பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Sunday, August 18, 2013

'சர்வதேசம் வரை சென்ற பள்ளிவாசல் தாக்குதலும் தொடர்ந்து எழுந்த எதிரொலிகளும் கண்டனங்களும்’

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமானது முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுத்தி நிற்கிறது.
ஹலால் விவகாரம் , அபாயா விவகாரம் , பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினைகள் என தொடர்கதையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளை  வெற்றி கொள்ளக் கூடிய ஒரே ஆயுதம் முஸ்லிம்கள் கட்சி பேதங்கள்; , பிரதேச பேதங்கள், ஜமாஅத் பிரிவு பேதங்களை மறந்து ஒற்றுமையெனும்
கயிற்றை பற்றிப் பிடித்து நின்று எதிரிகளை எதிர்கொள்வதுதான்.
ஆனால், அவ்வாறான நிலை இல்லை என்பதை கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களும் அதற்கு முன்னதாக  நோன்புப் பெருநாள் பிறை தொடர்பாக எழுந்த பிரச்சினைகளும் எடுத்துக் காட்டியுள்ளன.

முஸ்லிம் அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்களும் சில இஸ்லாமிய மதத் தலைவர்களும் அரசாங்கத்தின் முன்னாலும் மதக் கடும்போக்காளர்கள் முன்னாலும் கையாலாகாதவர்களாகவும்;, சுயநலமிகளாகவும் நிற்கின்ற நிலையையும் கிரேண்ட்;பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளதாக பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பின்னர் இடம்பெற்ற பேச்சவார்த்தையின் போது இரு ஜமாஅத் பிரிவினர்க்கிடையில் கருத்து முரண்;பாடு ஏற்பட்டது. ஒரு பிரிவினர் பேச்சவார்த்தையின் போது புறக்கணிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக அந்தப் பிரிவினர் பள்ளிவாசல் தொடர்பான பிரச்சினையிலிருந்து தாங்கள் ஒதுங்கிக் கொள்வதாக இணையத்தளங்களின் ஊடாக தமது கருத்தை தெரிவித்தனர்.
ஓற்றமையுடன் செயல்பட வேண்டியய நிலையில் தமக்குள் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்வது  ஆரோக்கியமானதல்ல. அது முஸ்லிம்களுக்கே பாதகமானதாக அமையும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இதேவேளை, பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான செய்தியை கேள்வியுற்ற முஸ்லிம் இளைஞர்கள் , சிறுவர்கள, பெரியவர்கள் என பல்வேறு தரப்பினரும் பள்ளிவாசலை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அங்கு ஒன்றுகூடியமையும,;;; எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் இல்லத்தை பாதுகாப்பதற்கான உணர்ச்சி பூர்வமானதும் ஒற்றமையுமான செயற்பாடே அதுவாகும்.

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் அறிக்கைகள்
இறை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தமாக்குதல் சம்பவமானது நாகரிகமற்றதும் ஒரு இனத்தின் மீதான உரிமை மீறும் செயலாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்த சம்பவம்  செய்திகள் உள்நாட்டில் மட்டுமல்லாது அமெரிக்கா உட்பட வெளிநாட்டு ஊடகங்களின் இடம்பெற்றன. இது தொடர்பான செய்திகள் அரபு நாடுகள் உட்பட வெளிநாட்டு ஊடகங்களில் அதிகளவில் இடம்பெற்றள்ளதாக அறியவருகிறது. இச்சம்பவம் நாட்டுக்கு பெரும் அபகீர்;த்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிவால் தொடர்பான தாக்குதலுக்கு ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்ளை கிராண்ட்பாஸ் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ள அமெரிக்கா அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலிறுத்தியுள்ளதோடு, தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிவேரியவில் இம்மாதம் முதலாம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் மூவர் உயிரிழந்தமை மற்றும் கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் உள்ளிட்ட வணக்கஸ்தலங்கள் மீதான ஏனைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

 ஜனநாயக சமூகங்களின் அடிப்படை அம்சங்களான அமைதியாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான உரிமை மற்றும் மத வழிபாட்டுச் சுதந்திரம் என்பன அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
இதுதொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை அதிகாரிகள் விரைவானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அனைத்து இலங்கையர்களும் தமது மனித உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்குரிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   


அன்று நடந்தது என்ன?

2013 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கொழும்பு கிராண்டபாஸ் (கொழும்பு 14)  மோலவத்தை சுவர்ண சைத்திய வீதியின் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயில் மீது ஆயுதம் தாங்கிய பௌத்த கடும் போக்காளர்களால் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் கீழ்த்தரமான தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டது.

