பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Wednesday, June 4, 2014

முஸ்லிம்களின் பெருக்கத்தால் அச்சப்படும் பேரினவாதம் - தேசநேசன்

(இக்கட்டுரை 1-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)

முஸ்லிம் மக்கள் தொடர்பில் அதிக காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட அமைப்பாக பொதுபல சேனா அமைப்பு இருந்து வருவது யாவரும் அறிந்த பகிரங்கமான உண்மையாகும்.
அந்த அமைப்பு காலத்திற்குக் காலம் முஸ்லிம் இனத்திற்கும் இஸ்லாமிய சமயத்திற்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சண்டித்தனத்தையும் செய்து வருகிறது.
முஸ்லிமகளுக்கு  எதிராக பொதுபல சேனா அமைப்பு மேற்கொண்டு வரும் அநீதிகள், அடாவடித்தனங்கள் யாவும் தி;ட்டமிடப்பட்ட
செயல்களாகும் என்பதை பலரும்; நன்கு அறிவர்.
முஸ்லிம் மக்களின் சமய, கலாசார , மத விவகாரங்களில் கை வைத்த பொதுபல சேனா  பொருளாதார ரீதியிலும்  கைவைக்க ஆரம்பித்துள்ளதை அண்மைக்காலச் சம்பவங்கள் நன்கு வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை  சிங்கள மக்களின் எண்ணிக்கையைவிட நாட்டில் அதிகரித்து விடும் என்ற அச்சத்தை அந்த அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
2081 ஆம் ஆண்டில் சிங்களவர்களின் சனத்தொகையையும் மீறி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என பொதுபல சேனா அமைப்பு அச்சம்  வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவர் சமில லியனகே இது தொடர்பில் தெரிவித்துள்ள கருத்தை பார்ப்போம்.
நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 2040 ஆம் ஆண்டில் இந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனமாக மாற்றம் கண்டு விடுவார்கள் என்று சிலர் தெரிவிக்கின்றார்கள். என்றாலும,; இது தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி 2081 ஆம் ஆண்டில் சிங்களவர்களின் சனத்தொகையையும் மீறி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள்.
கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில்  அண்மையில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் வெளியீடான வங்சயக வினாசய அபிமுவ (அழிவுக்கான விளிம்பில் ஓர் இனம்) என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 சிங்கள இனம் அழிவடைந்து வரும் நிலையினை பௌத்த மக்கள் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. சனத்தொகையை அதிகரித்துக் கொள்வதற்கு இப்போதிருந்தே செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உருவாகி வரும் சவால்கள் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. கிழக்கில் தமிழ் இனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தமிழ் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, சந்திவேலி,கிரான், கோரகல்லிமடு பிரதேசங்களில் தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறி வருகின்றன.
வடக்கிலும் முஸ்லிம்கள் தமது இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வடக்கில் விதவைகளாக உள்ள தமிழ் பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளும் குழந்தைகளை முஸ்லிமாகவே வளர்க்கிறார்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவர் சமில லியனகே தெரிவித்துள்ளார்.
 பொதுபல சேனாவுக்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருக்தும் அதேவேளை, அண்மைக்காலமாக தமிழ் மக்களின் மேல் கருணையும் அக்கறையும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.
இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு எதிராக இந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற போது, அதில் பங்குபற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து அதை உறுதிப்படுத்துகிறது.
'கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.  முஸ்லிம்களால் சிங்கள இனத்துக்கு நாள்தோறும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குருநாகல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் சிங்களப் பெண் மீது புரிந்த பலாத்காரம், அளுத்கம வர்த்தக நிலை ஊழியரின்  செயல்கள் என்பனவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில் மியான்மரில், முஸ்லிம் தம்பதியர் இரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மியான்மரின் மேற்கு பகுதியில் பங்களாதேஷ எல்லையில் ராக்கின் மாகாணம், ரோகியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் வன்முறைகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீடுகளை இழந்தனர்.
கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு நடத்திய விசாரணையில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கமே மதக் கலவரம் ஏற்பட காரணம் என தெரியவந்தது. இந்த மாகாணத்தில், பௌத்த மதத்தினரைவிட முஸ்லிம்களின் மக்கள் தொகை 10 மடங்கு அதிகம் இருப்பதால் தான் இந்த கலவரம் உருவானது என்று அக்குழு தெரிவித்தது.
மியன்மாரின் நிலையை  எமது நாட்டிலும் ஏற்படுத்தவே பொதுபல சேனா உட்பட பேரினவாத அமைப்புக்ள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன என்;பதை இதன் மூலம் ஊகிக்க கூடியதாக  உள்ளது.
முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பொறுக்க முடியாத பேரினவாதிகள்  தமது இனத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் தமது மக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக சகோதர இனத்தின் மீது பொறாமை உணர்வுடனும், வெறுப்புடனும் நடந்து கொள்ளவது பௌத்த சிந்தனைக்கு பொருந்தாது.
 இதன் காரணமாகத்தான் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா சிங்கள மக்களுக்கு பின்வருமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
சிங்கள குடும்பங்கள் குறிப்பிட்ட தொகை குழந்தைகளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றமை வருத்தமளிக்கிறது. சிங்கள மக்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்வதால் எதிர்காலத்தில் எமது இனம் இல்லாது போய்விடும். குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு மன்னர் காலத்தில் கூடக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு சிங்களவர்களுக்கு மாத்திரம் ஆலோசனை வழங்கப்படுவது கவலை அளிக்கின்றது. அதனால், இலங்கையில் நடைமுறையில் இருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கூடியளவு பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்குத் தேவையான பால்மா மற்றும் ஆடைகளை வழங்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்று  கம்பஹா, கிரிந்திவெல பிரதேசத்தில் 8 குழந்தைகளைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு உதவிகள் வழங்குவதற்குச் சென்றிருந்த சமயம் அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு கவலையுடன் தெரிவித்துள்ளார்.
ஆயினும், அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது. ஊக்குவிக்கிறது. தாதியர்கள், மருத்துவிச்சிமார்கள், வைத்தியர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுகின்ற தாய்மார்களுக்கு  மேலும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்குகின்றனர்.
இ.வ்வாறு அரசாங்கத்தின் பேச்சைக் கேட்டு சிங்களப் பெண்கள் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கெர்ள்வோம். அப்படியாயின், பொதுபல சேனா அரசாங்கத்தின் மேல்தான் குற்றச்சாட்டை தெரிவிக்க வேண்டும். அரசாங்கத்தடன் பேச்சுவார்த்தை நடத்தி சிங்கள தாய்மார்கள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்.

