(இக்கட்டுரை 22-6-2014 அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
எமது தேசம் மீண்டும் ஒரு முறை
செந்நீரால் குளித்துக் கொண்டது.
தமிழ் மக்களுக்கு 'கறுப்பு ஜுலை' (1983) போன்று முஸ்லிம்
மக்களுக்கு 'கறுப்பு ஜுன' வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்
மூன்று தினங்களுக்கு மேலாக அளுத்கம, பேருவளை, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு
எதிரான இன வன்முறைகளினூடாக எமது நாடு சர்வதேச ரீதியில் மீண்டும் ஒரு தடைவை அபகீர்த்தியை தேடிக் கொண்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள், அநியாயங்கள். அட்டூழியங்கள், கொடுமைகள் என்பன ஏற்கனவே எமது நாட்டுக்கு எதிராக
அபகீர்த்தியை தேடித் தந்துள்ளது. இது தவிர இலங்கையில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்
விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை விசாரணைக்
குழுவை நியமித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு வருட காலமாக
முஸ்லிம் மக்களுக்கு பேரினவாதிகளால் ஏற்படுத்தப்பட்டு வரும் பலவேறு வகையான
இம்சைகளினதும் மனித உரிமை மீறல்களினதும்
கொடிய வடிவம் கடந்த தினங்களில் அரங்கேறியது.
இப்பத்தியை எழுதும் போவரை இந்த வன்முறை காரணமாக நான்கு பேர் மரணமாகியுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர். சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. முஸ்லிம்களின் பல
கோடிக கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் உடைமைகளும் அழிக்கப்பட்டுள்ளன.
பலரது வீடுகள் , வியாபார நிலையங்கள், வாகனங்கள் தீ வைத்து
கொளுத்தப்பட்டுள்ளன. உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. திருடிச்
செல்லப்பட்டுள்ளன.
. இந்த வன்முறைச் சம்பவம்
திடீரென்று ஏற்பட்டதல்ல. நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. வெளியிடங்களில்
இருந்து வந்தோரே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வன்முறைகள் ஏற்படுவதற்கு முன்னதாகவே
பொலிஸ் மா அதிபருக்கு முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தரப்பிலிருந்து எழுத்து
மூலமாக அறியத்தரப்பட்டது.
பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்
பொதுபல சேனாவினால் 15-6-2014 அளுத்கமையில் நடாத்தவுள்ள
கூட்டம் தொடர்பில் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் இணைந்து கையொப்பமிட்ட கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு
கையளித்துள்ளனர். இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
ஸ்ரீ லங்கா முஸ்லிம்
கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ., இலங்கை வக்பு சபை மற்றும்
கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியன ஒப்பமிட்டுள்ளன.
அளுத்கமையில் கடந்த 12 ஆம் திகதி சம்பவத்துக்குப்
பின்னர் மோசமான ஒரு கள நிலவரத்தில் இது போன்ற ஒரு கூட்டம் நடைபெறுவது
ஆரோக்கியமானதல்ல என்பதை இவ்வமைப்புக்கள் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு
வந்துள்ளன. இக்கூட்டத்தின் போது முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பளிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாக தேசிய ஷூரா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'அளுத்கமை நகரில்
பொதுபலசேனாவினர் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கும் ஊர்வலத்திற்கும் அனுமதி வழங்க
வேண்டாம் என தேசிய ஷூரா சபையும் சிவில் சமூக தலமைகளும் அரசியல் தலைமைகளும்
உலமாக்களும் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு வேண்டியிருந்தன. சுமுக நிலைக்கு
இவை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும்
அந்த வேண்டுகோள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது கவலைகுரியது.
முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் போது பொலிஸார் என்ன செய்தனர்?
முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனச்சுத்திகரிப்பிற்கு பொலிசார் பூரண ஒத்தாசை வழங்கியதாகவும்,
ஊரடங்கு என்ற பெயரில் முஸ்லிம்களின் கைகளைக் கட்டி
விட்டு சிங்கள காடையர்கள் களத்தில் முழு மூச்சாய்
நிறன்றதாகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது பாதுகாப்பு படையினர் நின்றிருந்த
வேளையிலேயே மேற்படி தாக்குதல் இடம்பெற்றதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலையை தனிப்பதற்கு பொலிஸாரும்
அதிரடி படையினரும் பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை அங்கு இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு
பொலிஸாரே காரணம் என மேல்மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் தெரிவித்துள்ளார்.