முஸ்லிம் மக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிய மறுநாள் குறித்த பள்ளிவாயல் மீதும் அருகில் அமைந்திருந்த முஸ்லிம்;களின் வீடுகள் மீதம் பொலீஸாரின் ஆதரவுடன் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோலாவத்தைப் பள்ளிவாயல் முதலில் 1966ஆம் ஆண்டு மரத்தினால் கட்டப்பட்டபோது 20 முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே இப் பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது 430 முஸ்லிம் குடும்பங்கள் இப்பள்ளிவாயலில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் இந்தக் குடும்பங்களில் 800 இற்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கையில் பாதிக்கப்பட்ட 24 வது பள்ளிவாசலாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாளுக்கு அடுத்த தினம் சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினரும் பௌத்த பிக்குகள் சிலரும் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காகத் திரண்டனர். மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாசல் முழுவதையும் சேதப்படுத்தியுள்ளனர். பள்ளியை காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அத்துடன் பள்ளிவாசல் முழுவதுமாக தாக்கப்படும் வரை அவர்கள் எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் பள்ளிவாசலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு பள்ளியின் வாயிற் கதவு அகற்றப்பட்டு அருகில் இருந்து அழுக்கு ஓடைக்குள் வீசியெறியப்பட்டது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கிகின்றனர்.  

பள்ளிவாசலை தாக்கிக் கொண்டிருந்த குழுவினரை பொலிசார் வெளியேற்றாமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு சென்ற தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின் இடத்தை விட்டு அப்புறப்படுத்துமாறு பொலிசாரிடம் வேண்டிக் கொண்ட போhதும் பொலிசார் அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேற்றவோ முயற்சிக்கவில்லை. எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 ஆனால,; பள்ளிவாசலை உடைக்க வந்த காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளியை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் பொலிஸார் கண்ணும் கருத்துமாக இருந்ததாக முஸ்லிம்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

கிராண்ட்பாஸ் அல்லது கொழும்பு - 14 என்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலாயர் மற்றும் பறங்கியர் ஆகியோர் ஒற்றுமையாக வாழும் பல்லினப் பிரதேசமாகும். அந்த ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலேயே அண்மைக்காலச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரச்சினையை தொடர்ந்து பௌத்த சாசனம் மற்றும் மதவிவகார அமைச்சில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றவும் அதனருகில் உள்ள பழைய பள்ளிவாசலை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 பழைய பள்ளிவாசலை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பழைய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள போதி மரத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தை பள்ளிவாசலுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டன.
பிரச்சினை ஆரம்பமான சனிக்கிழமை இரவு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலையில் தளர்த்தப்பட்டிருந்த போதிலும், இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை இரவும் காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாவது தினமும் சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றமையே இதற்கான காரணமாகும்.
இச்சம்பவத்தினால் மோலவத்தை , கிரேன்ட்பாஸ், கெத்தாராம, மாளிகாவத்தை, மருதானை உட்பட கொழும்பின் பல்வேறு பிரதேசங்களிலும் வாழும் முஸ்லிம்கள் அச்சத்தின் மத்தியில் இருந்தனர்.


பிரச்சினைக்குத் தீர்வு?

இதேவேளை, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டாலும் புதிய பள்ளிவாசல் மூடப்பட்டமை தொடர்பாக பெரும்பாலானவர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் பல்வேறு செயற்பாடுகளுக்கும் திட்டங்களுக்கும்  கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பான விட்டுக் கொடுப்பானது பெரும் உந்து சக்கதியாக அமைந்துவிடும் என் பல்வேறு தரப்பினரும் எதிர்வு கூறியுள்ளனர்.
இந்த பிரச்சினையில் பெரும்பான்மையின மேலாதிக்கம் வெற்றி பெற்றுள்ளதாகவே கருதப்படுகிறது. இதற்கு முன்னர் இடம்பெற்ற பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இது வரை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிவாசல் ஒன்றின் மீது  பன்றியின் உடற் பாகங்கள் வீசப்பட்டு இறைவனின் இல்லம் மாசுபடுத்தப்பட்டது. இதுவரை எவரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இவை எல்லாம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மனதை பெரிதும் கவலைகொள்ளச் செய்த விடயங்களாகும்.

இதேவேளை, கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தினை நோக்கிய மதம் சார்ந்த குரோத மனப்பான்மையை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்தப் போக்கை தடுத்து நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்குமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம் எனவும், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை மற்றும் யுத்தத்தை முடிவு கட்டியமை ஆகியவை அனைத்துப் பிரஜைகளினதும் சமாதான சகவாழ்வுக்கு வழி கோல வேண்டுமே தவிர தனித்த ஒரு மக்கள் குழுவின் மேலாக்கத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமொன்றாக அர்த்தப்படுத்தப்பட்டு விடக்கூடாது. அரசின் அமைச்சர்கள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் தங்களை விநயமாக வேண்டுகின்றோம் எனவும் மேலும் பல விடயங்களுடன் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அறிக்கைகளை கூட்டாக வெளியிட்டமை நல்லதுதான.; ஆயினும், வெறும் அறிக்கைகளை வெளியிடுவதால் மட்டும் முஸ்லிம் சமூகம் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது. மக்களின் பிரிதிநிதிகளான முஸ்லிம் தலைவர்கள் இறைவனுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே, தொடர்ச்சியாக இடம்பெற்ற வரும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் எடுக்க வேண்டும். இந்த பதவிகள் பட்டங்கள் என்றாவது ஒரு நாள் இல்லாமற் போலாம். மறுமையில் இதற்கான பதிலை இந்தத் தலைவர்கள் இறைவனுக்கு கூறவேண்டிவரும்.