முஸ்லிம் மக்கள் ஏன் அதிக பிள்ளைகளை பெறுகின்றனர்?

இஸ்லாம் என்பது ஒரு பரிபூரண வாழக்கை முறையாகும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது என்பதை இஸ்லாம் விளக்கமாக கூறியுள்ளது.
புனித அல்குர்ஆனில் இறைவன்பின்வருமாறு குறிப்பிடுகின்றான்: 'நீங்கள் வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். நாமே அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றோம். அவர்களை கொலை செய்வது நிச்சயமாக மாபெரும் குற்றமாகும்.' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

முஸ்லிம்கள் ஏகத்துவக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். அவர்கள் ஏக இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இறைவனே உணவையும் பொருளதார வளத்தையும் , அபிவிருத்தியையும் தருபவன் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனால்தான் உணவுக்காகவும் வறுமைக்காகவும் பயந்து முஸ்லிம்கள்  குடும்பக்கட்டுப்பாடு செய்வதில்லை. அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்வற்கு அல்லது குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம்.
 பொதுவாக முஸ்லிம்கள் குழந்தை பெறுகின்ற விடயத்தில் அச்சம் கொள்வதில்லை. அதாவது, பொருளாதார கஸ்டங்கள் அல்லது வறுமையை கண்டு பயந்து குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பெறுவதில்லை.  தமது பிள்ளைகளை தாங்களேதான் வளர்த்து அவர்கள் ஆளாக்கிறார்கள். குழந்தைகளை அவர்கள் செல்வங்களாகவும் அருளாகவும் கருதுகிறார்கள். இறைவனே சகலருக்கும் உணவளிப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
முஸ்லிம்கள் மார்க்கம்; சொல்வதை பின்பற்றுவதால்தான்  'நாம் இருவர் நமக்கொருவர்' என்றில்லாமல் 'நாம் இருவர் நமக்கு பலர்' என்று குழந்தை செல்வத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமது இனம் நாட்டில் குறைந்து போய்விடும், முஸ்லிம் இனம் பெரும்பான்மை இனமாக மாறிவிடும் என்ற அச்சம் தோன்றினால, சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை  பொதுபல சேனா மேற்கௌ;ள வேண்டுமே தவிர முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதற்கான  செயல்களில் ஈடுபடக் கூடாது.

பிரச்சினைகள் இன ரீதியில் பார்க்கப்படல்

இரண்டு தரப்பினருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை  இன ரீதியில் பார்க்கின்ற நிலையும் விமர்சிக்கின்ற நிலைமையும் பேரினவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  முன்னர் அந்த நிலை மிகக் குறைவாகவே காணப்பட்டது. தற்போது  இருவருக்கு இடையில் ஏற்படும் காதல் பிரச்சினை, வியாபாரப் பிரச்சினை, வாய்த் தர்க்கங்கள், பாலியல் வல்லுறவு, தகாத தொடர்பு  என சகல சிறிய, பெரிய பிரச்சினைகளையும், இனச்சாயம் பூசிப் பார்ப்பதையும் பேசுவதையும், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதையும்  அவதானிக்க முடிகிறது.
;;முஸ்லிம்களால் சிங்கள இனத்துக்கு நாள்தோறும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குருநாகல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் சிங்களப் பெண் மீது புரிந்த பலாத்காரம், அளுத்கம வர்த்தக நிலை ஊழியரின்  செயல்கள் என்பனவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்  என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து இதனை வெளிப்படுத்துகிறது.
எது எப்படி இருந்த போதிலும் பேரினவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால், அது அரசாங்கத்தின் இருப்புக்கே பாதகமாக அமைந்துவிடும். சில பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கு அவமானத்தைத்  தேடித் தருவதில்லையா? பிரச்சினைகளை உருவாக்கித் தருவதில்லையா? அதுபோலத்தான்.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்