மதத் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்துவதற்காக கடந்த இரண்டு மூன்று தினங்களாக
ஒலிபெருக்கி மூலம் பிரதேசமெங்கும் அழைப்பு விடுத்தனர். இதன்போது இனமுறுகலை
ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுவதை பாதுகாப்பு பிரிவினர் தடுத்திருக்கலாம். ஆனால்
அவை கண்டுகொள்ளப்படவில்லை. தாக்குதல்களை நடத்தும் போது பொலிஸார் வெறுமனே
பார்வையாளர்களாகவே இருந்தனர். கடும்போக்காளர்களை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
வெறுமனே பொலிஸாரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள்
முஸ்லிம்களை பாதுகாப்பதற்கோ இனவாதிகளை தடுப்பதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணசபை உறுப்பினருமான அஸாத் ஸாலி இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரையும்
அரசாங்கத்தையும் குற்றம் சாட்டியுள்ளார்
'அளுத்கம பகுதியில் தேரர் ஒருவரை முஸ்லிம் ஒருவர் தாக்கினார் என கூறப்படுவது
அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவே இல்லை. எனினும்,
திட்மிட்ட
அடிப்படையில் கதைசோடிக்கப்பட்டு தனக்கு தேவையானதை கலகொட அத்தே ஞானசார தேரர்
தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார். புத்த பகவானின் போதனைகளுக்கு எதிரான வகையிலேயே
ஒரு சிலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதேவேளை,
பொலிஸ் ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்ட பின்னர்தான் கடைகளும், வீடுகளும்
எரிக்கப்பட்டுள்ளன. தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே,
இது தொடர்பில்
விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசு ஆணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும். அளுத்கம
சம்பவம் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதால் அரசால் நழுவிச் செல்ல முடியாது.
இதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும் என்று தேசிய ஐக்கிய
தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார்.
இது யாருடைய நாடு?
இந்த நாடு ஒர் இனத்துக்கு மட்டும் சொந்தமான நாடு அல்ல. சகல இன மக்களுக்கும்
சமுகங்களுக்கும் சொந்தமான நாடாகும் என்பதை
பேரினவாதிகள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இந்த நாட்டை
சிங்களவர்களுக்கு மட்டு:மே உரிய நாடாகவும், சிங்கள பௌத்த மக்களுக்கு
மட்டுமே இங்கு சகல உரிமைகளுடன் வாழும் உரிமை இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு எனவும்,
இலங்கையில் இருப்பது
சிங்கள இராணுவம், சிங்கள பொலிஸார் எனவும் பொது பலசேனா அமைப்பின் பொதுச்
செயலாளர் ஞான சார தேரர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று,
இந்த நாடு சிங்கள
பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை
பேரினவாதிகளும் மற்றும் சிங்கள அடிப்படைவாதிகளும் பகிரங்கமான முறையில் தெரிவித்து வருகின்றனர்.
'சிங்களவர்களுக்காக வேண்டி அரசியல் மேடைகளில் ஏறும் சிங்கள சக்கிலி அரசியல்
தலைவர்கள், எம்மை இனவாதிகளாகவும் வர்க்க வாதிகளாகவும்,
மதவாதிகளாகவும்
கூறிவருகின்றனர். இப்போது சொல்கின்றோம் கேளுங்கள். நாம் மதவாதிகள் தான்,
இனவாதிகள் தான். இந்த
மடையர்களுக்கு நாம்; சொல்லவிருப்பதெல்லாம்,
இன்று நடைபெறும் இந்த
நிகழ்வு ஒரு சம்பவத்துடனான முற்றுப் புள்ளி அல்ல. மாறாக,
இது எமது
செயற்பாட்டின் ஆரம்பம்' ஆகும். என்றும் ஞான சார தேரர்
தெரிவித்துள்ளார்.