 'ஜெனீவாவில் அரசாங்கத்துக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் தலைவர்களுக்கு கிராண்ட்பாஸ் தாக்குதல் மூலமாக மதவாதிகள் ரமழான் பரிசு தந்துள்ளார்கள்  எனவும் அப்பாவி முஸ்லிம்களுக்கு நேர்மையான தலைமைத்துவம் வேண்டும் ஜனநாயக மக்கள்  முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்து கவனிக்கத்தக்கது.

'யுத்தம் முடிந்த பின்னர் செய்வதாக சொன்ன உறுதி மொழிகளை செய்து காட்டுங்கள் என சொன்ன நவநீதன் பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டி தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரமழான்  பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும்' என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை பிரேரணைகள் இலங்கை நாட்டுக்கு எதிரானவை அல்ல. அவை இலங்கை அரசுக்கு எதிரானவை என நாம் திரும்ப, திரும்ப கூறினோம். அதை கேட்காமல் இந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்நாட்டு  முஸ்லிம்   அரசியல்வாதிகள் முன்னின்றார்கள்.

இவர்கள் இதன்மூலம் இந்த நாட்டை காப்பாற்றவில்லை. மாறாக  இந்த அரசாங்கத்தை பின்னின்று இயக்கும் மதவாதிகளையே  இவர்கள் பாதுகாத்துள்ளார்கள்.  இது இன்று மிகத்தெளிவாக புலனாகியுள்ளது.
இந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் பாதுகாத்த மதவாதிகளே, இன்று இஸ்லாமிய பள்ளிவாசல்களை தாக்கி அழிக்கின்றார்கள். கிராண்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கியழித்து, இவர்கள் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு  ரமழாhன் பரிசளித்துள்ளார்கள்.

இனவாதத்தை முன்னிறுத்தி தமிழர்களை கொன்றழித்த இந்த அரசாங்கம், இன்று மதவாதத்தை பயன்படுத்தி முஸ்லிம் மக்களை  அழிப்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உணர்ந்துள்ளார்களாஎன்பதுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் இந்நாட்டில் முஸ்லிம் தலைமைத்துவம் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு நேர்மையான தலைமைத்துவம் தர வேண்டும் என நான் விரும்புகின்றேன். ஏனென்றால் அப்பாவி முஸ்லிம் சகோதரர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என நான் மனப்பூர்வமாகவே நினைக்கின்றேன். தங்களது அமைச்சர் பதவி வரப்பிரசாதங்களுக்காக இந்த நாட்டில்  பெரும்பான்மை இன, மத வாதங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் வளர்த்துவிடக்கூடாது என நான் கண்டிப்பாக எதிர்பார்க்கின்றேன் என்;று மனோ கணேசன் தெரிவித்துள்ளமை தொடர்பாக ஒவ்வொரு முஸ்லிம் தலைவரும்  தமது இதயத்தைத்  தொட்டு பதில் சொல்ல வேண்டும்.

Nதுவேளை, வெலிவேரிய சம்பவத்தை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் தனது அதிகாரத்துடனும் அனுசரணையுடனும் கிராண்டபாஸ் பள்ளிவாசல் மீது  தாக்குதல் மேற்கொண்டமை மறைக்கக் கூடிய இரகசியமல்ல என்றும் அரசு தனது தேவைக்காக வேண்டி இனவாத செயற்பாட்டை தூண்டிவிடுவது நாட்டுக்கு பயனளிக்கக் கூடியதொன்றல்ல என்றும் ஜே.வி.பி சுட்டிகாட்டியுள்ளது. இதே கருத்தினை ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்துள்ளது

பொது நலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் வெலிவேரிய சம்பவம், கிரேண்ட்பாஸ் சம்பவம் ஆகியன இடம்பெற்றுள்ளமை அரசாங்கத்திற்கு நல்லதல்ல. நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களை சர்வதேசம் உண்ணிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.தொடர்பாடல் வசதிகள் அதிகரித்துள்ள நிலையில் எதனையும் மூடி மறைக்க முடியாது. நடைபெறுகின்ற எந்தவொரு சம்பவமும்; அடுத்த கணம் உலகத்தை சென்றடைந்து விடும்.

கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் (கட்டுரை எழுதப்படும் தனம் வரை)  கைது செய்யப்படவில்லை. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களின் காணொளிகள் இணையத்தளத்தில் உலா வருகின்றன. அங்குள்ள சிசிடிவி கமராக்களிலும் பதிவாகியுள்ளன. ஊடகங்களும் படம் பிடித்துள்ளன.


 பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதும் நீதியை நிலை நாட்ட வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும் 


(நான் எழுதிய கட்டுரை 18-8-2013 அன்றைய 'தமிழ்த்தந்தி' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்