எமக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்பட வேண்டும் என்றார்.
அன்றைய தினம்; இவ்வழக்கு  ஒத்திவைக்கப்பட்டு  ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரணக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சாட்சிகள் சிலரிடம் விசாரண செய்யப்பட்டன.
நீர்கொழும்பு கொலை செய்யப்பட்ட சமிளா திசாநாயக்கவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியரான அசேல அதிகாரி சாட்சியமளிக்கையில,; சமிளா திசாநாயக்கவுக்கு அடிக்கடி நினைவு திரும்பி சுயநினைவிழந்தார். அபாயகரமான நிலையில் இருந்த சமிளாவுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கபட்டது.
அதன் போது அவருக்கு சிகிசசை அளிப்பதற்காக அவரது யோனி ஊடாக 'சேலைன் டியூப்' (சிறு நீர் வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் டியுப்) ஒன்றை உட்செலுத்த முயன்ற போது யோனியிலிருந்து; இரத்தப் வெளியேறிக் கொண்டு இருந்தது என்றார்.
 அதன் பின்னர் நீதிமனற் விசாரணைகள் பல தடைவைகள் இடம் பெற்றன. சாட்சிகள பலர் விசாரணை செய்யப்பட்டனர்.

 
சமிலா கொலை வழக்கின் தீர்ப்பு

 இன்று மக்களின்  இயல்பு வாழ்க்கைக்கும்  நாட்டின் நற்பெயருக்கும் பெரும்  சவாலாக  இருக்கும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு சமூகஅரசியல், பொருளாதார சட்ட ரீதியான பல காரணங்களும்   வேறுபல  காரணங்களும் இருப்பதாக  பல்வேறு தரப்பினராலும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வல்லுறவுச் செய்யப்பட்ட பின்னர் சிறுவர்களும் பெண்களும் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதும், பின்னர் அவர்கள் பிணையில் வெளிவருவதும், பிணையில் வெளிவந்த பலர் அதே குற்றச் செயலை மீண்டும் புரிவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. சட்டங்களும் குற்றச் செயல்களுக்கான  தண்டணைகளும் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமிலா திசாநாயக்கா கொலை வழக்கிற்கான தீர்ப்பு முக்கிய இடத்தை பெறுகிறது. கொலையாளி என சந்தேகிக்கபடுபவர் ஒரு வைத்தியர், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர் ஆடை தொழிற்சாலையில் தொழில் செய்த ஒரு ஏழை யுவதி.
 நீதிமன்ற விசாரணையின் முடிவில் சந்தேக நபரான வைத்தியர் குற்றவாளியாகக் காணப்பட்டுளளதால், வைத்தியத்துறையில் உள்ளவர்களுக்கு இது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம.; ஆயினும்அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடிய வைத்தியர்கள் எமது நாட்டில் பலர் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேயாகும் என்றவாறு  தற்போது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.


சமிலாவின் பெற்றோர் நன்றி தெரிவிப்பு



இதேவேளை, நீதிமன்றிற்கு  வருகை தந்திருந்த சமிலா திசாநாயக்காவின் பெற்றோர்கள், ஊடகங்களுக்கு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்ஏழு வருடங்களின் பின்னர்  தமக்கு நீதி கிடைத்திருக்கிறது. இதற்காக ஆஜரான சட்டத்தரணிகளுக்கும், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும் , பல்வேறு வகையிலும் உதவியவர்களுக்கும், சகல ஊடகங்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம் என்றனர்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர்  வைத்தியர் இந்திக சுதர்சன பாலகே நீதிமன்றில் அமைதியாகக் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. ஆயினும், அங்கு வந்திருந்த பலரது முகங்களிலும் தீர்ப்பு குறித்து திருப்தி காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
ஆயினும், இழந்த உயிரை யாராலும் மீட்டுத் தர முடியாது என்பதை சமிலா திசாநாயக்காவின் பெற்றோரின் முகங்களில் தெரிந்த சோகம்; வெளிப்படுத்தியது.
இந்த வழக்கின் தீர்ப்பானது இனி வரும் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை தொடர்பான பல வழக்குகளின் போது நீதிமன்றில் வாதிடும் சட்டத்தரணிகளுக்கும், நீதி வழங்கும் நீதிபதிகளுக்கும்  சட்ட ஆதாரமாகவும், உதாரணமாகவும் அமையப் போவது நிச்சயமாகும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்