சர்வதேசம் கண்டனம்
இதேவேளை, அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு
எதிரான சம்பவங்களுக்கு சர்வதேச நாடுகள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை கண்டித்து
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
சட்ட ஒழுங்கை பேணி பொதுமக்களின் உயிர்களையும்,
வழிபாட்டு
ஸ்தலங்களையும், சொத்துக்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம்
கேட்டுக்கொள்வதாகவும். தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்கு
பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
வன்முறைகளை தவிர்த்து,
பொறுமை காத்து,
சட்ட ஆட்சியை மதித்து
நடக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக கொழும்பிலுள்ள அமெரிக்க
தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்
கூறிப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கமவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை கண்டித்துள்ள
கனடா,
சகல சமூகங்களினதும்
பாதுகாப்பை அதிகாரத்தில் உள்ளவர்கள் உறுதிபடுத்த வேண்டும் என்றும்
கேட்டுகொண்டுள்ளது.
இதேநேரம், இலங்கை வரும் தம் நாட்டவர்களுக்கும் சுற்றுலாப்
பயணிகளுக்கும் அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய கலவர
சூழ்நிலைப் பிரதேசங்களைத் தவிர்க்குமாறும் அவுஸ்திரேலியா தம் நாட்டவர்களைக்
கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோன்று,
ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அளுத்கமையில் நடந்த வன்செயல்கள் குறித்து அதிர்ச்சி
தெரிவித்திருக்கிறார். இந்த வன்செயலை
தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
வன்செயலை தூண்டிய
வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும் எனவும்,
அனைத்து
சிறுபான்மையினரையும் அது பாதுகாக்க வேண்டும் எனவும்,
இந்தச் சம்பவங்களுக்கு
காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்; ஆணையர் தனது அறிக்கை கூறியுள்ளார்.
இந்த வன்;முறைச் சம்பவங்கள்
தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய
நாடுகள் சபையின்; பொதுச் செயலாளர் பான் கீ மூன் , சகல இலங்கை மக்களின்
பாதுகாப்பையும் உறுதி செய்யமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொத்துக்களுக்கு பாரிய இழப்பு
அளுத்கம, பேருவளை, களுத்துறை , ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்ட வன்முறைகளின் விளைவாக
முஸ்லிம்களின் பொருளாதரத்துக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அது பல கோடி
ரூபாக்களாகும். இழப்புக்கள் தொடர்பாக மதீப்பீடு செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட
நஷ்டம் சரியாகத் தெரிய வரும்.
பேரினவாதிகள் முஸ்லிம்களின்
பொருளாதாரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துவது புதிதல்ல. இதற்கு முன்னரும்
முஸ்லிம்களுக்கு சொந்தமான பிரபல ஆடை விற்பனை நிலையங்கள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளன. அண்மைக் காலத்திலும் முஸ்லிம்களின் கடைகள் பல இடங்களில் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களை பொருளாதார ரீதியில் வீழ்த்த வேண்டும் என்பது
அவர்களின் பிரதான திட்டமாகும்.
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதும் அவர்களது உரிமைகளை
நிலை நாட்ட வேண்டியதும் பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையும் பொறுப்புமாகும்.
தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக தமது வாக்கு வங்கியை தக்க
வைத்துக் கொள்வதற்காக அல்லது அதிகரித்துக் கொள்வதற்காக பொது பலசேனா போன்ற
அமைப்புக்கள் ஊடாக நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாக
அரசாங்கத்திற்கு எதிராக பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதனை மறுக்கும் வகையில் அரசாங்கம்
ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.
ஞான சார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?
அளுத்கம, பேருவளை ,
களுத்துறை ஆகிய
பிரதேசங்களில் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளிற்கு காரணமான பொதுபல சேனா
அமைப்பின் பொதுச் செயலாளர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவருக்கு எதிராகவும்
அவரது அமைப்பிற்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ஞானசார தேரரின் பேச்சும் நடத்தைகளும்;
பௌத்த துறவி
ஒருவருக்கு பொருத்தமாக விதத்தில் அமையவில்லை. அவர் பாதாள உலகத் தலைவர் போன்று
அல்லது சர்வாதிகார அரசியல் தலைவர் போன்று இருப்பதாக முஸ்லிம் தரப்பினரால்
மாத்திரமல்ல சிங்கள பௌத்த மக்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
ஞானசார தேரர் போன்று முஸ்லிம். இந்து அல்லது கிறிஸ்;தவ மதத் தலைவர்கள் நடந்து கொண்டால் சட்டம் தனது கடைமையை செய்யாது விடுமா? பொது பலசேனா , ராவணா பலய போன்ற பௌத்த அமைப்புக்கள் போன்று முஸ்லிம். இந்து
அல்லது கிறிஸ்;தவ மத அமைப்புக்கள் நாட்டில் செயற்பட்டால் சட்டம் தனது கடைமையை
செய்யாது விடுமா?
