பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, June 4, 2014

ஆளும் கூட்டணிக்குள் ஆதரவு குறைந்து வரும் அரசாங்கம் - தேசநேசன்

 
(இக்கட்டுரை 11-5-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

எமது நாட்டு அரசியல் நிலைவரம் அண்மைக்காலமாக ஆங்கிலத் திரைப்படம் போன்று ; விறுவிறுப்பாக  ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த வேளை எது நடைபெறுமோ? என்று மக்கள் ஊடகங்களின் ஊடாக செய்திகளை அறிவதில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இரவு வேளையில், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் செய்தி அறிக்கைகளை தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றை பார்ப்பது போன்று மக்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
அதற்கு ஏற்ற வகையில் அந்த தொலைக்காட்சி அலைவரிசைகளும் அரசியல்வாதிகளின்  மேடை உரைகளையும், நாடாளுமன்றத்தில் இடம்பெறுகின்ற உரைகளையும் மோதல்களையும் செய்திகளாக சுவைபடத் தொகுத்து வழங்குகின்றன.
இதற்கு மேலதிகமாக அரசியல் விவாதங்களும்;, நேர்காணல்களும் இடம்பெறுகின்றன. சில அரசியல்வாதிகள் திரைப்பட அல்லது தொலைக்காட்சி நாடக நடிகர்கள் போன்று ஜனரஞ்சகம் பெற்றுள்ளனர். இன்னும் சில அரசியல்வாதிகள் தம்மை நடிகர்கள் போன்று அலங்காரம் செய்து கொண்டுள்ளனர். மேடைகளில் பாடுகின்றனர். ஆடுகின்றனர். அண்மையில் மேதினம் இடம்பெற்ற போது வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது ஆதரவாளர்கள்  முன்னிலையில் சிலம்பாட்டம் ஆடினார். அமைச்சர் மேர்வின் சில்வா தனக்கான கல்லறையை இப்போதே கட்டித் தயாராக வைத்துள்ளார்.
 அதுமட்டுமா? நடிக நடிகைகள் தொடர்பில் கிசு கிசுக்கள் எழுவது போன்று எமது அரசியல்வாதிகளில் சிலர் தொடர்பாகவும் கிசு கிசுக்கள் உலாவருகின்றன.
அதுமட்டுமல்ல, சில அரசியல்வாதிகளில் சினிமாவிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தும் உள்ளனர். எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்  மறைந்த பிரபல சிங்களத்  திரைப்பட நடிகர் காமினி பொன்சேகாவுடன் இணைந்து சிங்களத் திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிக நடிகைகள் சிலரும் அரசியல் மேடையில் நடித்துள்ளனர். இல்லை குதித்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களாகவும்  தெரிவாகி உள்ளனர்.

இன்றைய அரசியல் சூழநிலையில் எமது நாட்டு  அரசியல்வாதிகள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும்   பொதுவாக மக்களுக்கு  வெறுப்பு இருந்த போதிலும், ஊடகங்கள் வாயிலாக  அவர்கள் தொடர்பில் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது மட்டும் குறையவில்லை.


