பெனர்

கவிதை

புகைப்படம்

செய்தி

கட்டுரை

Thursday, February 13, 2014

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்கு விமோசனமும் நன்மையும் கிடைக்கும் - மேல் மாகாண சபையின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளர் கார்த்திகேசு விக்னேஸ்வரம்


நேர்காணல்: எம்.இஸட்.ஷாஜஹான்

(வத்தளை - மாபொல முன்னாள் நகர சபை உறுப்பினரும்> ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட பிரதான செயலாளரும்> மேல்மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளருமான கார்த்திகேசு விக்னேஸ்வரம் 'தமிழ்த் தந்திக்கு' வழங்கிய விஷேட செவ்வி. 9-2-2014 அன்று பிரசுரமானது)

கேள்வி : நீங்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு சென்றீர்கள்?

பதில்: ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மணோ கணேசன்தான் இதற்கு காரணம். அவரது அரசியல் செயற்பாடுகளால் கவரப்பட்டே அவரது கட்சியில் இணைந்து கொண்டேன். தமிழ் மக்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பவர் மணோ கணேசன். அவர் பதவிகளுக்கும் பணத்திற்கும் விலை போகாதவர். சகல இன மக்களுக்கும் உதவி புரிபவர். மக்களின்  குரலாக ஒலிப்பவர். துணிந்து செயற்படுபவர். இவை என்னை கவர்ந்தன. அதன் காரணமாக அவரது கட்சியில் சேர்ந்தேன்.

கேள்வி :  நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வந்த பிறகு என்ன வித்தியாசத்தை  காண்கிறீர்கள்?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையில் மிகப் பெரும் கட்சியாகும். அக்கட்சி சகல இனத் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கிய கட்சியாகும். அது சகல இனத்தவர்களதும் கட்சியாகும். ஆயினும்> காலப் போக்கில்
விகிதாசார தேர்தல் முறையின் கீழ் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக அது ஒரு இனத்திற்கு சார்பாக உருவாக்கப்பட்ட கட்சி போன்று ஆகிவிட்டது.


உதாரணமாக. மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமாயின் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற வேண்டும். கம்பஹா மாவட்டத்தில் பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்ட தமிழர்கள் எவரும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விருப்பு வாக்குளை பெறவில்லை.  பெரும்பான்மை கட்சிகளின் சார்பில் வத்தளையில் தமிழர் ஒருவர் போட்டியிட்டால் நீர்கொழும்பில் உள்ளவர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள.; நீர்கொழும்பில் உள்ள ஒருவர் போட்டியிட்டால் வத்தளையில் உள்ளவர்கள் வாக்களிக்கமாட்டார்கள். ஆனால்> ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் தனித்து போட்டியிட்டால் எல்லோரும் எமது கட்சிக்கு வாக்களிப்பார்கள்.
நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது வாடகை வீட்டில் இருப்பது போன்றும்ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வந்த பிறகு சொந்த வீட்டில் இருப்பது போன்றும் உணர்கிறேன்.
இந்த தேர்தலில் எமது கட்சியின் சார்பில் 43 வேட்பாளர்கள் பல தொகுதிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் மணோ கணேசனுக்காகவும் கட்சிக்காகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காகவும் மக்கள் எமது கட்சிக்கு அமோக ஆதரவை தெரிவிப்பர்.

கேள்வி :  கம்பஹா மாவட்டத்தில்  எத்தனை தமிழ் மக்கள் உள்ளனர்? இதில் எத்தனை பேர்  வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்?

பதில்:  கிட்டத்தட்ட 98  ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களில் 68 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் 35 முதல் 40 ஆயிரம் பேரே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர். வத்தளையில் அதிக எண்ணிக்கையான தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இரண்டாவதாக நீர்கொழும்பிலும் மூன்றாவதாக கட்டானையிலும் அதிக எண்ணிக்கையான  தமிழ் வாக்களார்கள் இருக்கின்றனர். கம்பஹாவில் இரண்டு ஆசனங்களை எமது கட்சி  எதிர்பார்க்கிறது.

கேள்வி :  மேல் மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் எவை?

பதில்:  கல்வி தொடர்பான  குறைபாடுகளே  பெரும் பிரச்சினைகளாகும்.  உதாரணமாக> கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகள் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் மாகாண சபையில் தமிழ் பிரதிநிதி;துவம் இல்லாமையே மாகாண தமிழ் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமைக்கு காரணமாகும். பெரும்பான்மை இன பிரதிநிதிகள்  தமிழ் பாடசாலைகளுக்கு உதவி செய்வதில் அக்கறை காட்டுவதில்லை. தமிழ் பிரதிநிதித்துவமே அதனை செய்யும்.
கல்வப்p பிரச்சினைகள் போன்று மேலும்; பல பிரச்சினைகள்  உள்ளன. தற்போது தமிழ் மக்களைப் போல் முஸ்லிம் மக்களும் > கத்தோலிக்க> கிறிஸ்தவ சிங்கள மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர.; இந்த அரசாங்கத்தில் சகல இன மக்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன.
சகல மக்களுக்காகவும் குரல் கொடுக்கும்  மணேகணேசனின்  ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிப்பது சிறுபான்மை மக்களுக்கு சிறந்த பாதுகாப்பாக அமையும்.

கேள்வி :  யுத்த வெற்றியின் பின்னர் நாட்டு மக்களுக்கு விடுதலையும் சுதந்திரமும்  கிடைத்துள்ளதாகவும், தமிழ் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு வருவதாகவும்   ஆளும் தரப்பினரால் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில் உங்களது கருத்து யாது?