அப்படியாயின், அளுத்கமவில் இடம்பெற்ற
அசம்பாவித சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கு
உரிய தண்டணை வழங்கப்படும் என்று
ஜனாதிபதி தனது டுவிட்டர்
தளத்தில் குறிப்பிட்டுள்ளது
செயற்படுத்தப்பட வேண்டும்.
ஜூன் 15ஆம் திகதி பொதுபல சேனா
அமைப்பு நிகழ்த்திய உரைகளின் பிரதிபலனாகவே இனவாதம் தூண்டப்பட்டதாக அளுத்கம மற்றும்
பேருவளை சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசேட
உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிலரின் கைகளுக்கு சட்டத்தை எடுக்க இடமளித்து விட்டு வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களின் ஊர்வலங்கள்,
ஆர்ப்பாட்டங்கள் இடம்
பெறும் போது அவை பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அரசாங்கம், நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்று அவற்றை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொது பலசேனாவின் பொதுச் செயலாளரின் மத உணர்வுகளைத் தூண்டும் பேச்சே அளுத்கம
பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு காரணம் என அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி பிபிசி
தமிழ் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு
அரசியல்வாதிகள் பொது பலசேனாவின் பொதுச் செயலாளரின் பேச்சே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்று கூறியுள்ள போதும் பொது பலசேனாவின்
பொதுச் செயலாளருக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை என்ன என்பதை
பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள.;
இதேவேளை, நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலகங்களை
தூண்டிவிடும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உட்பட அதன்
சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களை சட்டத்தின் முன்
நிறுத்தி உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு இனிமேலும்
அரசாங்கம் தாமதிக்காது முன்வராவிட்டால்,
அரசாங்கத்தின் மீது
தமது மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்து விடுவர் என நீதியமைச்சரும் முஸ்லிம்
காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள ஈரான்,
கட்டார்,
ஆப்கானிஸ்தான்,
குவைத்,
பாகிஸ்தான் மற்றும்
மலேசியா ஆகிய ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள்; கடந்த திங்கட்கிழமை இரவு அமைச்சர்
ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடிய போது நாட்டின் பல
பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச்
சம்பவங்கள் தொடர்பில் தமது நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்
என தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இப்பிரச்சினைகள் தொடர்பில் தமது நாடுகளின் தலைவர்கள்,
இலங்கை ஜனாதிபதி
மற்றும் அரசாங்க உயர் மட்டத்தினருடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு
தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சர் ஹக்கீமிடம் அந்த தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன், எமது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்டேன.; இந்த அரசாங்கத்தில் தான் இருக்க வேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறேன் என்று நீதி அமைச்சர்
ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அவர்
நிச்சயமாக அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார் என்பதை யாவரும்; அறிவர்.
அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள்,
பாராளுமன்ற
உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு
ஏற்பட்டுள்ள இந்த அநீதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கை எடுக்க
வேண்டும். இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த
வேண்டும். அதற்காக தமது பதவிகளை தூக்கி எறிய தயங்கக் கூடா.து இல்லையேல்;, மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தை எதிர்வரும் தேர்தல்களில்
புகட்ட வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக அளுத்கம, பேருவளை , களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச்
சம்பவங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்கு அரசாங்கம்
நஷடயீடு வழங்க வேண்டும் குற்றம் புரிந்தவர்கள் ,
தூண்டியவர்கள்
கண்டறியப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட வேண்டும்.
கடந்த புதன்கிழமை ஜனாதிபதி பேருவளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது உடைக்கப்பட்ட வீடுகள் ,
வர்த்தக
நிலையங்கள் கட்டிக் கொடுக்கப்படும் எனவும்
, உடைமைகளுக்கு நஷ்டயீடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். புhதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான வகையில் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டியது
அவசியமாகும். இழந்த உயிர்களை திருப்பி
கொடுக்க முடியாது. ஆனால் , ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நஷ்டயீடு வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் நீதி நிலை நிறுத்தப்படுமா? அரசாங்கமே செயல் மூலமாக
இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்