 அரசியலில் விறுவிறுப்பான சில காட்சிகள்

அண்மைக்காலமாக எமது அரசியலில் விறுவிறுப்பான சில காட்சிகள் இடம்பெற்றுவிட்டன. மேலும் பல காட்சிகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளன.
மேல்  மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள், அது வெளிப்படுத்தியுள்ள எதிர்வு கூறல்கள் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. ஜெனீவா தீர்மானம் மேல்  மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் தமக்கு சாதகமாக அமையும் என்று எதிர்ப்பார்த்த அரசு ஏமாந்து போயுள்ளது.  ஆயினும், எதிர் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
  அதேபோன்று 'போர் வெற்றி' என்ற பிரமாண்டக் காட்சிகளை திரும்பத் திரும்பப் பார்த்து மக்கள் அலுப்படைந்துவிட்டனர். சீனா போன்ற நாடுகளின் உதவகளைப் பெற்று மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னால் கதாநாயகனுடன் மோதும் வில்லன் தோற்று போவது போன்று தோற்றுப் போய்விட்டன.
இதுபோதாதென்று, கசினோ விவகாத்தில் அரசாங்கம் ஆளும் தரப்பிற்குள்ளேயே சிலரது எதிர்ப்பை தேடிக்கொண்டுள்ளது. பங்காளிக் கட்சிகள், மற்றும் சிங்கள பௌத்த அடிப்டைவாதிகளின் ஆதரவை இழந்துள்ளது. சிறுபான்மை கட்சிகளினதும் நம்பிக்கையை இழந்துள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்;தவ மக்கள் மீது  பௌத்த  அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்துவதிலும் அரசாங்கம் பாராமுகமாகவுள்ளது. அல்லது தோற்றுப் போய்விட்டது. இதுவும்  இலங்கை அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2004  ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த  அல்லது கைகொடுத்த கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக அபாய மணியை எழுப்பியுள்ளன. அதேபோன்று 2005 ஆம் ஆண்டு இ;டம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்ய இந்தக் கட்சிகள் இரண்டும் பங்களிப்புச் செய்தன. இதேவேளை,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்சவும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கசினோ செயற்பாடு உள்ளடங்கிய வர்த்தமாணி அறிவித்தல் குறித்த சட்டமூலம் நிறை வேற்றப்பட்ட போது அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்த்து வாக்களித்தார். அந்த சட்ட மூலம் மீதான வாக்கெடுப்பில் அமைச்சர் விமல் வீரவங்சவும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க , அரசாங்கம் பிழையான பாதையில் பயணிப்பதாகவும், எனவே எதிர்காலத்தில் தீர்க்கமான தீர்மானம் ஒன்றை  எடுக்க வேண்டி ஏற்படலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
 இந்நிலையில்,அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்த வந்த கட்சிகள்  அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது தொடர்பில்  ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன  தெரிவித்துள்ள கருத்தைப் பார்ப்போம்.
ஆளும் ஐக்கிய சுதந்திர மன்னணி அரசாங்கத்தில் எவ்விதமான நெருக்கடிகளோ பிரச்சினைகளோ இல்லை. அரசாங்கம் மிகவும் பலமாகவும் ஸ்திரமாகவும் இருக்கிறது. பங்காளிக் கட்சிகள் விலகிச் செல்லும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் அரசாங்கத்தில் இல்லை.  அண்மையில் சட்ட மூலம் ஒன்று  நிறைவேற்றப்பட்ட போது  சில அமைச்சர்கள் சமூகமளித்திருக்கவில்லை. அவை குறித்த ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தினேஸ் குணவர்த்தன  தெரிவித்துள்ளார்.
 இந்நிலையில்,அரசாங்கத்தின்; செல்வாக்கு குறைந்து வருவதாகவும் எதிர்கட்சிகளின் பலம் அதிகரித்து வருவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்த விறுவிறுப்புக்; காட்சி தொடர்பான செய்தி  அல்லது  விளம்பரம் வெளிவந்துள்ளது.
ஆம், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும,; இதற்கு முன்னர் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தி பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மாத்திரமன்றி ஊவா மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்டவுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
திரைப்படங்களில் அடுத்து என்ன இடம்பெறுமோ என்று  ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்று, வாக்காளர்கள் அடுத்து எந்த தேர்தல் முதலில் நடைபெறும் என்று தற்போது, எதிர்பார்த்துள்ளனர்.

 அரசாங்கம் நாடாளுமன்ற தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலை முன்னதாக நடத்த நினைப்பது ஏன்?

அரசாங்கம் நாடாளுமன்ற தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலை  உரிய காலத்திற்கு முன்னதாக நடத்த நினைப்பது ஏன்? என்ற கேள்வி  எழுகிறது?
அரசாங்கத்தின்  செல்வாக்கு சரிந்து வரும் நிலையில்   மேலும் காலம் தாழ்த்தினால் அது தமக்கு பெரும் பாதகமாக அமைந்துவிடும் என்பதை அரசு அறியும்., ஐக்கிய தேசியக் கட்சி  விழித்துக் கொள்வதற்கு முன்னர், அல்லது சுதாகரித்துக் கொள்வதற்குள் அதுபோன்று,  எதிர்கட்சிகள்  மேலும் பலம் பெற்றுவிடுவதற்குள் தேர்தலை நடத்துவதே புத்திசாலித்தனமாகும். அதனால்தான் கள நிலவரத்தை அறிந்து அரசு தேர்தலை உரிய காலத்திற்கு முன்னர் நடத்த முடிவு செய்திருக்கலாம்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்தினால் நிச்சயமாக அது மிகப் பெரிய சவாலாக அமையும்; என்பதனால்,முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தீ;மானித்திருக்கலாம்.
ஆளும் தரப்பிற்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளதை  நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், எதிர்கட்சிகள் உற்சாகமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு அழுத்தங்கள்  என்றுமில்லாதவாறு அதிகரித்து வரும் நிலையில்  எமது நாட்டு அரசியல் ஆங்கில துப்பறியும் திரைப்படம் போன்று விறுவிறுப்பாக இருப்பதை  உணர முடிகிறது.
எது எப்படி இருந்த போதிலும்,  தேர்தல் தொடர்பாக நாளைய தினமே புதிய ஒரு திர்மானத்தை அரசு அறிவிக்கலாம். அல்லது தேர்தலை உரிய காலத்திற்கு முன்னர் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவிக்கலாம். அல்லது நாம் மேலே குறிப்பிட்டது போன்று  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு செய்யப்படலாம்.

விறுவிறுப்பும் திருப்புமுனையும் கொண்ட திரைப்படம் ஒன்றைப் பார்ப்பவர்கள் எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும்.  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்