பதில்:  யுத்த வெற்றியின் பின்னர் தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. 13  ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலேயே  தமிழ் மக்களுக்கு விமோசனமும் நன்மையும் கிடைக்கும்.
இன்றும் தமிழ் மக்கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்படுகின்றனர். தமிழர்களுக்கான சம உரிமை என்பது பேச்சளவிலேயே உள்ளது.
உதாரணமாக கம்பஹா மாவட்டத்தில் களனி கல்வி வலயத்தில் உள்ள சென். ஹேன்ஸ்  மகளிர் கல்லூரி சிங்களம்> தமிழ் என இரண்டு  மொழிப் பிரிவுகளாக இயங்குகிறது. அங்கு தமிழ்  மொழிப்பிரிவு பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகிறது. அதேபோன்று,  வத்தளை சென் அந்தனீஸ் கல்லூரியில் தரம் ஆறு முதலே  தமிழ் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும.; புதிய பாடசாலைகள் கட்டப்பட வேண்டும். கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில தமிழ் பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும்.

கேள்வி : நாட்டு மக்களின்  இன்றைய பொருளாதார நிலை பற்றி ஜனநாயக மக்கள் முன்னணி என்ன கூற விரும்புகிறது?

பதில்: அரச சார்பான கட்சிகளும் உறுப்பினர்களும் மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறியே  ஆட்சிக்கு வருகின்றனர். பின்னர் அதிக வரிகளை அறவிட்டு மக்களை பொருளதார துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர். இந்த வரிகள் குறைக்கப்பட வேண்டும்.
மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிப்பினைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை. கழுதையின் மேல் சுமைகளை ஏற்றுவது போன்றுதான் அரசாங்கம் வரிகளைத் தொடர்ந்து சுமத்தி வருகிறது.
அதிகரித்தது வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக மக்கள் முன்னணி பல தடைவைகள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மக்களுக்காக குரல் கொடுத்துள்ளது. மக்கள் இது தொடர்பாக நன்கு சிந்தித்து தமது வாக்குபலத்தை பிரயோகிக்க வேண்டும்.

கேள்வி : எதிர்வரும்  மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம் பெறவுள்ள   ஐ.நா மனித உரிமை பேரவையின் பின்னர் இலங்கைக்கு எதிராக  பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படும் எனக் கருதுகிறீர்;;களா?

பதில்: பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்படலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்பட்டால் சகல மக்களும் பாதிக்கப்படுவர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடை முறைப்படுத்தினால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
எனவே, சர்வதேசத்திற்கு  கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

கேள்வி : மாகாண சபை தேர்தலின் பின்னர் வெற்றி பெறுகின்ற கட்சியுடன் உங்களது கட்சி கூட்டு சேறுமா?

பதில்: அதை எமது தலைவர் தீர்;மானிப்பார். கடந்தகால  தேர்தல்  முடிவுகளின் அடிப்படையில் கூறுவதாயின். இறுதியாக நடைபெற்ற கொழும்பு மாநகர சபை தேர்தலில்  எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தது.  எமது கட்சியின் உதவியுடனேயே ஐக்கிய தேசியக் கட்சி  கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைத்தது. மாகாண சபை  தேர்தல் முடிவின் பின்னர் எமது தலைவர் அது தொடர்பாக முடிவு எடுப்பார்.


கேள்வி : நடைபெறவுள்ள மேல் மாகாண சபை தேர்தலில் உங்களது கட்சியை சேர்ந்த எத்தனை பேர் மாகாண சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: கொழும்பு மாவட்டத்திலிருந்து நான்கு உறுப்பினர்களும்> கம்பஹா மாவட்டத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களுமாக மொத்தமாக ஆறு பேர்  தெரிவு செய்யப்படுவர் என எதிர்பார்க்கிறேன்.

கேள்வி : தமிழ் மக்களின் வாக்குகளை மட்டுமா உங்கள் கட்சி எதிர்பாக்கிறது?

பதில்:  இல்லை. சகல இன் மக்களும் எமது  கட்சிக்கு வாக்களிப்பார்கள். ரத்துபஸ்வல தண்ணீர் பிரச்சினையின் போது எமது தலைவர் மணேகணேசன் அந்த மக்களுக்காக குரல் கொடுத்தார். முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போது அதற்காகவும் குரல் கொடுத்தார். கோயில்கள் உடைக்கப்பட்ட போதும் தேவாலயங்கள் தாக்கப்பட்ட போதும் அதற்காக குரல் கொடுத்தார். விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டங்கள் பல நடத்தினார். இவ்வாறு பேதங்கள் பாராது சகல இன மக்களுக்காகவும். நாட்டு மக்களுக்;காகவும் எமது கட்சி குரல் கொடுத்துள்ளது.  போராட்டங்களை நடத்தியுள்ளது.  எனவே, மக்களும் நன்றி உணர்வுடன் எமது கட்சிக்கு வாக்களிப்பர்.
நடைபெறவுள்ள மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு. கம்பஹா ஆகிய இரண்டு மடாவட்டங்களிலும் எமது கட்சி சகல இனங்களையும் சேர்ந்த வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளது.

கேள்வி :  இறுதியாக  வாக்காளர்களுக்கு என்ன   சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:  அரசியலை வியாபாரமாக்கிவிட்டார்கள். அரச சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு தேர்தல் காலங்களில் அவற்றில் சிலவற்றை மக்களுக்கு தேர்தல் இலஞ்சமாக வழங்குகிறார்கள். ஆகவே. மக்கள் இதுபற்றியும் சிந்திக்க வேண்டும.;
கம்பஹா மாவட்டத்தில் உள்ள தமிழ் வாக்காளர்கள் யாவரையும்  பதிவு செய்வதன் மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பலாம். இது எமது தலைவரின் இலக்காகவும் உள்ளது.
எமது கட்சியில் இளைஞர் ஒன்றியம். மகளிர் அணி என இரண்டு பிரிவுகள் உள்ளன என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்